சென்ற இதழில்: தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைநிலத்து வழியே சென்ற செவிலிக்கு முனிவர் ஒருவர் சொன்ன அறிவுரை கேட்டோம். அங்கே அவர் "கற்பினாளுக்கு வருந்தாதே; தன் மனத்துட் புகுந்த சிறந்தவனோடு செல்வதுதான் சிறந்தது" என்று சொன்னதையும் கண்டோம்.
இதனால் சில வினாக்கள் எழுகின்றன: தந்தை தாயிடம் சொல்லாமல் கூடத் தன் காதலனோடு செல்வது எப்படித் தகும்? தன்னுள்ளத்தில் புகுந்தவனை மணப்பதைத் தடுக்கும் தந்தை சொல்லை அவள் ஏற்காவிடினும் பெற்றோரே இல்லாமல் திருமணச் சடங்கு நடத்துவது எப்படித் தகும்? அது சரியானாலும், தெரிந்தோர் யாருமே இல்லாமல் காதலன் காதலி மட்டும் திருமணம் செய்துகொள்வது எப்படி அடுக்கும்? அப்படிச் செய்யும் திருமணம் ஒரு திருமண நிகழ்ச்சியா?
இவையெல்லாம் வினவ வேண்டிய வினாக்களே. அவை நம் பண்பாட்டை உண்மையாகவே உணர உதவும். தமிழ் இலக்கியம் இதற்கான தீர்வை எவ்வாறு அளிக்கிறது? தந்தையைப் பற்றிச் சொல்லும்பொழுது அவர்க்குத் தேவையான ஒழுக்கத்தையும் உயர்வையும் சேர்த்தே திருக்குறள் பேசுவதைச் சென்ற இதழில் பார்த்தோம். தாயைச் சொல்லும்போதும்
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (திருக்குறள்: புதல்வரைப்பெறுதல்: 9)
[ஈன் = பெறு; உவ = மகிழ்வடை]
"தன் மகன் சான்றோன் எனப் பிறர் சொல்லக்கேட்ட தாய் அந்தப் பிள்ளையைப் பெற்ற நேரத்தைவிட மகிழ்வாள்" என்கிறது அக்குறள். இங்கேயும் தாய்மையின் உடலியற் கடமையான குழந்தைப் பேற்றைச் சொல்லும்போது மூச்சோடு மூச்சாகச் சான்றோன் என்ற சொல்லையும் சொல்லிவிடுகிறார் வள்ளுவர்.
நான் பெற்ற பிள்ளையா இவன்?
வள்ளுவர் இன்னோரிடத்தில் தாயைச் சொல்லும்போதும் கூடவே அந்தத் தாய் தான் ஈன்றிருந்தாலும் தன் பிள்ளையைத் தான்பெறாதது போல் அருவருத்து ஒதுக்கிவிடும் சூழ்நிலையைச் சொல்கிறார்:
அறம்சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும் (திருக்குறள்: நல்குரவு: 7)
[சாரா = சாராத, பொருந்தாத; நல்குரவு = வறுமை, வறுமையில் உள்ளவன்]
"ஒழுக்கத்தைச் சேராமல் வறுமையில் நடப்பவன், தன்னை ஈன்ற தாயாலும் கூடத் தன் மகன் என்ற உறவே இல்லாத பிறனைப் போல நோக்கப் படுவான்" என்கிறார் வள்ளுவர்! அந்த முதுகுடித் தாய் ஒழுக்கந்தவறிய மகன் வறுமையில் வாடுகிறானே என்றுகூட இரங்காமல் வெறுப்பாளாம்! ஒழுக்கந் தவறாமல் இருந்து வறுமையாற் சாகும் மகனையே தாய் விரும்புவாளாம். ஆகவே உண்மையான தாய் தன் பிள்ளை எப்படியாவது சுகமாக வாழ்ந்தால் போதும் என்னாமல், ஒழுக்கத்தின்படி வாழ்ந்து என்ன சுகம் கிடக்கிறதோ அந்தச் சுகத்தையே பிள்ளைக்கு விரும்புவாள் என்பது தெளிவு.
அன்னை வாடினாலும். அறம் வழுவாதே!
அது சரி, அப்படி மகனை நடத்துபவள் அவனுடைய துன்பத்தில் தானும் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருப்பாளா? ஆமாம் என்கிறார் வள்ளுவர்:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (திருக்குறள்: வினைத்தூய்மை: 6)
"ஈன்ற தாயின் பசியைக் காண்பவள் ஆனாலும் சான்றோர்கள் பழிக்கும் செயலைச் செய்யாதே!" என்று சொல்லி வளர்ப்பாளாம் தன் பிள்ளையை! இது நாம் நம் குழந்தைகளை எதெதில் மென்மையாகவும் எதெதில் உறுதியாகவும் வளர்க்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது. "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்" என்பது அவள் குடும்பத்தார் தாங்களே தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும் சூழ்நிலையையும் உள்ளடக்கும்; கற்பென்னும் சால்பினின்று பிறழாதவள் அவர்கள் செத்தால் தானும் கூடவே சாகலாம்; ஆனால் பிறனைப் பொருந்துவது கீழாகும். கற்பு என்னும் உயர்நிலையிலிருந்து இறங்கினால் தலையிலிருந்து இறங்கிய மயிர்போல்தான் அந்தக் குடும்பம் மதிக்கப்பெறும்:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை (திருக்குறள்: மானம்: 4)
[அனையர் = போன்றவர்; இழி = இறங்கு; மாந்தர் = மனிதர்; கடை = இடத்தில்]
அடங்காத தந்தைக்கு அடங்குவதா?
எனவேதான் தந்தை ஒழுக்கம் தெரியாமலோ ஒழுக்கம் வழுவியோ தன் பிள்ளைக்கும் ஒழுக்கந் தவறிய செயலை ஆணையிட்டால் அதைக் கண்மூடித்தனமான பயபத்தியோடு பிள்ளை நிறைவேற்றக் கூடாது என்கின்றனர் தமிழ்ச்சான்றோர். மேலே நாம் கண்ட இனியவை நாற்பது "காலையில் பெற்றோரைக் கண்டு தொழுதெழுவது இனியது" என்று சொன்னாலும் கீழே கண்டதையும் சொல்கிறது:
தந்தையே யினும் தான்அடங்கான் ஆகுமேல் கொண்டுஅடையான் ஆகல் இனிது (இனியவை நாற்பது: 7:3-4)
அதற்கு மகாதேவ முதலியார் உரை (1922) “தன்னைப்பெற்ற தந்தையே ஆனாலும் அவன் மனம், மொழி, மெய்கள் (உடலுறுப்புகள்) தீ நெறிக்கண் சென்று அடங்கான் எனின் அவன் சொற்கொண்டு அதன் வழி நில்லாதான் ஆதல் இனிது” என்கிறது. எனவே தன் தந்தையே ஆனாலும் அவன் சான்றோர் நெறிக்கு அடங்காதவன் ஆனால், அவன் சொல்லைத் தலைமேற்கொண்டு நடக்காதவனாக ஒருவன் இருப்பதே இனிதாகும்!
எனவே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்பது சான்றோர் சொற்படித் தன் தந்தை ஒழுகுபவனாக இருக்கும்வரைதான் தகும் என்பது தெளிவு. அந்தச் சான்றோர் பழிக்கும் செயல்கள் எல்லாவற்றிலும் கீழானது பெண்ணின் கற்பை மீறுதல் ஆகும். தன் மகள் தன் உள்ளத்தில் ஒருவனைப் புகுத்திக் காதலித்தபின் சாதிமத வேறுபாடு, செல்வாக்கு வேறுபாடு, பகை, சொந்த விருப்பு வெறுப்பு ஆகிய காரணங்களுக்காக அவள் மணத்தைத் தடுப்பதும் அவளை வேறொருவனை மணக்கத் தூண்டுவதும் அவள் கற்பை மீறுவதே ஆகும். அப்படி மீறி மணத்தினால் பிறக்கும் மகனால் “தன் தாயின் உள்ளத்தில் இருந்தவன் ஒருவன்; தன்னைப் பெற்றவன் வேறொருவன்!” என்று அறியும்போது எப்படி இருக்கும்?
அவ்வாறே மணப்பதாக ஆசைகாட்டிக் காதலித்த பெண்ணை விட்டுவிட்டுத் தன்மகனை வேறொருத்தியை மணக்கத் தூண்டுவதும் ஆகும். காதலித்து ஏமாற்றிப் பெண்னை மோசம்செய்யும் பொய்யனாக மகனை ஆக்குகிறது அச்செயல். அவ்வாறு தூண்டும் தகப்பனையும் மதிக்கவேண்டா என்கிறது தமிழ்!
தவறிய தகப்பன் காலையே தகர்த்தான் சண்டி!
சண்டேசுவர நாயனார் தாம் ஆத்தி மரத்தின்கீழ் மணலைக் கூப்பிச் சிவஇலிங்கம் செய்து ஆவின் பாலாட்டி வழிபட்டார்; அப்போது தம் தந்தை கோபத்தில் அதைக் கலைத்த போது அந்தத் தந்தையின் காலையே கோடரி கொண்டு வெட்டினார் என்று தேவாரத்தில் திருநாவுக்கரசர் கூறுவார்:
தழைத்தது ஓர் ஆத்தியின்கீழ்த் தாபரம் மணலால் கூப்பி அழைத்துஅங்கே ஆவின் பாலைக் கறந்துகொண்டு ஆட்டக் கண்டு பிழைத்த தன் தாதை காலைப் பெருங்கொடு மழுவாள் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுங்கை வீரட்டனாரே! (தேவாரம்:4:49:3)
[தாபரம் = இலிங்கம்; ஆ = பசு; ஆட்டு = நனை; பிழைத்த = அவமதித்த; தாதை = தகப்பன்; கொடுமழுவாள் = கோடரி]
தன் மகளின் காதலைத் தெரியாமல் பிற ஆணுக்கு வாக்குக் கொடுத்திருந்தாலும் வாய்மையினும் கற்புப் பெரிதாகும். எனவே கற்புக்கும் வாய்மைக்கும் இழுபறி நேர்ந்தால் கற்பைக் காப்பதே சான்றோர் நெறியாகும். இதை அருந்ததி கற்பிக்கிறாள்: சிவனுக்கும் உமைக்கும் பிறந்த கருவின் ஒரு பாகத்தைத் தன் மனைவி அருந்ததி கருப்பம் தாங்குவாள் என்று அவள் கணவனாகிய முனிவன் ஒப்புதல் தெரிவித்திருந்தான்; ஆனால் அது தன் கற்புக்குக் கேடென்று எண்ணி அருந்ததி அக்கருவை ஏற்க மறுத்தாள் (பரிபாடல்: 5). அந்த நிகழ்ச்சி கற்பிக்கும் இன்னோர் நெறி: கற்பென்பதுவும் தன் தலைவன் சொல்வதுபோல் கண்மூடித்தனமாக நடப்பதுவோ அவனை எப்படியாகிலும் காப்பதுவோ கூட ஆகாது. பாலை நிலத்தைக் கடக்கும் தன் தலைவனைக் காக்கச் சூரியன், மழை போன்ற தெய்வங்களை உள்ளத்தில் புகுத்திவழிபட்டால் கற்புக்கு இழுக்கு என்று அஞ்சித் தன் தலைவன் பாலைநிலக் கொடுமையில் வாடினாலும் கூட அத் தெய்வங்களை வழிபடாத தலைவியை நாம் கலித்தொகையில் காண்கிறோம் (கலித்தொகை: 15). கோவலன் பரத்தையர் தெருவிலிருந்து பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு வரக் கோவில்களை வழிபடுவோம் என்று தன் தோழி சொல்லியும் கண்ணகி "பீடு அன்று" என்று சொல்லி மறுப்பதையும் காண்கிறோம் சிலம்பில்!
எனவே அந்த முதல் வினாவிற்கு விடை: நாம் கண்ட பாலைத் தலைவி கற்புக்கும் பெற்றோருக்கும் இழுபறி நேர்ந்தபோது தன் பெற்றோரிடம் கூடச் சொல்லாமல் சென்றது சால்புடைய செயலே! அவளை விட உயர்ந்தது ஏதும் இல்லை:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள்: வாழ்க்கைத்துணை நலம்: 4)
கற்பென்னும் உறுதி உண்டாகப் பெற்றால் பெண்ணை விட உயர்ந்தவை எவை உள்ளன? இல்லை!
பெரியண்ணன் சந்திரசேகரன் |