வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா
தேவையான பொருட்கள்:

டோ·பூ (கடினமானது) - 16 அவுன்சு
ரவை - 1 1/2 கிண்ணம்
புளி விழுது` -11/2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 6 மேஜைக்கரண்டி
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1/4 கிண்ணம்
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

டோ·பூவை நன்றாகக் குளிர்நீக்கி, நீரில் அலம்பி, நீரில்லாமல் ஒட்டப் பிழிந்து தேங்காய்ப்பூ போல அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளி, உப்பு, மஞ்சள் பொடி இவைகளைத் தண்ணீரில் கரைக்கவும். வெறும் வாணலியில் (எண்ணெய் விடாமல்) ரவையை நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.

அரைத்த டோ·பூ, வறுத்த ரவை (வறுத்த சூட்டுடன்) இவைகளை உப்பிட்ட புளிநீரில் (புளி அவலுக்குப் பிசிறுவது போல்) பிசிறவும்.

தகுந்த அளவுள்ள பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய், பருப்புகள், பெருங்காயம் இவைகளைச் சலசலவென தாளித்து, அதில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலையையும் போட்டுச் சிறிது வறுத்தபின், பிசிறி வைத்துள்ள டோ·பூ கலவையைப் போட்டுக் கிளறவும்.

நன்றாகக் கலந்தவுடன் சிறிது வாயில் போட்டுப் பார்த்து, தேவையானால் இன்னும் உப்புப் போட்டுக் கலக்கவும்.

பிறகு அடுப்பை நிதானமாக எரியவிட்டு அடிக்கடி உப்புமாவைக் கிளறிவிட்டு ஒரு தட்டால் மூடி வேகவிடவும்.

15 நிமிடங்களில் சுவையான டோ·பூ உப்புமா தயார்.

இத்துடன் வெங்காயத் தயிர் பச்சடியைப் பறிமாறினால் இதுவே பூரண உணவாகி விடும்.

லலிதா சுந்தரராஜன்

© TamilOnline.com