நார் நீக்கி 1" நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிய வாழைத்தண்டு - 3 கிண்ணம் துவரம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி புதிதாகத் துருவிய தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
தாளித்துக் கொட்ட:
சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி கறிவேப்பிலை - 6 இலைகள்
செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டைச் சிறிது மோர் கலந்த நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்துப் பின்னர் பிழிந்து எடுக்கவும். துவரம்பருப்பு, கொத்துமல்லி விதை, சீரகம் இவற்றை 10 நிமிடங்கள் சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் இவற்றைத் தேங்காய்த் துருவல், சிவப்பு மிளகாயுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
மிகவும் நைஸாக அரைத்தால் கூட்டு, கூழ் மாதிரி ஆகிவிடும். ஆகவே சற்று கரகரப்பாகத் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் பிழிந்து எடுத்த வாழைத்தண்டுடன் உப்பும் போட்டு வேகவிடவும். நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைப் போட்டுக் கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் இவற்றைத் தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |