டாக்டர் சியாமளா ஹாரிஸ்
டிசம்பரில் நடந்த சான் ஃபிரான்சிஸ்கோ மாநகராட்சித் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்தன. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு மாவட்ட வழக்குரைஞர் பதவிக்கு ஒரு பெண், அதிலும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண், கேமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று அமெரிக்காவின் தலைப்புச் செய்திகள் பரபரத்தன. வெற்றி பெற்றவர் பெயர் கேமலா அல்லது கேமில்லா இல்லை, கமலா தேவி ஹாரிஸ். அதுதான், அமெரிக்க ஊடகங்களின் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு முதன்மைச் செய்தியாக உலகின் மறுகோடியில் இந்தியச் செய்தி நிறுவனங்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகை உமா துர்மனைப் போல இந்தப் பெயரும் இந்தியாவின் மீது ஆர்வமுள்ள ஓர் அமெரிக்கப் பேராசிரியர் தன் மகளுக்கு இட்ட பெயராக இருக்குமோ என்று எண்ணியிருந்தனர் சிலர். ஆனால், தன் மகளுக்குக் கமலா என்ற பெயரை வைத்த டாக்டர் கோ. சியாமளா ஹாரிஸ் ஒரு தமிழ்ப் பெண். சான் ·பிரான்சிஸ்கோ தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தமிழ் அமெரிக்கப் பெண் என்ற பெருமையும் கமலா தேவி ஹாரிஸுக்கு உண்டு என்பதுதான் இந்திய அமெரிக்கர்கள், இந்திய ஊடகங்களுக்குச் சுவையான செய்தி. கமலா ஹாரிஸ் பற்றிச் செய்தி வெளியிடாத இந்திய அமெரிக்க ஊடகங்களே இல்லை எனலாம்.

கமலாவின் வெற்றிக் கதையை வெளியிட்டவர்கள் அந்த வெற்றிக்கு வித்திட்ட கமலாவின் அம்மா டாக்டர் சியாமளா பற்றிய செய்திகளை ஆங்காங்கே தெளித்திருந்தார்கள். டாக்டர் சியாமளா புது டெல்லியில் இந்திய அரசு இணைச் செயலராக ஓய்வு பெற்ற பி. வி. கோபாலன், ராஜம் தம்பதியரின் புதல்வி. லாரன்ஸ் பர்க்கெலி தேசியச் சோதனைச் சாலையில் மார்பகப் புற்று நோய் ஆராய்ச்சியில் புகழ் பெற்ற தமிழ் விஞ்ஞானி. பர்க்கெலி பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1960களில் பர்க்கெலியில் நடந்த குடியுரிமைப் போராட்டங்களில் பங்கேற்ற போராளி. பர்க்கெலியில் தன்னுடன் படித்த ஜமய்க்கன் மாணவரான டானால்டு ஹாரிஸை மணந்து, கமலா தேவி ஹாரிஸ், மாயா லஷ்மி ஹாரிஸ் என்ற பெண்களைப் பெற்ற தாய். மணமுறிவு பெற்ற பின்னர் தன் பெண்களை ஆப்பிரிக்க அமெரிக்கச் சமூகத்தில், இந்திய, தமிழ்ப் பண்பாட்டில் ஆழ்த்தித் தம் பெற்றோர்கள் இருவரின் பண்பாட்டிலும் வளர்த்து ஆளாக்கியவர். இவ்வாறு ஒவ்வொரு செய்தித் துளியையும் படிக்கப் படிக்க, நம்மில் பலர் அறியாமல் நம்மிடையே வாழும் இந்தப் புதுமைப் பெண் டாக்டர் சியாமளா ஹாரிஸைச் சந்திக்கும் விருப்பம் அதிகமாயிற்று. சிலிக்கன் புரட்சிக்கு முன்னர், இந்தியர்கள் பெருவாரியாக அமெரிக்காவுக்கு வந்த வேளையில், குடியுரிமைப் போராட்ட வரலாற்றில் நேரடியாகப் பங்கேற்ற இவரது எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டினோம். எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஓர் அழகான பிற்பகல் வேளையில் தென்றலோடு பேசினார் டாக்டர் சியாமளா.

பெண் காவல்துறை அலுவலர்கள் கூட வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது அவர்கள் கணவர் துணையோடுதான் வீட்டுக்குச் செல்வதாகத் தற்காலப் பத்திரிக்கைகள் கிண்டல் செய்வதைப் படித்திருக்கிறோம். 40 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னந்தனியாக அமெரிக்காவுக்குப் படிக்க வந்த துணிச்சல், படிப்போடு குடியுரிமைப் போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக அக்கறை, உலகெங்குமிருந்து வந்திருக்கும் மாணவர்களோடு போட்டியிட்டு வெல்லக்கூடிய அறிவு, இவற்றின் பின்புலம் தன் குடும்பத்தின் இயல்பு, தன் நாட்டின் பண்பு, நம் மரபின் வேர்களில் இருந்து வந்தது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் டாக்டர் சியாமளா.

பணத்துக்கோ புகழுக்கோ தான் அமெரிக்காவுக்கு வரவில்லை, சொல்லப்போனால் இந்தியாவில் எவ்வளவோ சுகமாக இருக்க முடியும், இங்கு குடியிருப்பதால் தனது வாழ்க்கையில் குறைதான் என்கிறார்! தென்னிந்தியப் பெண்கள் பொதுவாகத் துணிச்சல்காரர்கள், தனித்து இயங்க வல்லவர்கள், அவர்களிடம் வம்பு இழுத்தால் தொலைத்துக் கட்டி விடுவார்கள் என்கிறார்! வட இந்தியாவில் மும்பையிலும், டெல்லியிலும் வளர்ந்த இவர், தென்னிந்தியப் பெண்களுக்கு ஔவையார், காரைக்கால் அம்மையார் போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற உதாரணங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கணவனைச் சார்ந்திருப்பதால்தான் பெருமை என்று இல்லாமல் திருமணம் தேவையில்லை என்று உதறிய ஔவையாரைப் போன்ற பெண்விடுதலை வீராங்கனையைப் பார்க்க முடியுமா என வியக்கிறார். மார்பகப் புற்று நோய் ஆராய்ச்சியாளரான இவர் பாண்டியன் சபையில் நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரிக்கத் தன் கொங்கையைப் பிய்த்து எரிந்ததன் உள்ளர்த்தம் என்ன என்று சிந்திக்கிறார். "பாலூட்டி வளர்க்கும் உறுப்பைப் பிய்த்தது ஆக்கத்தின் எதிர்ப் பக்கம் அழிவு என்பதைச் சித்தரிக்கத் தானோ!"

இந்தியாவில் பெண்ணுரிமை

காளி வடிவம் அநீதியைக் கண்டு பொங்கி எழுந்து தீயவர்களை நடுங்க வைக்கும் பெண் தெய்வம் என்று கமலாவுக்குச் சொல்லிக் கொடுத்தேன் என்னும் இவருக்கு இந்தியப் பெண்களைப் பற்றி மேலை நாடுகளில் நிலவும் அறியாமை எரிச்சலூட்டுகிறது. அமெரிக்கர்களுக்கு இந்தியா வைப் பற்றித் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், இந்தியர்களுக்கு அக்கறையில்லை. சான் ·பிரான்சிஸ்கோ மாநகரைப் போல, எல்லாச் சிக்கல்களையும் எப்படியோ சமாளித்துக் கொண்டு இந்தியாபாட்டுக்குத் தன் வழியே செல்கிறது. இருந்தாலும், இந்தியப் பெண்கள் அடிமைகள் என்ற தவறான கருத்து தாம்தான் பெண்ணுரிமையைக் கண்டுபிடித்ததாகப் பீற்றிக் கொள்ளும் மேற்கத்தியப் பெண்ணியவாதிகளிடம் நிலவுகிறது. ஆண் பெண் உறவுகளைக் கடந்து ஒரு பெண்ணுக்குத் தனி மதிப்பு உண்டு என்ற கருத்து இந்தியர்களுக்கு மிகப் பழமையானது என்று அடித்துக் கூறுகிறார். புராணக் கதைகள் மட்டுமல்லாமல், பெண்வழிச் சொத்துரிமை இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே நிலவியதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்தியா, ஆ·ப்கானிஸ்தான் பெண்களை விடுவிக்க எத்தனிக்கும் மேற்கத்தியப் பெண்கள், இந்த நாடுகளின் உண்மையான சிக்கல் ஏழ்மை தான் என்பதை மறந்து விடுகிறார்கள்.

பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் நாட்டுக்கு நாடு மாறலாம். ஆனால், அந்த மரபுகளைப் புரிந்து கொள்ளாமல் அவற்றைக் குறை சொல்வது தவறு. வரதட்சிணைக் கொடுமையில் மருமகளைக் கொளுத்துவது வட இந்தியாவை விடத் தென்னிந்தியாவில் குறைவு. பெண் ஒரு பாரமாக இருக்கும் இடங்களில் அவளுக்கு ஆபத்து. தென்னிந் தியாவில் கணவனை இழந்த கொள்ளுப் பாட்டிகளைக்கூடப் பல தலைமுறைகள் வைத்துக் காப்பாற்றுவது சகஜம். வேலை வாங்குவார்களே ஒழிய, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்கள். சீதனம் அல்லது ஸ்திரீ தனம் என்பது பெண்கள் சொத்துரிமையாகத் தொடங்கி இருக்க வேண்டும். துணி, பாத்திரம், நகை என்று அடமானம் வைத்து மீட்கக் கூடிய சொத்தாகப் பெண்களுக்குக் கொடுத்தது அவர்கள் பாதுகாப்புக்காக. நல்ல நோக்கத் துடன் தொடங்கியது பின்னால் திரிந்திருக்க வேண்டும்.

முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிவதைப் பற்றிக் கூக்குரல் எழுகிறது. ஆனால், முஸ்லிம் பெண்கள் கல்யாண ஒப்பந்தத்தில் அவர்களைப் பாதுகாக்கத் தக்க நிபந்தனைகளை விதிக்கலாம். மணப்பெண்ணுக்குத் தரவேண்டிய உரிமைகளைப் பட்டியலிடுகிறது அந்த ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யாமல் தலாக் செய்து விட முடியாது. அதனால், பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி விவாகரத்து செய்ய முடியும். இங்கே பெண்களும் தங்கள் பழைய கணவர்களுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். இதுவா விடுதலை?

ஒரு முறை மும்பை அணுசக்தி நிலையத்திலிருந்து ஓராண்டுப் பயிற்சிக்காக ஒரு பெண் அவரது கணவரை இந்தியாவில் விட்டுவிட்டு வந்திருந்தார். அவரது கணவரை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேட்டபோது, தன் அம்மாதான் என்று அவர் சொன்னது இங்கிருந்த பெண்களுக்கு என்னவோ போலிருந்தது. அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத சில செய்திகளை நான் எடுத்துச் சொன்னேன். கணவன், மனைவி இருவரும் ஒரே வேலையில் இருப்பது, கணவன் மனைவி தொழிலில் போட்டியிடுவது, தேர்ந்தெடுப்பவர்கள் கணவனை விட்டு மனைவிக்குக் கொடுக்கலாமா என்று கவலைப்படாமல் திறமைக்கு மதிப்பளிப்பது, இவையெல்லாமே மனைவி, தாய் என்ற ஸ்தானத்துக்கு அப்பாற்பட்டு பெண்ணுக்கு அவளது தகுதியின் அடிப்படையில் வாய்ப்பளிப்பு என்பது இந்தியப் பண்பாட்டில் ஏற்கப்பட்டது என்பதற்கு அடையாளங்கள். தகுதியும் திறமையும் அற்ற அபலைப் பெண்கள் மற்ற எல்லா இடங்களைப் போலவே அடிபடத்தான் செய்கிறார்கள். ஏழை நாடுகளில் கூடுதலாகவே அடிபடக் கூடும். ஆனால், அவை படிப்பறிவினாலும், தகுதி, திறமையினாலும், சமாளிக்கக்கூடிய சிக்கல்கள்.

ஒருமைப்பாடும் தனி அடையாளமும்

தான் தனியாக மேல்படிப்புக்கு வந்தது, அரசியலில் ஈடுபட்டது, குடியுரிமைப் போராட்டத்தில் பங்கேற்றது இவை எல்லாமே தான் வளர்ந்த விதத்தில் இயல்பான ஒன்றாகக் கருதுகிறார். தன் தந்தை இந்திய அரசு உயர் அதிகாரியாகப் பணியாற்றியதால், மும்பை, டெல்லியில் ஏனைய அரசு அதிகாரிகளின் குடும்பங்கள் தாம் பக்கத்து வீட்டுக்காரர்கள். மாடுங்கா, கரோல்பாக் என்று தமிழர்களிடையே வாழாவிட்டாலும், பண்டிகைகள், உணவு, பழக்க வழக்கங்கள், கர்நாடக இசை இவற்றில் தமிழ் இருந்தது. ஊர்விட்டு ஊர் போனாலும், பாட்டு வாத்தியார் மாறினாலும், எங்கள் உள்வீடு மாறவில்லை. கர்நாடக சங்கீதமும், தமிழ்ப் பண்பாடும் மாறவில்லை. எல்லா வீடுகளிலும் சுதந்திரமாக நுழைவோம், எல்லாக் குழந்தைகளோடும் விளையாடுவோம். சாதிப் பிரிவுகளோ, நாங்கள் மேல் மற்றவர்கள் கீழ் என்ற எண்ணமோ இருந்ததில்லை. பழகியவர்களைப் பிரிகிறோமே என்ற துன்பமும் இருந்ததில்லை. ஏனென்றால் பிரிவு என்பது எங்களுக்கு சகஜமானது.

நாங்கள் தமிழர்கள், தென்னிந்தியர்கள் என்றாலும் வட இந்தியர்களோடு ஒற்றுமையாக இருக்க முடிந்தது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் எங்கள் அடையாளத்தை விட்டுக் கொடுக்கத் தேவை இருந்ததில்லை. ஒருமைப்பாட்டுக்காகத் தன் அடையாளத்தைத் தியாகம் செய்ய வேண்டியதில்லை. சொல்லப்போனால், உண்மையான ஒருமைப்பாடு ஒவ்வொருவரின் தனி அடையாளம் கலையாமல் இருந்தால்தான் முடியும். உங்கள் அடையாளத்தை விட்டு விட்டு மற்றொருவரின் அடையாளத்தைச் சுமந்து கொண்டிருப்பது ஒருமைப்பாடாக முடியாது. இது பெண் ணுக்கும் ஆணுக்கும் உள்ள உறவு போலத்தான். ஆணுக்கு இணையாக இருக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பெண் ஆண் போல நடந்து கொண்டால் அவளைப் பெண் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கர்நாடகமானது என்று சிலர் இன்று பழிக்கும் மிகப் பழைய வழக்கங்கள் இந்தியாவின் மிக உயர்ந்த பண்பாட்டுக்கு அடையாளங்கள் என்கிறார் இவர். பேறு காலத்தில் பிறந்த வீட்டுக்குப் போகும் பழக்கம் எவ்வளவு புத்திசாலித்தனமானது! புகுந்த வீடு கொடுமைக்காரர்கள் என்பதில்லை. மனித இயல்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மாமியார் வீட்டில் பிள்ளைத்தாய்ச்சியை வேலை செய்ய வைத்தாலும் வைக்கலாம். என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அதனால், ஒன்றுக்கும் கவலைப் படாதே, பிறந்த வீட்டுக்கு வந்து விடு, உன்னைத் தலைமேலே தாங்கி வைத்துக் கொண்டாடுகிறேன். பண்டிகைகள், சாங்கியங்கள், என்று சந்தோஷப் படுத்துகிறேன். வா இங்கே என்று கூட்டி வருகிறோம். இது எவ்வளவு மேன்மையான பழக்கம்!

அப்பா, அம்மாவின் தாக்கம்

குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு என் அப்பாவின் தாக்கம் மிக அதிகம். என் அப்பாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். வாழ்க்கையில் எது நடந்தாலும், அதில் ஓர் அபத்தத்தைச் சுட்டிக் காட்டுவார். அம்மா, அப்பா இருவருமே புத்திசாலிகள். தினசரிச் செய்தியில் தொடங்கி, சுதந்திரப் போர், ஏகாதிபத்தியம், உலக அரசியல் என்று எல்லாவற்றையுமே அலசி விடுவார்கள். இயல்பாகவே இந்தியர்களுக்கு வாதிக்கப் பிடிக்கும். அதிலும் தென்னிந்தியர்கள் எதை எடுத்தாலும் வாதிப்பவர்கள். அதனால், எங்கள் வீட்டில் எதையும் சொல்லி விட்டு நழுவ முடியாது. ஒரு பிடி பிடித்து விடுவார்கள். "சுண்டைக்காய்" என்று மட்டம் தட்டி விடுவார்கள். என் அப்பாவிடம் நான் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேச முடியும்; பேசியிருக்கிறேன்!

என் அம்மாவுக்கும் என் வளர்ச்சியில் பெரும்பங்கு உண்டு. அம்மாவுக்குக் குருட்டுத்தனமான நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. எனக்குக் கல்யாணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போகு முன்னர் அம்மா என்னிடம் சொன்னார்: "இதோ பார், குருக்கள் உன் புருஷன் பெயரைக் கேட்பார். தத்துப் பித்தென்று ஏதும் உளறாதே! உன் புருஷன் ஹாரிஸை நாங்கள் ஹரீஷ் என்று தான் கூப்பிடப் போகிறோம். அதனால் கோயிலில் உன் புருஷன் பெயர் ஹரீஷ் என்று சொல். அது போதும்." இதுபோலச் சிக்கலான விஷயத்தையெல்லாம் சாதாரணமாகத் தீர்த்து விடுவார் என் அம்மா! அவரது பரந்த மனப்பான்மைக்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம். அம்மாவுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ள உதவியாய் இருப்பது அன்னம்மா என்ற கிறிஸ்தவப் பெண். அன்னம்மாவைக் கூட்டிக் கொண்டு அம்மா ஊரையே சுற்றி வந்து விடுவார்கள். அன்னம்மாவின் மாதாகோவிலில் பழுது பார்க்க நேர்ந்த போது, அம்மாவுக்குத் தெரிந்தவுடன் நேரடியாகப் போய்ப் பாதிரியைச் சந்தித்துப் பண உதவி செய்தார். ஊருக்கு உபதேசம் செய்யாமல் அமைதியாய் இது போல உதவி செய்யும் மனப்பான்மை என் பெற்றோர் இருவருக்கும் உண்டு.

பர்க்கெலியில்

நான் வெளிநாட்டுக்குப் போய் படிக்க வேண்டும் என்று விரும்பிய போது, சமாளிக்க முடியுமா என்று மட்டும்தான் என் அப்பா கேட்டார். எங்கள் காலத்தில் எல்லோரும் இங்கிலாந்துக்குப் படிக்கப் போனார்கள். ஆனால், காலனீயம், ஆப்பிரிக்க விடுதலை இயக்கங்கள், ஏகாதிபத்தியங்கள் இன்னபிற எங்கள் வீட்டில் அன்றாடம் அலசப்பட்டவை. ஆங்கிலேய ஆதிக்கம், காலனீயம் இவற்றைப் பற்றிக் கொதித்துக் கொண்டிருந்த எனக்கு அங்கே போகப் பிடிக்கவில்லை. அதனால் தான் பர்க்கெலிக்கு வந்தேன். பர்க்கெலியில் கொதித்துக் கொண்டிருந்த செய்திகள் எல்லாம் எங்கள் வீட்டு அடுக்களையில் அலசப்பட்ட பழைய செய்திகள்தாம். எனவே என்னைப்போலவே காலனீயத்தை எதிர்த்த மாணவர்களோடு சேர்ந்து போராடுவது சுலபமாக இருந்தது. வகுப்பு இருந்தால் போவோம். போராட்டம் இருந்தால் போய்க் கலந்து கொள்வோம். திரும்பி வகுப்புக்குப் போவோம். படிப்பையும் விட்டுக் கொடுக்கவில்லை, அரசியலையும் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள் வந்த போது பர்க்கெலி கொந்தளித்துக் கொண்டிருந்தது. அணு ஆயுதச் சோதனையை மீண்டும் தொடர முடிவெடுத்திருந்தார்கள். மக்கார்த்திய பாணி அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கை விசாரணைகளின் எச்சம் தொடர்ந்து கொண்டிருந்தது. பின்னர் வியட் நாம் போர் எதிர்ப்பு, குடியுரிமைப் போராட்டம், எல்லாம் நடந்தது. ரெவரெண்ட் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம்-எக்ஸ் எல்லோரும் வந்து பேசினார்கள்.

இந்தியர்களும் போராட்ட இயக்கங்களும்

இந்தியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது எல்லாம் அவ்வளவு அபூர்வமில்லை. இந்தியச் சுதந்திரப் போராட்டமே மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர்தானே சூடு பிடித்தது? காந்தி தென்னாப்பிரிக்காவுக்குப் போகாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எப்போதும் ஒரு வாக்குவாதம் எங்கள் வீட்டில் இருந்திருக்கிறது. தான் ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதன், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவன், இந்தியன், ஆண் என்ற பெருமையுடன் வந்த காந்தியை, இதோ பார், நீ கருப்பன், அதனால் ஓர் உதவாக்கரை என்று இனவெறியர்கள் ஏறி மிதித்தபோதுதான் காந்திக்கு அடக்கு முறையின் அர்த்தம் என்ன என்று புரிந்தது. அப்படிப்பட்ட அவமானத்தை அவர் அனுபவிக்காவிட்டால் அவர் இந்தியாவுக்கு வந்து, என் நாட்டை விட்டு வெளியேறு என்று போராடி இருக்க மாட்டார். இந்தியர்கள் அந்தப் போராட்டத்தைப் பூசி மெழுகப் பார்த்தாலும், அது இனவெறியைப் பற்றிய போராட்டம். தமிழில் அவர்கள் முழங்கியது என்ன? "ஆங்கிலேயா வெளியேறு" என்று சொல்லவில்லை. "வெள்ளையனே, வெளியேறு!" என்றுதான் முழங்கினார்கள்.

இட ஒதுக்கீடு

அப்போது இங்கே நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்தியாவுக்கு அது மிகப் பழைய செய்தி. நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்பதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அது இன்னும் தேவையா இல்லையா என்று தெரியும்வரை இந்தியாவில் தொடர்கிறது. சமூகம் ஒரு சிலருக்குச் செய்த அநீதியை நிவர்த்திக்க இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் தேவை என்பதை உலகுக்கு அறிவுறுத்தியது இந்தியாதான் என்பது எவ்வளவு இந்தியர்களுக்கு இன்று தெரியும்? பலர், குறிப்பாகத் தென்னிந்திய பிராம்மணர்கள் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைக் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், உண்மையை மறுக்க முடியுமா? ஆயிரம் ஆண்டுகளாக நடந்த அநீதியை வேடிக்கையாய் மறைக்க முடியாது. நடந்த அநீதியை ஒத்துக் கொள்ள வேண்டும். சரி, இட ஒதுக்கீட்டுச் சலுகையால் இதைத் தீர்க்க முடியும் என்றால் தீர்த்துக் கொள். எதைச் செய்தால் நிவர்த்திக்க முடியுமோ அதைச் செய்து கொள் என்று சொல்ல வேண்டும்.

உன்னால் முடிந்தைச் செய்

60களில் இந்தியர்கள் சமமாக நடத்தப் படவில்லை. விஞ்ஞானத்திலும், பொறியிய லிலும் திறமையுள்ளவர்கள், கொடுத்த வேலையைச் செய்வார்கள் என்ற பெயர் இருந்தாலும், பேராசிரியர் பதவி எல்லாம் கேட்காதே, சொன்னதைச் செய் என்ற ஊழிய நிலையில்தான் இந்தியர்கள் இருந்தார்கள். ஆனால் பல இந்தியர்கள் இந்தத் தீண்டாமையை உணரவேயில்லை. ஆனால், நான் சிறுமை கண்டு பொங்கும் குணம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள். என் கணவருக்கு வேலை கிடைத்த பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். தேர்வு எல்லாம் முடிந்த பின்னர், சம்பளத்தைப் பார்த்தேன். அடிமாட்டுச் சம்பளம்! பேரம் பேச வேண்டும் என்ற எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. "இதுதான் உங்கள் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளமா?" என்று கேட்டேன். ஆம், என்னுடைய இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இதுதான் கொடுக்கிறேன் என்றார். வேலை கொடுப்பவரோ பெரிய ஆராய்ச்சிப் பேராசிரியர். இதோ, இந்த இந்தியன் இந்தச் சம்பளத்துக்கு வேலை செய்ய மாட்டேன் என்று எழுந்து விட்டேன். ஓர் இந்தியன், அதிலும் ஒரு பெண், தன்னை எதிர்த்துப் பேசுவதா என்று அந்த ஆளுக்கு வந்ததே கோபம். இந்த வேலையை உதறிவிட்டுப் போனால் உனக்கு இங்கே ஒரு வேலையும் கிடைக்காமல் தடுத்து விடுவேன் என்று எச்சரித்தார். நான் அவரைப் பார்த்துச் சொன்னேன் "ஓ, அப்படியா, உன்னால் முடிந்ததைச் செய் பார்ப்போம்!" என்று வெளியேறினேன். அத்தனையையும் மீறி எனக்கு வேலை கிடைக்கத்தான் செய்தது. வேலையிலும் நான் கொடி கட்டிப் பறந்தேன்.

மற்றவர்களை நீ யார் என்று தீர்மானிக்க விடாதே

இன்னொரு முறை, ஏதோ சிறுபான்மையினர் பற்றிய ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள். அப்போது இன்னொரு இந்திய விஞ்ஞானி என்னிடம் நீ என்ன எழுதிக் கொடுத்தாய் என்று வந்து கேட்டார். ஓ, நான் அதைப் பூர்த்தி செய்யவில்லை, உலகத்தின் பெரும்பான்மையினரைச் சிறுபான்மை என்று சொல்லக் கூடாது என்று எழுதித் திருப்பி அனுப்பி வைத்தேன் என்று சொன்னேன். அவர் நடுங்கி விட்டார். சரி, நீ செய்ததையே நானும் செய்கிறேன். என்னைப் பிடித்தால் உன்னையும் பிடித்தாக வேண்டும், என்று சொல்லி அவரும் அதையே எழுதினார்! நான் அப்படித்தான். கண்ட குப்பை கூளத்தையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஒரு முறை ஐ.நா. சபைக்குக் கிருஷ்ண மேனன் வந்திருந்தார். ஹார்வர்டில் அவர் பேச வந்தபோது ஒரு மாணவன் அவரிடம் ஏதோ ஒரு கொள்கையைப் பற்றி "ஐயா, வெள்ளையரல்லாதார் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?" என்று கேட்டான். கிருஷ்ணமேனனின் பதிலை என்னால் மறக்க முடியாது. "தம்பி, இதோ பார், நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் நீ ஒன்றைப் புரிந்து கொள். உலகின் பெரும்பான்மை மக்களை நீ எதிர்மறையில் குறிப்பிடாதே!"

வெள்ளையர் அல்லாதாரா? என்ன பேத்தல்! பாருங்கள், இங்கே இருக்கும் இந்தியர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. இது முக்கியம். எப்போதும், மற்றவர்களை நீ யார் என்று தீர்மானிக்க விடாதே. நீ யார் என்று நீ மட்டும்தான் தீர்மானிக்க வேண்டும். எப்போது மற்றவர்களுக்கு உன்னை வரையறுக்கும் சக்தியைக் கொடுக்கிறாயோ, அப்போது நீ அடிமையாகிறாய். அதுதான் அடிமைத் தனத்தின் அடிப்படை விதி.

தென்னிந்தியாவில் ஒரு பழக்கம் உண்டு. பிறந்த பத்தாம் நாள் குழந்தைக்குப் பெயரிடும் விழா. குழந்தையின் பெயரை அதன் தாய் மாமன் முதலில் அதன் காதில் ஓதி விட்டுத்தான் மற்றவர்களுக்கு உரக்கச் சொல்லுவார். ஏன்? அது எவ்வளவு நாகரீகமான செயல்? உன் பெயர் முதலில் உனக்குத்தான் தெரிய வேண்டும். பிறந்த குழந்தையின் அடிப்படை அடையாளம் அதன் பெயர். அதை முதலில் அந்தக் குழந்தைக்குச் சொல். அந்த உரிமையை விட்டுக் கொடுக்காதே.

அரசியல் இல்லாத இடமில்லை

குடியுரிமைப் போராட்டத்தைப் பற்றி நல்ல பல நினைவுகள். பல ஊமைக் காயங்கள். ஓ, எத்தனை ஆண்டுகள்! நாங்கள் கேட்டதென்னவோ கொஞ்சம்தான். "நாங்கள் வெள்ளை இல்லை என்பதால் எங்களை இரண்டாம் தரக் குடிமக்களாய் நடத்தாதே!" இது ஓர் அடிப்படைக் கோரிக்கை, எவ்வளவு சின்ன கோரிக்கை. ஆனால் இதைப் பார்த்து மிரண்டு போய் எங்களை அடித்து நொறுக்கினார்கள்! போலீசை ஏவி விட்டார்கள். சின்ன வயதில் இது உங்கள் உள்ளத்தை நார் நாராகக் கிழித்து விடுகிறது. "நீ இப்படி மிரண்டு போகும்படி உன்னை நான் எதை வைத்து மிரட்டுகிறேன்?"

எல்லா நிகழ்ச்சிகளும் இன்னும் நினைவில் இருக்கின்றன. தண்டி யாத்திரை காலத்தில் நான் இருந்திருந்தால், நானும் அங்கே இருந்திருப்பேன். அதுவும் அதே உரிமைப் போராட்டம்தான். உப்புக்கு வரி விதித்தால், எல்லையற்ற பெருங்கடலிலிருந்து நான் உப்பை எடுத்துக் கொள்கிறேன்! குடியுரிமைப் போராட்டமும் இந்தியர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

பல்கலைக் கழக வேலையில் சேர்ந்த பின்னரும் அரசியல் ஈடுபாடு தொடர்ந்ததா என்கிறீர்கள். அரசியல் எல்லா இடத்திலும் இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டால் ஒழிய உங்களைச் சுற்றி இருக்கும் அரசியலை நீங்கள் மறுக்க முடியாது. அரசியல் என்பது உங்கள் வேலையிலிருந்து தனியானது என்று நினைக்காதீர்கள். அது எப்போதும் இருக்கிறது. அதைக் கண்டு கொள்வதா வேண்டாமா, கலந்து கொள்ளலாமா வேண்டாமா, எப்போது, எவ்வளவு ஈடுபாடு என்பதைத்தான் நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

எது முன்னேற்றம்?

கலி·போர்னியா கருப்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் கிலியன் ஸ்மால் "கமலாவின் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், சான் ·பிரான்சிஸ்கோ போன்ற முற்போக்கு மாநகரில்கூட ஒரு கருப்பு வேட்பாளர் மாவட்ட வழக்குரைஞர் பதவியை எட்ட ஏன் 2004 வரை பொறுத்திருக்க வேண்டியிருந்தது?" என்று கேட்டார். நல்ல கேள்வி. இதே கேள்வி இந்தியாவிலும் கேட்க முடியும். ஐம்பது ஆண்டுகளில் ஒரு சிலர் மட்டுமே உயர் பதவிக்கு வருவது மட்டும்தான் முன்னேற் றமா? அப்போது யாரையும் கேட்காமல் நம் கழுத்தை அறுத்தவர்கள் இப்போது உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன், எப்படி அறுத்தால் உங்களுக்கு வசதி என்று கேட்பதுதான் முன்னேற்றமா? "என் கழுத்தை அறுக்காதே!!!"

இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் தேவையில்லை என்று அவர்கள் சொல்வதெல்லாம் இதனால்தான். இது யார் பதவிக்கு வருகிறார்கள் என்பதைப் பற்றியதல்ல. இது மனித உயிர் சரிநிகர் சமானமானது என்பதைப் பற்றியது. சமம் என்பது ஒருவரோடு ஒருவர் ஒட்டி உறவாட வேண்டும் என்பதற்காக அல்ல. ஒரு பெண் வென்றிருக்கிறாள். இது சமநிலைக்கான முதல் அடி கூட இல்லை. கமலாவின் வெற்றிக்குக் காரணம் அவள் பெண் என்பதால் அல்ல. சமூகம் அதன் வசதிக்கு ஏற்ப இனம், பால் அடையாளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும். நீ கருப்போ, பெண்ணோ, அல்லது வேறு ஏதோ, நீ வேலையில் தோற்றால், இதோ இவர்களால் எதையும் செய்ய முடியாது என்று சொல்லிக் கொள்ள முடியும். நீ நன்றாக வேலை செய்தாலோ, இதோ பார், இவர்களைக்கூட நம்மால் உயர்த்த முடிகிறது, நாம் எப்படிப்பட்ட உயர்ந்த சமுதாயம் என்று சொல்லிக் கொள்ள முடியும்!

ஒருவர் உன்னிடம் வந்து, இதோ பார், உன்னைப் போன்ற கருப்பர்களும் முன்னேறக்கூடிய நல்ல சமுதாயம் நமது என்று பீற்றிக் கொள்ளும்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? நீ துப்புக் கெட்டவன், உன்னிடம் இதை எதிர் பார்க்கவில்லை என்று தானே சொல்கிறார்கள்? அது இனவெறியில்லை? கமலாதான் முதல் அந்தப் பதவி வகிக்கும் முதல் பெண், ஆப்பிரிக்க அமெரிக்கன், இந்திய அமெரிக்கன் என்பது சமூகத்தின் பிற்போக்குத்தனத்துக்குத்தான் அளவுகோல்.

உன் இனத்தையே மட்டம் தட்டினால்?

ஒருவர் உன்னிடம் வந்து, நீ உன் இனத்துக்குப் பெருமை சேர்க்கிறாய் என்றால் உன்னால் உச்சி குளிர்ந்து கொள்ளவா முடியும்? உன் இனத்தையே மட்டம் தட்டினால் அது உனக்கா பெருமை? அது அவமதிப்பு இல்லையா? அப்படித்தான் அதை நான் புரிந்து கொள்கிறேன். அதைத்தான் நான் என் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தேன். உன்னில் எந்த ஒரு பகுதியை அவமதித்தாலும், அது உன் னையே அவமதிப்பதல்லவா?

நான் மற்ற இந்தியர்களைப் போல் இல்லை என்று என்னிடம் யாராவது சொன்னால், நான் சொல்கிறேன், இதோ பார். நான் எல்லா இந்தியர்களைப்போல்தான்! நீ என்ன சொல்ல வருகிறாய்? ஒன்று என்னை மட்டம் தட்டுகிறாய் அல்லது என் மக்களை மட்டம் தட்டுகிறாய். இரண்டுமே என்னை அவமதிப்பதுதான்.

இனவெறியை வெல்ல முடிந்ததா?

குடியுரிமைப் போராட்டத்தால் இன வெறியை வெல்ல முடிந்ததா? ஏதோ வெகு சிறிய அளவில் முன்னேற்றம் இருக்கலாம். ஆனால், புரையோடிப் போய் இருக்கும் இதை எப்படி அழிக்க முடியும்? அறுபதுகளில் கம்யூனிஸ்டு நாடுகளிலிருந்து வந்து குடியேறி மூன்றாண்டு கூட ஆகாதவர்கள், பல தலைமுறைகளாய் இந்த நாட்டில் இருந்தவர்கள் வழி வந்த டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கைப் பார்த்து, நீ உன் நாட்டுக்குத் திரும்பிப்போ என்று கத்தினார்கள். கருப்பர்களோடு வாழ்நாளில் பழகாதவர்கள்கூட இங்கு வந்து இறங்கி 2-3 ஆண்டுகளில் இனவெறியராக முடிகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? புது வரவுகள் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிமட்டத்தில் இருப்பவர்களோடு தன்னை இனங்காணுவதால் அவர்களுக்கு என்ன லாபம்?
இதே நினைப்புதான் புதிதாக வந்திறங்கும் இந்தியர்களிடமும் நிலவுகிறது.

இளைய தலைமுறைக்கு நம் வரலாறு தெரியவேண்டும்

ஆனால் இளைய தலைமுறை இந்திய அமெரிக்கர்கள், இங்கே வளர்ந்தவர்களைப் பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர்களுக்கு அந்நிய உச்சரிப்பு இல்லை. அவர்களிடம் எந்த வித்தையும் காட்டி ஏமாற்ற முடியாது. அவர்கள், குடியுரிமைப் போராட்ட வரலாறு படிக்க வேண்டும். எப்போது, எங்கே இந்தியர் களுக்கு பல்கலைக் கழக ஆசிரியர் வேலைகள் கிடைக்கத் தொடங்கின என்று பார்க்க வேண்டும். தென் மாநிலப் பல்கலைக் கழகங்களில் ஏராளமான இந்தியர்கள். ஏன்? இட ஒதுக்கீட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக இந்தியர்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதிலும், தென் மாநிலங்களில் மட்டும்? இந்தியர்கள் பாவம், இது தம் திறமைக்கு மட்டும் கிடைத்த பரிசு என்று நினைக்கிறார்கள். சிறுபான்மைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தங்களை வைத்து நிரப்பினார்கள் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்.

இந்த செப்டம்பர் 11க்குப் பின்னால், எங்கே பிறந்திருந்தாலும், இந்தியர்களுக்குச் சில வேலைகள் கிடைப்பதில் திண்டாட்டம் இருக்கத்தான் போகிறது. சில பாதுகாப்பு வேலைகளுக்கு, பாகிஸ்தானிகள் வேண்டாம் என்றால், இந்தியர்களுக்கும் பாகிஸ்தானிகளுக்கும் எப்படி வேறுபாடு கண்டுபிடிக்க முடியும்? இருவருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் தாமே! இலங்கைத் தமிழர்கள் வேண்டாம் என்று ஒதுக்குபவர்களால் தென்னிந்தியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் எப்படி வேறுபடுத்த முடியும்?

நம்மில் எத்தனை பேருக்கு இந்த நாட்டில் நம் மக்களின் வரலாறு தெரியும்? கலி·போர்னியாவுக்கு சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அழைத்து வரப்பட்ட பஞ்சாபிகள் தங்கள் நீர்ப்பாசனத் திறமையால் கலி·போர்னியா பண்ணைகளைச் செழிப்பாக்கியது பற்றித் தெரியுமா? அப்படி வந்தவர்கள் தாங்கள் சம்பாதித்த கொஞ்சம் பணத்திலிருந்து இந்திய விடுதலைப் போருக்கு நிதி கொடுத்தார்கள் என்பது தெரியுமா? அவர்களுக்கு இருந்த நம்பிக்கை, இப்போது பல மடங்கு கூடச் சம்பாதிக்கும் இந்தியர்களுக்கு இருக்கிறதா?

இளைய தலைமுறையே! இதோ பாருங்கள், நீங்கள் இங்கே வாழப் போகிறீர்கள்! இங்கே பிறந்து இங்கே வளர்ந்தவர்கள் நீங்கள். உங்களுக்கு உங்கள் மக்களின் கதை தெரிய வேண்டும். அவர்கள் என்ன செய்தார்கள்? என்ன கொடுத்தார்கள்? அவர்கள் வெறுமனே இங்கு வந்து, கொள்ளை கொள்ளையாகச் சம்பாதித்துச் சுரண்டிப் போனவர்கள் இல்லை. இந்த வரலாறு உங்களுக்குத் தெரிய வேண்டும்.

அவுட்சோர்சிங் அலையின் எதிரடி

எனக்கு இன்னொரு கவலை. பல வேலைகள் இந்தியாவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம். ஆனால் இங்கே யாருக்கு வேலை போய்க்கொண்டிருக்கிறது? இங்கிருக்கும் நடுத்தர மக்களின் வேலைகள் இந்தியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் ஆத்திரம் யாரைத் தாக்கும்? டெல்லியில் இருக்கும் இந்தியனுக்கும், ஓக்லண்டில் இருக்கும் இந்தியனுக்கும் அவர்களைப் பொறுத்த வரையில் என்ன வித்தியாசம்? இது ஆப்பிரிக்காவில் இந்திய மரபில் வந்த வியாபாரிகளுக்குக் கிடைத்த அடியைப் போல அல்ல. இங்கிருக்கும் இந்தியர்களில் பெரும்பாலோர் மற்ற நடுத்தர வர்க்கத்து மக்களைப்போல வேலை செய்து பிழைப்பவர்கள். தங்கள் வேலைகளை இழப்பவர்கள் திருப்பி அடிக்கும் போது யாரை அடிப்பார்கள்? அவர்கள் வேலையிழப்புக்கு இங்கிருக்கும் இந்தியர்கள் காரணம் இல்லை. ஆனால், ஊடகங்களில் பரபரப்பாக வரும் செய்திகளில் தங்கள் வேலை இந்தியாவுக்குப் போகிறது என்று பார்ப்பவர்கள் கோபம் இங்குள்ள இந்தியர்கள் மீதல்லவா பாயும்? இது ஆபத்தானது. இதையெல்லாம் யாராவது கவனிக்கிறார்களா?

தேங்காயின் வலிமை!

கமலாவுக்கும் மாயாவுக்கும் இந்தியா என்றால் உயிர். வீட்டில் செய்த வத்தக்குழம்பு ரொம்பப் பிடிக்கும். தாத்தா பாட்டி மேல் கொள்ளை ஆசை. எங்கள் வீட்டில் என் அம்மாவுக்குத்தான் பக்தி அதிகம். இன்றும் பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோவிலில் அம்மா பெரிய புள்ளி. கமலாவையும் மாயாவையும் எல்லாக் கோயில்களுக்கும் கூட்டிக் கொண்டு போவார். எங்கள் சொந்த ஊர் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு குளத்தில் காலைக் கழுவிய பின் உள்ளே செல்ல வேண்டும். கமலாவுக்கு அசுத்தமான குளத்தைப் பார்த்துத் தயங்கினாள். "பாட்டீ, குளம் அழுக்கா இருக்குது!" அம்மா அதட்டினார் "அழுக்காவது மண்ணாவது, காலைக் கழுவிண்டு வா." பாட்டிக்குக் கட்டுப்பட்டு குளத்தில் காலைக் கழுவிக் கொண்டு கோயிலுக்குப் போனார்கள் குழந்தைகள்!

கமலா தேர்தலில் நின்ற போது, அவள் ஜெயிக்க வேண்டும் என்று அம்மா வேண்டிக் கொண்டார். பாவம் அந்த ஹல்லினன்! ஏதோ கமலாவைத்தான் எதிர்த்து நிற்பதாக நினைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன தெரியும்? அவர் தோற்க வேண்டும் என்று இந்தியாவில் ஊரெல்லாம் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கொண்டிருந்தார்கள் என்று அவருக்குத் தெரியுமா என்ன! தேங்காயின் வலிமை அவருக்குத் தெரியவில்லை, பாவம்! என்று சிரிக்கிறார் சியாமளா.

அவருடைய தந்தையின் நகைச்சுவை உணர்வு இவரிடமும் இருக்கிறது என்று எண்ணியபடியே நாமும் விடை பெறுகிறோம்.

நேர்காணல் மற்றும் தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com