தென்றல் - தமிழ் மன்றம் வழங்கிய 'மக்கள் மன்றம்'
மக்கள் மன்றக் கூட்டங்கள் (townhall meetings) மூலம் தலைவர்கள், சிந்தனையாளர்கள், தொண்டர்கள், பொதுத் தொண்டு அமைப்புகள் ஆகியோர் பொதுமக்களோடு ஊடாடிக் கருத்துகளை அலசுவது அமெரிக்க மரபு. ஊர் மன்றத்தில் பிரச்சினைகளை அலசித் தீர்வு காண முயல்வது தமிழ்நாட்டின் பண்டை மரபு. இந்த மரபுகளின் அடிப்படையில் தென்றல் இதழும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து பெப்ருவரி 22, 2004 அன்று நடாத்திய முதல் மக்கள் மன்றத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கூட்டாஞ்சோறு ஆக்கிக் கொண்டுவந்து உணவோடு கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுக்குச் செவிசாய்த் தோர் பலர்.

கூட்டத்திற்குத் தலைமையேற்ற இந்தியத் துணைத்தூதர் மேதகு S. விஸ்வநாதன் "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற பாரதியின் கனவை நிறைவேற்றும் புதுமைப் பெண்களுக்கு இலக்கணமாய் விளங்கு பவர்கள் கமலா ஹாரிஸ், டாக்டர் சியாமளா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் என்று புகழ்ந்தார். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சார்பில் அண்மையில் சான் ஃபிரான்சிஸ்கோ மாநகரத் தேர்தலில் மாவட்ட வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 'முதல் தமிழ் ஆப்பிரிக்க-இந்திய அமெரிக்கப் பெண்' கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.

புலம் பெயர்ந்த மற்றும் பெயர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இது போன்ற சந்திப்புக் கூட்டம் புதிது. அதிலும், சிலிக்கன் வேல்லியில் வாழும் தமிழர் களுக்கு, நடுத்தர வர்க்க அமெரிக்கர் களைவிட அதிக ஊதியமும், மதிப்பும் இருப்பதால், குடியுரிமை பற்றிய சிந்தனை களோ அக்கறையோ அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால் செப்டம்பர் 11க்குப் பின் நிலைமை மாறிவிட்டது. கூடவே இப்பொழுது எழுந்திருக்கும் "இந்தியாவுக்கு வேலைகள் ஏற்றுமதி" என்ற பரபரப்பான செய்திகள், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீது அமெரிக்கர்களுக்கு வெறுப்பூட்ட நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சந்திப்புக்கூட்டம், அதுவும் சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்ட வழக்குரைஞர் கமலா ஹாரிஸ், அவர் தங்கை அமெரிக்கக் குடியுரிமைச் சங்கத்தின் இனநீதித் திட்ட இயக்குநர் (ACLU - NC - Racial Justice Project Director) மாயா ஹாரிஸ், 60களிலேயே குடியுரிமைப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்கள் அன்னை டாக்டர் சியாமளா ஹாரிஸ் ஆகியோர் வந்து பேசியது மிகவும் பொருத்தமானது எனக் கருதாதோர் இல்லை.

வாசகர்களிடையே புதிய கருத்துகளைப் பரப்பி, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் முன்னோடிகளாய்ப் பத்திரிக்கைகள் இருந்து வந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய டாக்டர் சியாமளா ஹாரிஸ், தென்றல் இதழும் அந்த மரபைப் பின்பற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். குடியுரிமைப் போராட்டங் களைப் பற்றிக் குறிப்பிட்டபோது, அது 1950களிலும் 60களிலும் தொடங்கியதல்ல, 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிய போராட்டம் என்பதை நினைவுறுத்தினார். "வெளிநாடுகளில் அடக்குமுறையாலும், அநீதியாலும் வாடும் மக்களை வரவேற்றுக் கொண்டாடும் அமெரிக்க மக்கள் தம் நாட்டுக்குள்ளேயே வாடும் மக்களின் மீது அடக்குமுறையை அவிழ்த்து விடுவது என்ன நீதி?" என்று 1852இல் தட்டிக் கேட்ட ·ப்ரெடரிக் டக்ளஸ் மேற்கோளை நினைவு கூர்ந்தார். மார்ட்டின் லூதர் கிங்கின் தலைமையில் இயங்கிய 60களின் குடியுரிமைப் போராளிகள் மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றுவதன் சின்னமாக காந்திக் குல்லாய் அணிந்ததைச் சுட்டிக் காட்டினார்.

அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டம் சிந்தனையாளர் விவாதங்களின் அடைப் படையில் எழவில்லை, மற்றப் புரட்சிகள் இயக்கங்களைப் போலவே இதிலும், ரோசா பார்க்ஸ் போன்ற சாதாரண மனிதர்கள் அநீதிக்குத் தலைவணங்காமல் எதிர்த்து நிற்கத் தொடங்கியதுதான் போராட்டத்துக்கு வித்திட்டது என்றார். சியாமளா ஹாரிஸ் அவர்களின் குடியுரிமைகாலப் போராட்ட அனுபவ நினைவு கூறல் பலருக்கு வியப்பையும், விழிப்பையும் கொடுத்தது.

நம் உரிமைகளுக்கான, சுதந்திரத்திற்கான குரலை எழுப்ப நமக்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன? நமக்கு அநீதி இழைக்கப் படும்போது என்ன செய்யலாம்? எங்கு எப்படி அணுகினால் நீதி கிடைக்கும்? - இப்படி அன்றாடக் கவலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கேள்விகளுக்கு இங்கே விடை சொல்ல முற்பட்டனர் ஹாரிஸ் சகோதரிகள் கமலாவும் மாயாவும். அவரது இரண்டாவது மகள் மாயா ஹாரிஸ், செப்டம்பர் 11க்குப் பின் புலம்பெயர்ந்த நம் போன்ற வேற்று தேசத்து மக்களின் உரிமைகளுக்கு என்னென்ன வகையில் கேடு வரலாம், அதைத் தடுப்பதற்கான போராட்டங்கள் என்பவை பற்றிப் பேசினார். தம்மை நேரடியாகப் பாதிக்கும்போது போராடுவதுதான் பொதுவாகப் பழக்கம் என்றாலும் ஏனையோரைப் பாதிக்கும் போதே அவை நம் மேலும் சீறக்கூடியவை என்பதை உணர வைத்தது மாயா ஹாரிஸின் பேச்சு. இவை தள்ளியிருப் பதாய்த் தோன்றினாலும், அன்றாட வாழ்வை பாதிக்கக் கூடிய வல்லமை இவற்றிற்கு இருப்பதை உணர்ந்தால் மக்களிடமிருந்து இன்னும் தீவிரப் பங்களிப்பு வர வாய்ப்பிருக்கிறது.

தென்றல் எழுத்தாளர்கள் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் (அன்புள்ள சிநேகிதியே), கதிரவன் எழில் மன்னன் (சூர்யா துப்பறிகிறார்) மற்றும் பல உள்ளூர் எழுத்தாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துரையாடினார்கள். விடையளிக்க நேரம் போதாத அளவுக்கு வினா-விடை நேரத்தில் கேள்விகள் பல வந்தன.

இது ஒரு நல்ல தொடக்கம். இன்னும் நிறையச் சந்திப்புகள் இது போல் நடக்குமா? ஆங்காங்கே இருக்கும் வாசகர்/எழுத்தாளர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

© TamilOnline.com