சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் பொங்கல் விழா
ஜனவரி 25 அன்று விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழாவை ஒட்டி ஒரு பல்சுவை நிகழ்ச்சியை ஃபிரிமாண்ட் நகர் கோம்ஸ் தொடக்கப் பள்ளி அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கோலப்போட்டி, நடனங்கள், குறுநாடகம், மௌன நாடகம், கவியரங்கம், மற்றும் கரயோக்கி இசை என்று பலவகையான நிகழ்ச்சிகள் அவையோரைக் கவர்ந்தன. நாதசுர இசையோடு தொடங்கிய விழா நிகழ்ச்சிகளின் இடையே தம் மிமிக்ரி நகைச்சுவை இழையோடச் சூத்திரதாரியாய் விளங்கினார் பலகுரல் மன்னன் சூப்பர் சுதாகர். தமிழ் மன்றத்தின் வெள்ளிவிழா ஆண்டின் முதல் நிகழ்ச்சி இது என்று மன்றத் தலைவர் மணி மு. மணிவண்ணன் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

பரதம், நாட்டார் இசை, திரையிசை நடனங்கள் என்று பல விதமான நடனங்களைச் சிறுவர்களும், இளையோரும் வழங்கினர். சிறார்களின் ஆர்வமும், அவர்களைத் தயார் செய்த பெரியோர்களின் சிரத்தையும் பாராட்டுக்குரியன. வாழும் இடத்துக்குத் தகுந்தவாறு கோலப்போட்டியைக் காகிதத்தில் படைத்துச் சுவரில் பார்வைக்கு வைத்து விட்டார்கள். சிறியவர்களும் பெரியவர்களும் தனித்தனிப் போட்டிகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

'வேடிக்கை மனிதர்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் நடுவரையும் சேர்த்து ஏழு கவிஞர்கள் உலகத்தையே ஒரு அலசு அலசினார்கள். வசனமே இல்லாமல் வெறும் கருப்பு உடையும், பாவனையையும் துணையாகக் கொண்டு வெற்றி.காம் என்ற மௌன நாடகத்தை வழங்கிய கார்த்திக் செல்லதுரை குழுவினர் பார்வையாளர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர். விரிகுடாப் பகுதியின் முந்தைய பொருளாதார மேம்பாட்டையும், அண்மைக்காலச் சரிவையும் அருமையாகச் சித்தரித்தது இந்த நாடகம். சரிவால் பாதிக்கப் பட்டவர்கள் மீண்டும் இந்தியா சென்று முன்னேற்றம் அடைவதை இருபது நிமிடங்களில் இவ்வளவு அழகாகச் சித்தரிப்பது கடினம்.

'பாஞ்சாலி சபதம்', 'அக்கினிக் குஞ்சு' நாடகங்களை அளித்த பாரதி நாடக மன்றம் இந்த முறை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" என்ற சிறுகதையைக் குறுநாடகமாக அரங்கேற்றியது.

கலி·போர்னியா செனட் 20ம் தொகுதிக்கு ஜனநாயகக் கட்சித் தேர்தல் வேட்பாளர் ஆஷ் பட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோலப்போட்டிப் பரிசுகளை வழங்கினார். இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொது வாழ்வில் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் தமிழ் மன்றத் தலைவர் கணேஷ்பாபு பண்பாட்டு மையத்தின் நோக்கங்களைப் பற்றிப் பேசினார். இந்தப் பண்பாட்டு மையத்தின் அங்கமாக ஒரு தமிழ்க் கணினிக் கூடம் அமைக்கத் தமிழ் இணையம் 2002 மாநாட்டுக் குழு தமிழ் மன்றத்துக்கு $12,000 நிதி உதவியளித்தது. குழுவின் துணைத்தலைவர் குமார் குமரப்பன் காசோலையை மன்றத் தலைவர் மணிவண்ணனிடம் கொடுத்தார்.

கரயோக்கி இசையின் சுவையில் மலரும் சிறுவர்கள் பலர் மனதைக் கொள்ளை கொண்டார்கள். ஐயப்பன் பாட்டுப் பாடிய குழுவினர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். முரளி, நிர்மல் போன்ற முன்னோடிப் பாடகர்கள் முதல், 'சுரபி' பிரபு, இளைய தலைமுறை 'மோஸ்ட்லி தமிழ் வானம்பாடி' மீரா ஸ்ரீனிவாசன் வரை பலரும் தமிழ் மன்ற வெள்ளி விழா ஆண்டின் முதல் நிகழ்ச்சியை வண்ணமயம் ஆக்கினார்கள்.

விரிகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையத்திட்டம் பற்றிய செய்திகளைக் காண: www.bayareatamilmanram.org

சிவகுமார் தியாகராஜன்

© TamilOnline.com