எதையோ தேடும் மனம்
இது கவிதையுமல்ல, கதையுமல்ல!
வெளிநாட்டு வாசத்தில்
வளர்ந்து விட்ட ஏக்கத்தின்
வெளிப்பாடு மட்டுமே.

படகு போல் வாகனம்
பாத்திரம் தேய்க்கக் கருவி
அவளுக்கென்ன, அமெரிக்காவில்
அமோகமாய் இருக்கிறாள் என்று
அங்கு அக்கம் பக்கம் பேசியிருக்க
அவசர அமெரிக்காவில்
அன்றாட வாழ்க்கையில்
எத்தனையோ அல்லல்கள்
ஏராளமாய் ஏக்கங்கள்.

வெந்நீர் சிந்திய பாதங்களாய்
வார நாட்கள் விரைந்து கழிந்திட
அடுத்த வார உணவை
அறுசுவையாய்ச் சமைக்க
சனி ஞாயிறு போதவில்லை.

உதிரத்தில் உயிராகி
உதித்து விட்ட உன்னதத்தை
ஆசையோடு கட்டி அணைத்து
அவசரமாய்க் கையசைத்து
காப்பகத்தில் கரைசேர்த்து
காற்றாய்ப் பறந்தால்
கால்கள் சேரும் அலுவலகத்தில்.

உழைத்த களைப்பில்
ஊர் திரும்பும் நேரத்தில்
வண்டிக்கு ஒருவர் என்று
வாகன நெரிசலில் ஊர்ந்து
அந்தி சாய்ந்த பொழுதில்
அலுப்பும் அவசரமுமாய்
காப்பகத்துச் செல்வத்தை
சிம்மாசனத்தில் சிறைப்படுத்தி
ஒருவழியாய் இல்லம் திரும்பினால்
இன்னுமொரு நாள் கழிந்து விடும்.

கடிகார முள்ளின் ஓசையில்
காலைப் பொழுது மீண்டும் விடியும்.

சரசரக்கும் சேலையுடன்
சாலையோரம் நடந்தால்
கண் மயக்கும் கோலங்களும்
செவி மயக்கும் சங்கீதமுமாய்
இந்தியாவில் மார்கழி மாதம்

இங்கோ
உச்சி முதல் பாதம் வரை
உருத்தெரியாத கம்பளியில்
முனகலாய் முகம் மட்டும் எட்டிப் பார்க்க
முறுவலிக்கும் குளிர் காலம்.

என்ன கிடைக்கவில்லை இங்கு!
நுனி நாக்கு ஆங்கிலத்தில்
நாளைய இந்தியா வளர்ந்தாலும்
வேண்டும் என்று விரும்பினால்
வேப்பம்பூ ரசமும் கிடைக்கும்
பழைய பஞ்சாங்கம் முதல்
புதிய திரைப்படம் வரை
எல்லாமே கிடைக்கும்.

பண்பாடு மறக்காதிருக்க
பல்வேறு சங்கங்கள் உண்டு
தீபாவளி, பொங்கல் என்று
திருநாள் கொண்டாட்டங்கள் உண்டு
இனிய தமிழைத் தவழவைக்க
எழிலான 'தென்றல்' உண்டு

இடை இடையே இந்தியாவை
இல்லத்தில் தருவிக்கப்
பெற்றோர் இருந்தாலும்
ஏதோவொரு குறை
இன்னதென்று சொல்லத் தெரியாத குறை.

எதையோ தேடும் மனம்.

காலாற நடந்த கடற்கரை¨யா?
அங்கு கிடைத்த வேர்க்கடலையா?
அக்கம் பக்கத்தை
அலசிச் சொல்லும் பணிப்பெண்ணையா?
எதைத் தேடுகிறது மனம்?
தெரிந்தால் சொல்லுங்களேன்!

வரலட்சுமி ரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com