மொழியைத் தீர்மானிப்பது தளமும் காலமுமே
இந்த வருடம் இந்த எழுத்தாளர் மரணப் படுக்கையில் இருக்கிறார். இவருக்கு நாம் வழங்கிவிடுவோம் என்பதை நான் எதிர்க்கிறேன். விருது என்பது இரக்கத்தின் பாற்பட்டதல்ல. இந்த எழுத்தாளர் வறுமையில் இருக்கிறார்; அவருக்கு வழங்கிவிடுவோம் என்பதையும் நான் மறுக்கிறேன். முதுமையோ, வறுமையோ அல்ல விருதைத் தீர்மானிக்கும் விழுமியங்கள். அதேபோல் மறைந்த படைப்பாளிக்கு விருதளிப்பதையும் நான் மறுதலிக்கிறேன். இந்த விருது முதிய படைப்பாளியை நிறைவு செய்ய வேண்டும். இளைய படைப்பாளியை விரைவு செய்ய வேண்டும். அப்படியாயின் ஒரு விருது போதாது. மூத்த படைப்பாளியின் ஒட்டு மொத்தப் பெரும் பணிக்குச் சாதனை விருது. இளைய தலைமுறைப் படைப்புக்கு அகாதமி விருது என்று இரண்டு விருதுகளை அறிவித்தால் இந்தக் குறைகளை ஒரளவு நிறைவு செய்யலாம் என்பது என் எண்ணம்.

மொழியைத் தீர்மானிப்பது தளமும் காலமுமே தவிர, நபர்கள் அல்ல. அடிப்படையில் நான் தமிழ் படித்தவன். தமிழ் மொழியோடும், ஒலியோடும் வாழ்வை மனதைக் கரைத்துக் கொண்டவன். அந்த வகையில் புலவர் மரபின் இறுதி எச்சம் நான் என்று நீங்கள் பழிசொன்னால் அதைப் புகழாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், ஒரு படைப்பாளி என்ற முறையில் காலத்திற்கேற்பத்தான் மொழியைக் கையாளுகிறேன்.

கவிஞர் வைரமுத்து

*****


முடியாதது என்ற சொல்லுக்கே வாழ்க்கையில் இடம் இல்லை என்ற அளவுக்குக் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் இருப்பதற்கும், அவர்களது கனவுகள் மற்றும் லட்சியங்களை நனவாக்குவதற்கும் பெற்றோர்களுக்குப் பொறுப்பு உள்ளது.

சுமார் 100கோடி மக்கள் தொகையில் 54 கோடி பேர் 25 வயதுக்குள் உள்பட்ட இளைஞர்கள். இதுபோன்ற ஆக்கபூர்வ சக்தி வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது. குழந்தைகளிடம் புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 2002-03ம் ஆண்டுக்கான தேசிய பாலஸ்ரீ விருது வழங்கும் விழாவில்...

*****


தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் தங்களை முதலில் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படத் தேவையில்லை. நாம் நமது தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை நேசிப்பதில் என்ன தவறு! நமது மூவாயிரம் ஆண்டுகால மரபை விட்டுவிடத் தேவையில்லை.

சங்க இலக்கியங்களைப் படியுங்கள். பாரதி, பாரதிதாசனை அவசியம் படியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்தி ருக்கும் படைப்புகளைப் பட்டியலிட்டுப் படியுங்கள். தொடர்ந்து படித்துக்கொண்டே இருங்கள். தொடர்ந்த படிப்பு இல்லை யென்றால் எதிர்கருத்துக் கொண்டவர்களை எதிர்கொள்வது கடினம்.

தலித்தியம், பெண்ணியம், சூழலியம் மூன்றிலும் முக்கிய கவனம் செலுத்துங்கள். தலித்துகள் சாதிக்கொடுமைகளுக்கு உட்படுகிறார்கள் என்பதை உணருங்கள். பிரச்சனையின் அடிப்படையில் ஒன்று சேருங்கள். மக்களிடமிருந்து அந்நியமாகி, மேலைநாட்டு விசயங்களின் தாக்கங்களில் எழுதிக்கொண்டிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

தி. க. சிவசங்கரன், இலக்கிய விமர்சகர், 'புத்தகம் பேசுது' மாத இதழுக்கு அளித்த பேட்டியில்...

*****


மனிதனாகப் பிறந்தவுடனேயே வாழ்வில் பிரச்சனைகள் உருவாகி விடுகின்றன. சாப்பாடு, தூக்கம், இனப்பெருக்கம், இறப்பு ஆகியவற்றுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை; மனிதனாகப் பிறந்து வாழ்ந்து விடுவதனால் மட்டுமே வாழ்க்கை முழுமையடைந்துவிடுவதில்லை.

பொருள் தன்மையில் எல்லையில்லா தன்மைக்குப் போக முயற்சி நடக்கிறது. நாம் அனுபவ நிலையில் பார்ப்பது ஐம்புலன் களின் மூலம்தான். இந்த அளவுக்குதான் வாழ்க்கை நடந்துள்ளது. பொருள் தன்மை என்பது பழத்தின் தோல் போன்றது. தோலுக்குள் ஏதோ ஒன்று உள்ளது. உள்ளுக்குள் இருக்கும் பழம் போய்விட்டால், வெளியிலிருக்கும் தோலுக்கு (உடலுக்கு) முக்கியத்துவமில்லை.

ஐம்புலன்களினால் மட்டுமே வாழ்வைப் பார்த்துத் தோலை மட்டுமே உண்டு வருகிறோம். பழத்துடன் ஒட்டியிருப்பதால் தோலிலும் அத்தன்மை சிறிது ஒட்டியுள்ளது. ஆனால் அது முழுமையில்லை.

சத்குரு ஜக்கி வாசுதேவ், ஈஷா அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 'ஞானியின் சந்நதியில்' என்ற ஆன்மீகச் சொற்பொழிவில்...

*****


அண்மையில் ஆஸ்திரேலியாவில் பந்தைச் சேதப்படுத்தியதாக ராகுல் திராவிடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள். ஒருவேளை திராவிட் தவறிழைத்திருக்கலாம். நான் ஆட்டத்தை நேரிலோ அல்லது டி.வி.யிலோ பார்க்கவில்லை. எவருமே தவறிழைக்கக் கூடும். அதுகுறித்தே மீண்டும் மீண்டும் பேசுவதில் அர்த்தமில்லை.

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் களுக்கு ஆட்ட யுத்திகள் குறித்து ஆலோசனைகளை வழங்கியதற்காக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமை பாகிஸ்தானில் உள்ளவர்கள் குறைகூறுவது தவறு.

கபில்தேவ், ஒரு பத்திரிக்கைப் பேட்டியில்...

*****


தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சமண மதக் கல்வெட்டு களாகும். மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொண்டை மண்டலப் பகுதிகளிலும் இக்கல்வெட்டுகள் அதிகம் உள்ளன. இதையடுத்துக் காவிரி நதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கண்டறியப் பட்டுள்ளன.

பல்வேறு இடங்களின் மலைப்பகுதிகளில் தொன்மை வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் அருகே கிரானைட்டுக் காக வெடி வைத்துக் கல் உடைக்கிறார்கள். இதனால் இந்தத் தொன்மை வாய்ந்த கல்வெட்டுகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி, இவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக்கல்வெட்டுகள் குறித்துப் பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் கல்வெட்டு எழுத்துக்களை 'டிஜிட்டல்'மயமாக்க வேண்டும். கல்வெட்டுகளையும் தமிழ் இலக்கியத்தையும் ஒருங்கிணைத்துத் தமிழ் வரலாறு, இலக்கணத்தைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் தேவை.

ஐராவதம் மகாதேவன், கல்வெட்டியல் அறிஞர் மற்றும் 'தினமணி' முன்னாள் ஆசிரியர், 'தென்னிந்திய வரலாற்றின் தொடக்கக் கட்டம்: தமிழ் பிராமி கல்வெட்டுகளும் அண்மைத் தொல்லியல் கண்டுபிடிப்புகளும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது...

*****


தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com