வாசகர்களுக்கு முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். இது மின்னஞ்சலில் வந்த கடிதமல்ல. இந்தப் பகுதியில் முகம் அறியாத, பெயர் தெரியாத தென்றல் சிநேகிதியோ/சிநேகிதரோ எழுதும் பிரச்சனைக்கு என் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். அதைச் சம்பந்தப்பட்டவர் ஏற்றுக்கொண்டு செயல்பட்டாரா, அதனால் ஏதாவது அவர் வாழ்க்கையில் மாற்றம் இருந்ததா என்று அறிய வாய்ப்பு இருப்பதில்லை. ஆகவே மாறுதலுக்கு, முகம் தெரிந்த, பெயர் தெரிந்த, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு சிநேகிதியின் பிரச்சினையை பற்றி எழுதுகிறேன்.
ஒரு மாதத்திற்கு முன்னால் இரவு 10 மணி இருக்கும்; வியாபார விஷயமாகத் தாய்வான் சென்றிருந்த கணவர், "காருக்கு ஆயில் மாற்றினாயா?", "பில் அனுப்பினாயா?", "அந்த கான்ட்ராக்டரைப் பார்த்தாயா?" என்று என் மேல் அக்கறையாக(?!) எல்லாக் கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். இடையில் தொடர்ந்து, விடாமல் இன்னொரு தொலைபேசி ஒலி. என் சிநேகிதி சங்கீதா. அவள் பேசுமுன்பே "வெளிநாட்டுத் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறேன். அப்புறம் கூப்பிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு என் பொறுமை மிகுந்த (இழந்த) கணவருடன் பேச்சைத் தொடர்ந்தேன். அப்புறம் அப்படியே என்னுடைய தோழியைப் பற்றி மறந்துபோய்ப் படுக்கச் சென்றுவிட்டேன்.
மறுநாள் திடீரென்று ஞாபகம் வந்து, அவள் அலுவலகத்தில் கூப்பிட்டேன். குமுறிக் குமுறி அழ ஆரம்பித்துவிட்டாள். கல்லூரிக்குப் போய்க் கொண்டே வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 150 மைல் தள்ளியிருக்கும் அவள் மகன் விக்ரமுக்கு நல்ல ஜூரமாம். ''அம்மா முடியவில்லையே... என்று அனத்துகிறான். 2 நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறான். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. நேற்றைக்கு 20 முறை கூப்பிட்டேன். அவன் திரும்பிக் கூப்பிடவில்லை. அவனை உயிரோடு நான் பார்ப்பேனா? ஏதாவது ஆகியிருக்குமா? உன்னிடம் என் துக்கத்தையும், பயத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூப்பிட்டால் நீ எப்போதும் போல 'பிசி'யாக இருந்து என்னைத் துண்டித்துவிட்டாய்'' என்றாள்.
அவளிடம் விவரத்தைச் சொல்லி, நான் மறந்து போனதற்கு மன்னிப்பைக் கோரி, பிறகு கேட்டேன் ''சுகுமார் (அவள் கணவர்) போய்ப் பார்க்கவில்லையா?'' என்று. சங்கீதா மறுபடியும் அழ ஆரம்பித்தாள். ''இதுதானே பிரச்சனை. போன வருடம் அந்தப் பெரிய விபத்துக்குப் பிறகு இப்போது ஒரு மாதமாகத்தான் நானே காரை எடுக்கிறேன். எப்படி 150 மைல் காரை ஒட்டிச்செல்வேன். நான் இப்படி அழுவது தெரிந்தும், சுகுமார் தான் போய் பார்க்கிறேன் என்று சொல்லவில்லை. என் மகன் சின்ன வயதிலிருந்து கஷ்டப்பட்டிருக்கிறான். சுகுமாரிடமிருந்து இந்த ஆதரவு இல்லாததுதான் பெரிய கொடுமை'' என்று விசும்பினாள். அவளோடு சிறிது பேசி, தேற்றிவிட்டு "விக்ரமிடமிருந்து நாளைக்குள் செய்தி வரவில்லையென்றால் எனக்கு உடனே தெரிவி. நாம் ஏதாவது செய்யலாம்" என்று சொல்லி போனை வைத்தேன்.
மறுநாள் கூப்பிட்டு விசாரித்தேன். மகன் பேசியதாகவும், ஆனால் இன்னும் படுக்கையில் தான் இருக்கிறான் என்று சொன்னாள். கணவர் இதைக் கேட்டும் பேசாமல் இருந்ததையும் குறிப்பிட்டு மிகவும் வருத்தப்பட்டாள்.
இதற்கிடையில் சங்கீதாவின் வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். வசதியான குடும்பத்தில் தந்தையின் செல்லப் பெண்ணாக வளர்ந்து, 18 வயதில் பொறியியல் படித்தவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்தாள். இவளுடைய அப்பாவித்தனத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு இரண்டு வருடங்கள் அவளுடன் வாழ்ந்து ஒரு மகனையும் கொடுத்து எல்லாக் காகிதங்களிலும் ஏதோ கையெழுத்து வாங்கி அவசர விவகாரத்து செய்தவிட்டு அவள் வாழ்க்கையிலிருந்து மறைந்து போனார் அந்தக் கணவர்.
கையில் குழந்தையை வைத்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு படிப்பை முடித்து, ஒரு வேலையில் அமர்ந்தாள். 5 வயதில் மகன் இருந்தாலும், இவள் அழகில் மயங்கி இவளை மனைவியாக ஏற்று, 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் சுகுமார். விக்ரமை வெறுக்கவில்லையே தவிர ஒரு பாசமுள்ள, பொறுப்புள்ள தகப்பனாகச் செயல்படவில்லை அவர் என்று பெற்றதாய் அடிக்கடி மனம் வெந்து, நொந்து போவாள். பெண்களிடம் காட்டும் அன்பையும், அக்கறையையும் மகனிடம் காட்டவில்லையே என்று வேதனைப்பட்டாலும், அவரிடம் அதைப்பற்றிப் பேசியது இல்லை.
இப்போதும் அதே முறையில் சங்கீதா என்னிடம் வருத்தப்பட்டாள்.
அவளிடம் நான் சொன்னேன்: சங்கீதா, தயவு செய்து இந்தமுறை நான் சொல்வது போல் செய்து பார். பயன் ஏற்படலாம். சுகுமாரிடம் மனம்விட்டு விக்ரமைப் பற்றிப் பேசு. அவரிடம் குற்ற உணர்ச்சியை ("நீங்கள் அப்படி நடக்கவில்லை, இப்படிச் செய்யவில்லை") தூண்டிவிடாதே. பதிலாக, அவரிடம் உள்ள மனித உணர்ச்சியையும், பாச உணர்ச்சியையும் தூண்டிவிடு. 'விக்ரமும் உங்கள் மகன்தானே. 5 வயதிலிருந்து தந்தையாக நீங்கள் தானே இருந்திருக்கிறீர்கள். நமக்கும் 2 பெண்களைத் தவிர அவன்தானே தலைமகன். நமக்கு ஏதேனும் ஏற்பட்டால், அவன்தான் இந்தக் குடும்பத்துக்குப் பொறுப்பேற்று நம் பெண்களைக் காப்பாற்றுவான். நம் மகனைப் பார்க்க இந்த வார இறுதியில் நாம் போகலாமா?' என்று கேட்டுப்பார்.
அதற்கு அவர் ஏதேனும் சாக்கு சொன்னால் நான் உன்னுடன் வருகிறேன். கவலைப்படாதே. உன் மகன் இப்போது உயிரோடு இருக்கிறான். அதை நினைத்துச் சந்தோஷப்படு என்றேன்.
ஒருவாரம் கழித்துச் சங்கீதா கூப்பிட்டாள். ''விக்ரம் எப்படியிருக்கான்?'' என்று கேட்டேன். ''நான் எப்போதும் நீ ஏதாவது ஆலோசனை சொன்னால், அதன்படி உடனே செய்ய மாட்டேன். இந்தமுறை, நீ சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே சுகுமாரிடம் சொன்னேன். அவர் நெகிழ்ந்துவிட்டார். 'ஆமாம்... நீ சொல்வது சரி. அவன் என் மகன்தான். அவன் என் மகன்தான்' என்று திரும்பத் திரும்பச் சொன்னார். போன சனிக்கிழமை நாங்கள் நால்வரும் போய் ஒருநாள் முழுவதும் விக்ரமுடன் இருந்துவிட்டு வந்தோம். உனக்குத்தான் தெரியுமே. சுகுமார் நன்றாகச் சமைப்பார் என்று. என் மகனுக்கு 'shrimp' பிடிக்கும் என்று ஒரு 'shrimp dish' செய்து எடுத்துக் கொண்டு போனோம். விக்ரம் பலவீனமாக இருக்கிறான். அவ்வளவுதான். நல்லகாலம் நீ சொன்னதைக் கேட்டேன். மிகமிக நன்றி'' என்றாள்.
கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு, நிலைமை மாறிவிட்டது என்று நினைக்காதே. நிலைமை தேறியிருக்கிறது என்பது தான் உண்மை. இதுபோன்ற உறவுகளை, மலையிலிருந்து கல்லெடுத்து ஒரு சிலையைச் சிற்பி செதுக்குவது போல, மிகவும் கவனமாய் வார்த்தைகளை உபயோகித்துக் கொஞ்சம், கொஞ்சமாக பலப்படுத்திக் கொண்டே வரவேண்டும். சிலை உருவான பிறகு கவலையில்லை. அதுபோல, உரசி, அலசி, உன் மகனுக்கும், கணவருக்கும் மெல்ல மெல்ல பந்தம் உருவாக்கும் பெரும்பங்கு உன்னிடம்தான் இருக்க வேண்டும்.
கேள்விகளையோ, எதிர்பார்ப்புகளையோ ஜாக்கிரதையாகத் தெரிவிக்க வேண்டும். உதாரணம்: 'உங்கள் சொந்த மகனாக இருந்தால் இப்படிச் செய்வீர்களா?' என்று கேட்பதற்குப் பதில் 'உங்கள் மகனுக்கு ஏன் இதைச் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?' என்று கேட்கும் போது, அந்த வேற்றுமை உணர்ச்சியை நீ மெல்ல அகற்றிக் கொண்டே வருவாய். அதுதான் நான் சொல்லக்கூடியது'' என்றேன்.
வாசகர்களுக்கு என் வாழ்த்துக்கள். சித்ரா வைத்தீஸ்வரன் |