பழியைத் துடைக்கவும், வருங்காலத்துக்கு வழிகாட்டவும் போராடிய போராளி
கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது.

- பிரம்மராஜன், எழுத்தாளர், 'உயிர்மை' பதிப்பக கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில்

தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்கள் தேர்தலை மனதில் வைத்து தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டக்கூடத் தயங்குகின்றனர்.

கடந்த காலத்தில் நம்மிடையே இருந்த பழியைத் துடைக்கவும், வருங்காலத்துக்கு வழிகாட்டவும் போராடிய போராளியாக அவர் திகழ்ந்தார். சுயநலத்துடன் குறுகிய வட்டத்துக் குள் இருந்தவர்களை நாட்டின் மீது பற்றுக் கொள்ள வைத்தார்.

- தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில செயலர், மதுரையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில்

இந்திய அணியின் சமீபத்திய நிலையை ஆராயும் போது 2007 உலகக் கோப்பைக்கு வலிமையான போட்டியாளராக யாரும் இல்லை. கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணி எந்த போட்டித் தொடரையும் வெல்லாத நிலையில், அணியில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். தற்போது இந்திய அணியின் மன உறுதி குறைந்துவிட்ட நிலையில் அவர்கள் சிறப்பாக விளையாட அறிவுறுத்தி நம்பிக்கை அளிக்க வேண்டும்.

- கபில்தேவ், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர், பத்திரிகை பேட்டியில்

முத்தமிழை வளர்க்க 50 ஆண்டுகளாக இந்த மன்றத்தை தொடர்ந்து நடத்தியிருப்பது பெரிய விஷயம். இப்போது இளைஞர்கள் வேறு மன்றங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா வசனம் தான் இயல், சினிமா டப்பாங்குத்து பாட்டு தான் இசை, அந்த காட்சிகள் தான் நாடகம், சினிமா விளம்பரம்தான் ஓவியம், நடிகர்கள்தான் மகாபுருஷர்கள் என்று நினைக்கிறார்கள்.

இதுபோன்று இளைஞர்களை சீரழிப்பவர் களை கண்டிக்கும் துணிச்சல் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேண்டும். இதில் நான் மட்டும்தான் அடிக்கடி மாட்டிக் கொள்கிறேன்.

- டாக்டர் ராமதாஸ், தலைவர் பா.ம.க., சென்னை மணவழகர் மன்றத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவில்

ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்ட விழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள் தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது.

- கனிமொழி, தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்

மொழிபெயர்ப்பின் மூலம் நான் அடைந்த வாசிப்பு அனுபவத்தை என் சக மனிதர்களும் அடையவேண்டும் எனும் ஆசையில் நான் மொழிபெயர்ப்பு செய்கிறபோது, நான் படைப்பாற்றல் அற்றவன் என்று எங்கே என்னை நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் என் தொடக்க நாள்களில் இருந்தது. இதனால் என் தொடக்க நாள்களின் மொழிபெயர்ப்புத் தொகுதிகளான 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்', 'காற்றுக்குத் திசை இல்லை' ஆகிய நூல்களில் புத்தகத்தைத் திறந்தவுடன் என்னுடைய சொந்தக் கவிதை ஒன்றை வைத்து எனது திறமையை வெளிக்காட்டிவிடுவேன். நாளடைவில் எனது கவிதைத் தொகுதிகள் நிறைய வெளிவந்த பிறகுதான் என்னிடமிருந்து இந்தப் பழக்கம் விலகியது. தன்னம்பிக்கை பிறந்தது.

- இந்திரன், எழுத்தாளர், பத்திரிகை பேட்டியில்

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை. கிரிக்கெட்டிற்கு கோடி கோடியாக கொட்டி ஸ்பான்சர் செய்ய நிறைய நிறுவனங்கள் முன் வருகின்றன. 'முதல் மரியாதை', 'தனி மரியாதை' தரப்படுகிறது. ஆனால், மற்ற விளையாட்டுக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதிலும் தடகள வீரர்களை கண்டு கொள்வதே யில்லை. பொருளாதார ரீதியில் தான் இப்படி என்றால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த சந்தோஷத்தையோ அல்லது தோல்வியடைந்தால் அந்த வருத்தத்தையோ பகிர்ந்து கொள்ளகூட ஆள் கிடையாது என்பது வருத்தமளிக்கும் உண்மை.

- அஞ்சு ஜார்ஜ், தடகள வீராங்கனை, பத்திரிகை பேட்டியில்

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com