கொடுப்போர் இன்றித் திருமணம் உண்டா? - பகுதி 3
சென்ற இதழில்:

தந்தைசொல்லை மீறியும் தாய் உடல் வாடினாலும் தலைவி தன் கற்பைக் காக்கவேண்டும் என்று தமிழ்மரபு சொல்வதைக் கண்டோம். அடுத்து மீதமுள்ள இரண்டு வினாக்கள்: தன்னுள்ளத்தில் புகுந்தவனை மணப்பதைத் தடுக்கும் தந்தை சொல்லை அவள் ஏற்காவிடினும் பெற்றோரே இல்லாமல் திருமணச் சடங்கு நடத்துவது எப்படித் தகும்? அது சரியானாலும், தெரிந்தோர் யாருமே இல்லாமல் காதலன் காதலி மட்டும் திருமணம் செய்துகொள்வது எப்படி அடுக்கும்? அப்படிச் செய்யும் திருமணம் ஒரு திருமண நிகழ்ச்சியா?

இவையெல்லாம் வினவ வேண்டிய வினாக்களே. அவை நம் பண்பாட்டை உண்மையாகவே உணர உதவும். தமிழ் இலக்கியம் இதற்கான தீர்வை எவ்வாறு அளிக்கிறது?

திருமணச் சடங்கைப் பற்றி அறிய நாம் தொல்காப்பியத்திற்குச் செல்லுவோம். தொல்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ள தமிழ்மொழி இலக்கண நூல்களில் பழையதாகும். அது மற்ற சமுதாயங்கள் படைத்த நூல்கள்போல் மொழியிலக்கணம் என்றால் எழுத்து, சொல், வாக்கியம் ஆகியனவற்றின் அமைப்பை மட்டும் வரையறுக்காமல் அவற்றால் உணர்த்தப்பெறும் கருத்திற்கும் இலக்கணம் வகுத்து அதைப் பொருளிலக்கணம் என்று பேசும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றோடு பொருளதிகாரமும் உடையது. இது உலகின் எம்மொழியிலும் இல்லை; வடமொழி இலக்கணத்திலும் இல்லாதது. தலைவன் தலைவிக்கு இலக்கணம் வரையறுத்துத் தமிழ்மொழி என்றாலே ஒழுக்கத்தின் ஒலிவடிவ வெளிப்பாடாக இருந்ததே காரணமாகும். அவ்வொழுக்கமே தமிழ்மொழியின் சீரிளமைக்குக் காரணமாகும்.

தொல்காப்பியத்தில் திருமணச் சடங்கிற்குப் பெயர் கரணம் என்பதாகும். தலைவனும் தலைவியும் தங்கள் தோழன் தோழி தவிரப் பிறர் அறியாமல் காதலிப்பதைக் களவியல் என்ற தலைப்பில் தொல்காப்பியம் பேசுகிறது. பிறகு ஊரார் அறிய மனைவாழ்க்கை நடத்தத் தொடங்குவதைக் கற்பியல் என்ற தலைப்பில் பேசுகிறது தொல்காப்பியம். ஏனெனில் தலைவி கற்போடு காதலிக்கும்பொழுது ஊரார் அறிய ஒரு மனையில் கூடி என்றென்றும் பிரியாமல் உறுதியாக வாழ்க்கை நடத்துவதற்கு ஆயத்தமாக இருப்பாளல்லவா? அந்த உறுதியான கற்பின் வெளிப்பாடே உலகறியத் திருமணச் சடங்கை நிகழ்த்துவது. முன்னமே காதலிக்காவிடினும் அதே உறுதியை வலியுறுத்தவே கற்பியல் வாழ்க்கை சடங்கோடு தொடங்குகிறது.

அங்கே கற்பு வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் பொழுது தொல்காப்பியம் சொல்வது:

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குஉரி மரபின் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குஉரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே
(தொல்:பொருள்:கற்பியல்:1)

[கரணம் = மணச் சடங்கு; புணர = பொருந்த;
கிழவன் = உரிமையுடைவன்]

அதாவது "கற்பென்று சொல்வது திருமணச் சடங்கோடு பொருந்திப் பெண்ணைக் கொள்வதற்கு உரிய தலைவன் ஆனவன், இன்னோர் ஆணுக்கு மனைவியாகக் கொடுக்கும் தகுதியுள்ளோர் தலைவியைக் கொடுக்கத் தன் மனையாளாகக் கொள்வது ஆகும்".

பழம்பெருந் தமிழறிஞர் நா.சுப்புரெட்டியார் அவர்களும் தம்முடைய அரிய நூலான 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' (பழனியப்பா பிரதர்சு, 1964, பக்கம்: 176) என்ற நூலில் "ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடி யொழுகினராயினும், தலைமகளுடைய பெற்றோர் உடன்பாடின்றி அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ள இயலாது. ஆகவே ஒருவரையொருவர் பிரியாது வாழ்தற்குரிய உள்ளத்துறுதியை உலகத்தார் அறிய வெளிப்படுத்தும் நியதியாகிய வதுவைச் சடங்குடன் தலைமகளை மணந்துகொள்ளுதல் மனைவாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சியாக அமைந்தது." என்கிறார்.

களவுக்காதல் உண்டோ இல்லையோ திருமணத்திற்கு முன்னர் பெண்கேட்டல் நடைபெறும். இதை வரைதல் (விரும்புதல்) என்று சொல்லுவர். முன்னமேயே காதலிப்பதைச் சொல்லாமல் வரைய (பெண்கேட்கத்) தலைவன் பெரியவர்களை அனுப்புவது உண்டு; வெளிப்படையாகச் சொல்லியே கேட்பதும் உண்டு. காதலுண்டு என்பதைச் சொல்லிக் கேட்டவுடன் பெண்வீட்டார் கண்சிவந்து வில்லில் அம்பு தொடுத்து நிற்பதையும் பிறகு அவர்களே சினந் தணிந்து இருவர்பாலும் குற்றமில்லை என்று உணர்ந்து திருமணத்திற்கு ஒப்புவது உண்டு! இதைக் கபிலர் பாடிய "காமர் கடும்புனல்" என்று தொடங்கும் மிக அழகிய கலித்தொகைப் பாட்டுமூலம் (கலித்தொகை: 39) அறியலாம். பெண்ணுக்கு ஆண் பரிசம் கொடுக்கவேண்டும்.

நாட்கணிப்பு:

அந்தத் திருமணச் சடங்குக்கு நல்ல நாளும் (நட்சத்திரம்) நாழிகையும் கணிக்கவல்ல கணியன் அல்லது அறிவன் என்று சொல்லும் சோதிடனைக் கொண்டு குறிப்பர். இதை மேற்கூறிய கபிலனின் கலித்தொகைப் பாட்டின் மூலம் அறியலாம்:

நெறிகுறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇ
(கலித்தொகை:39)

செறி குறி என்றால் இருவரும் கூடுதற்குரிய முகூர்த்தம் என்றும் அறிவன் என்பதற்குக் கணி (சோதிடன்) என்றும் நச்சினார்க்கினியர் உரைகூறுவார். காதல் திருமணமாயினும் திருமணச் சடங்கிற்குச் சங்ககாலத் தமிழர் சோதிடம் கணித்தது இங்கே கவனிக்கவேண்டிய செய்தியாகும்!
வளர்பிறையில் நிகழ்ச்சியை நடத்துவதும் அதுவும் சகடம் என்னும் உரோகிணி விண்மீன் முழுமதியத்தோடு சேரும் சமயம் மிகச் சிறப்பாகும்.

சிலம்புகழி நோன்பு:

திருமணச் சடங்கிற்கு முன் சிலம்புகழி என்னும் நிகழ்ச்சி நடக்கும். அதைப்பற்றிப் பெருமழைப்புலவர் பொ.வெ. சோமசுந்தரனார் "மணமகள் இளம் பருவத்தே தொடங்கி அணிந்துள்ள சிலம்பினைக் கழற்றுதலாகிய ஒரு சடங்கு. இச்சடங்கினை நாத்தூணங் கையர் (நாத்தனார்) செய்தன் மரபு. இக்காலத்தே கருமணி கழித்தல் என்னும் சடங்கு நாத்தூணங்கையரால் நிகழ்த்தப் படுதல் காண்க. ...சிலம்பு கழீஇச் சடங்கிற்கு மணமகள் உண்ணாநோன்பிருத்தல் மரபு ஆகலின் இதனைச் சிலம்புகழீஇ நோன்பு என்றும் கூறுப" என்று சொல்லுவார் ('ஐங்குறுநூறு' உரை, பாடல் 399, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1979).

திருமணம் நிகழும் இடம்:

சிலம்புகழிச் சடங்கும் திருமணச் சடங்கும் பெண்ணின் பிறந்தகத்தில் நடைபெறுவதே சிறப்பாகும். ஒருசில சமயங்களில் தலைவனு டன் தலைவி காதலித்து உடன் போகும்போது தலைவன் மனையிலேயே நிகழ்த்துதல் உண்டு. நா.சுப்புரெட்டியார் அவர்கள் "தலைவியின் வீட்டார் மகட் கொடைக்கு இசைந்தபின்னர் தலைவியின் வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது. ...மணிமேகலை, சீவகசிந்தாமணி, நைடதம், இராமாயணம், பாரதம், திருவிளையாடற் புராணம் முதலிய இலக்கியங்களில் கூறப்பெறும் திருமணநிகழ்ச்சிக் குறிப்புகளும் திருமணம் பெண்வீட்டில் நடைபெற்றதையே உறுதிப்படுத்துகின்றன. இன்றும் செல்வர் வீட்டுத் திருமணம் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே நடைபெற்று வருதல் உலக இயல்பாக இருத்தலை நாம் காண்கிறோம்" என்கிறார் (அதேநூல், பக்கம்: 182). ஆனால் அக்காலத்தில் மணமகன் வீட்டுக்கு மணமகள் வீடு வரதட்சணை கொடுப்பதில்லாமல் மணமகளுக்குப் பரிசம் கொடுப்பது மரபு என்பதை நினைவிற்கொள்ளல் வேண்டும். அம்மரபு நூறாண்டுகள் முன்பு கூட இருந்தது. சங்ககாலத் திருமணச் சடங்கு பற்றிய நுணுக்கத்தை அகநானூறு 86-ம் பாடலில் காணலாம்.

கொடுப்போரின்றித் திருமணம்:

நம்முடைய வினாவிற்கு மீள்வோம்: மணமகளைக் கொடுப்பார் கூட இல்லாமல் திருமணம் நிகழ்த்துவது பொருந்துமா? அதற்குத் தொல்காப்பியம் கூறும் விடை அடுத்த நூற்பாவிலேயே இருக்கிறது:

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துஉடன் போகிய காலை ஆன
(தொல்:பொருள்:2)
[கரணம் = மணச்சடங்கு; காலை = சமயம்]

"தலைவனுடன் தலைவி உடன்போகிய பொழுது திருமணச் சடங்கானது பெண்ணைக் கொடுப்பவர் இல்லாமலேயே உண்டு" என்கிறது. இதனால் ஒழுக்கக் குறைபாடு உண்டா? அந்த நூற்பாவிற்கு உரையாக இளம்பூரணர் என்னும் உரையாசிரியர் (கி.பி. 11-ம் நூற்றாண்டு) "இதனாலே கொடுப்போர் இல்வழியும் கரண நிகழ்ச்சி உண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையையும் கண்டுகொள்க" என்று கூறுகிறார். எனவேதான் அது தன்னிகரற்றவளாக இருக்கவேண்டிய தலைவிக்கு ஏற்புடையதாக இலக்கணநூலில் வகுத்துள்ளதைக் காண்கிறோம். நா. சுப்புரெட்டியார் அவர்களும் "ஒருவரும் தலைவியை ஒருவரும் அறியாமல் உடன் அழைத்துச்சென்று அவள் சுற்றத்தார் கொடுத்தலின்றியே மணம் செய்துகோடல் முற்காலத்தில் அறநெறியாகவே கருதப்பெற்றது" என்கிறார்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com