நோன்பைப் பற்றி...
மாசியும் பங்குனியும் சேருகின்ற பங்குனி மாதம் முதல்தேதியில் இந்நோன்பு செய்ய வேண்டும்.
சாவித்திரி என்னும் பத்தினிப் பெண் தன் கணவனாகிய சத்யவானின் உயிரை எமனிடமிருந்து மீட்க வேண்டி இந்த நோன்பு செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மணமான பெண்கள் கணவனுடன் சேர்ந்து வாழவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவனைப் பெறவும் இந்த நோன்பு நோற்கப்படுகிறது.
சுமங்கலிப் பெண்கள் அன்று சாதம், மோர், தயிர் ஆகியவை கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது. எண்ணெய் ஸ்நானம் செய்து, ஒன்பது கஜம் புடவை அணிந்து மடி, ஆசாரத்துடன் செய்ய வேண்டிய நோன்பாகும். நோன்பு அடை செய்து சுவாமிக்கு நைவைத்தியம் செய்துவிட்டு, சாப்பிடும் போது தெற்கு நோக்கி அமரக்கூடாது. ''நானும் என் கணவரும் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழவேண்டும்'' என்று கடவுளைப் பிரார்த்தனை செய்து நோன்புச் சரட்டை கழுத்தில் கட்டிக் கொண்ட பிறகு நோன்பு அடைகளைச் சாப்பிட வேண்டும். வெண்ணையும் கண்டிப் பாகத் தேவை. இங்கே நோன்புச் சரடுகள் கிடைக்கவில்லை யென்றால் வெள்ளை நூலை மஞ்சள்பொடி கரைத்த நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, காய்ந்தவுடன், ஓரிரு பூவைத் தொடுத்தாற் போல் சேர்த்துக் கொள்ளவும்.
இந்திரா காசிநாதன் |