பொடி போட்ட வாழைக்காய் காரக்கறி
தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
மிளகாய் வற்றல் - 5
சமையல் எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2 தாளிப்பதற்கு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

வாழைக்காயைத் தோல் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் வாழைக்காய் துண்டங்களைப் போடவும். மஞ்சள் பொடி, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வேகவிடவும்.

பின்பு தண்ணீர வடிகட்டி, வெந்த வாழைக்காய்த் துண்டங்களைச் சற்று ஆறவிடவும். கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சிறிது எண்ணெயில் வறுத்து ரவை மாதிரிப் பொடி செய்துகொள்ளவும்.

கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொண்டு, வெந்து வடிகட்டிய வாழைக்காய்த் துண்டங்களைப் போடவும். பெருங்காயம், பொடிசெய்து வைத்துள்ள கொத்துமல்லிவிதைக் கலவை, கறிவேப்பிலை போட்டு நன்றாகக் கலக்கவும். 1 நிமிடம் அடுப்பில் வைத்துப் பின்னர் இறக்கவும்.

*****


வழைக்காய்த் துவரன்

இதன் செய்முறை எல்லாம் அநேகமாக மேற்கூறியபடிதான்.

ஆனால் காரத்திற்கு, சீரகம் (1 தேக் கரண்டி), சிவப்பு மிளகாய் (2), புதியதாகத் துருவிய தேங்காய் (2 தேக்கரண்டி) ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொண்டு, பின்பு வெந்து வடிகட்டிய வாழைக்காய்த் துண்டங்களைப் போடவும். பெருங்காயம், அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவை, கறி வேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும். 1 நிமிடம் அடுப்பில் வைத்துப் பின்னர் இறக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com