நாடக விமர்சனம்: 'மாயா'
கப்பர்லி அரங்கம் நான் போகும்போதே கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது. சிரித்துக் கொண்டே வந்து முன்னுரை வழங்கிய தீபா ராமானுஜம் மனிதனுக்குள் இருக்கும் சின்னச்சின்ன பயங்களைப்பற்றிப் பேசி என்னுள் புது பயத்தை உண்டாக்கினார். நாடகம் ஆரம்பித்ததும் பயம் எல்லாம் பறந்தது. நாடகம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது. நிகழ்காலத்தில் சூர்யபிரகாஷை பழிவாங்கத் துடிக்கும் அபிராமி, சாவைப்பற்றி பயந்து வாழும் அவள் கணவன், கலகலப்பாக பேசிப்பழகும் நாடி ஜோசியர் என்று கலக்கலாக ஆரம்பித்தது. ஒரே மேடையிலே வீடு போலவும், டாக்டர் ஆபீஸ் போலவும் அமைத்திருந்தது நல்ல யுக்தி. இறந்து போன மாயாவைப் பற்றிப் பேசும்போது அவள் இப்போது கூட என்னுடன் பேசுகிறாற் போலவே இருக்கிறது என்று சொல்லி முடிப்பதற்குள் பக்கத்தில் வந்து நிற்கிறாள் மாயா. அதிலிருந்து ஆரம்பிக்கிறது அவளின் flash-back.

மாயா, துள்ளித் திரியும் ஓர் இளம் சிட்டுக் குருவி. படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் அவள் ரவிக்குமாரிடம் காதல் வயப்பட்டு அவனை செப்டம்பர் 11ல் நடந்த கொடூரத் தில் தொலைத்து விட்டுத் தனிமரமாக வீடு திரும்புகிறாள். அதிலிருந்து யாரும் 'flight' என்று சொன்னாலே நடுநடுங்கி மயங்கிக் கீழே விழுகிறாள். அவள் நிலையைச் சீர் செய்ய அம்மா மனோதத்துவ நிபுணர் சூர்யபிரகாஷை நாட, மாயா அவள் காதலித்த ரவிக்குமாரை அவனில் பார்க்கிறாள். வயது வித்தியாசம் பார்க்கா மல் உதிக்கிறது காதல். அந்தக் காதல் பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளவும் வைக்கிறது.

இதையெல்லாம் கண்ட அம்மா அபிராமி கொதித்து எழுகிறாள். மகளை மீட்டுக் கொள்ளத் தீர்மானித்து தன் வீட்டு வேலைக்காரன் (இரட்டைப் பிறவியில் ஒருவனான) விநாயகத்தை மாயாவின் வீட்டிற்கு ஆடியபாதமாக அனுப்புகிறாள். அவளிடம் சூர்யபிரகாஷைப் பற்றி அவதூறாகப் பேசி அவள் மனத்தில் அச்சத்தை உண்டு செய்கிறாள். அந்த பயமே அவளுக்கு எமனாக மாறி அவளை மாய்த்து விடுகிறது. தாய் விதைத்த விதையே வினையாகிவிட, அபிராமி சூர்யபிரகாஷை கோர்ட்டுக்கு இழுத்து தன் மகளைக் கொன்றதற்காகத் தூக்கிலிட வாதாடுகிறாள். கடைசியில் சூர்யபிரகாஷ் தான் மாயாவை கொல்லவில்லை என்றும், மாயா தானே வேகமாக டேபிளில் மோதி இறந்ததாகவும், தான் அவளை மிகவும் மிஸ் செய்வதாகவும் கூறிக் கதறி அழுது இருதயப் பிடிப்பில் உயிரை விடுகிறார்.

கதையில் எங்கும் தொய்வு இல்லை. ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருந் தாலும் மொத்தத்தில் ஒலி, ஒளி எல்லாமே அசத்தல். நடித்தவர்கள் எல்லோருமே கதாபாத்திரமாகவே மாறிவிட்டனர். மாயாவாக நடித்த தீபா ராமானுஜம் கண்களில் காதலையும், பயத்தையும் மாறி மாறிக் காட்டினார். அம்மாவாக நடித்த ஜெயா அஜீத், கணவனாக நடித்த பிரபாகர், ரவிக்குமாராக நடித்த வேணு சுப்ரமணியம், நாடி ஜோசியராக நடித்த நிர்மல் குமார் எல்லோருமே சிறப்பாக நடித்தனர். இரட்டை வேடத்தில் நடித்த நவீன் குமார் இரண்டு வேடங்களுக்கும் நல்ல வித்தியாசத்தை காண்பித்து கதையின் திருப்புமுனைக்குக் காரணமாயிருந்தார். சூர்யபிரகாஷாக நடித்த வரதராஜன் கடைசியில் "I miss her" என்று ஓலமிட்டு அழுதது மனதை உருக்கியது.

ஆங்காங்கே சீரியஸான இடத்திலும் ஹாஸ்யம் கலந்திருந்தது சிரிக்க வைத்தது. ரவிக்குமாரும் சூர்யபிரகாஷ¤ம் மாறிமாறி வந்து பேசியது மிகவும் நன்றாக இருந்தது. கனவாகவே இருந்தாலும் ரவியை நேரில் கண்டவுடன் சூர்யபிரகாஷைச் சட்டென உதறிவிட்டு இனிமேல் எல்லாம் எனக்கு ரவிதான் என்று மாயா முடிவு எடுக்கும்போது மனதுக்கு நெருடலாக இருந்தது.

நாடகம் முடிந்து வீடு நோக்கிச் செல்லுகையில் ஒரு அர்த்தமுள்ள நாடகம் பார்த்த திருப்தி மனதில் இருந்தது.

நந்தினிநாதன்

© TamilOnline.com