'பெருங்கவிக்கோ' என அறியப்படும் வா.மு. சேதுராமன் எழுதிய 'தமழீழப் பணியில் பெருங்கவிக்கோ' என்ற நூல் மார்ச் 19, 2004 அன்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. இச்சிறப்பு விழா மகேந்திரராஜா தம்பதியரால் ஒழுங்கு செய்யப்பட்டது.
வசந்தா பேரின்பநாதன், மகேஸ்வரி பாலச்சந்திரன் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழீழப் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை அஞ்சலித்து விழாத் தலைவர் நவரத்தினம் நந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினர்.
யாழன் இராமலிங்கம் சண்முகலிங்கம் நூலை அறிமுகம் செய்து பேசினார். பெருங்கவிக்கோவின் ஈழம் வாழ் தமிழர்கள் மீதான அன்பு, இந்தியாவில் இவர் நடத்திய பல பணிகளினூடாக நினைவுகூறப்பட்டது. 'தமிழின் மேல் காதல்' என்ற தலைப்பில் தமிழ் அமெரிக்க இளைஞர் அலெக்சு தொசு உரை நிகழ்த்தினார். தமிழ்ப் பெ§ற்றோருக்கு பிறந்த இவர் இளம்வயதில் தமிழ் பயிலாமல் பின்னர் இலங்கையில் நடந்த சம்பவங்களினால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் பயின்ற தன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
இந்நூல் நல்லையா மகேந்திரராசா மற்றும் நொய்வீன் மகேந்திர ராசாவினால் வெளியிடப்பட்டது. அவையோர்களில் பலர் இந்நூலைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சட்டத்தரணி மார்க்கண்டு விக்கினேசுவரர் நுலைப் பாராட்டி உரைநிகழ்த்தினார். தமிழீழ வரலாற்றில் தமிழ் வரலாற்றிலும் மறந்து போன அறியாத விஷயங்கள் பலவற்றை கோர்வையாக்கியது இவரது உரை. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அயல் மண்ணின் நிகழ்வுகளின் ஓட்டத்தில் தமிழை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பெருங்கவிக்கோவிற்கும், யாழன் சண்முகலிங்கத்திற்கும், முறையே சண்முகநாதன் மற்றும் நந்தா கணேசன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர்.
திருமதி மகேந்திரராசா 'உலகத் தமிழ் ஒலி' என்ற விருதை 'பெருங்கவிக்கோ'விற்கு வழங்கினார். சிற்குமாரின் நன்றியுரையைத் தொடர்ந்து இரவுணவோடு விழா முடிவடைந்தது.
பிரகாசம் |