சிறந்த நடனங்களின் சங்கமம்
இந்திய நாட்டியங்களில் புராதனமான 'பரதநாட்டியம்' மற்றும் 'ஓடிஸி' நாட்டியங்கள் இணைந்து அரங்கேறிய 'சங்கமம்' நடன நிகழ்ச்சி, மார்ச் 11 அன்று சான்டா கிளாரா பல்கலைக்கழகத்திலுள்ள Louis B. Meyer அரங்கில் நடைபெற்றது. விரிகுடாப் பகுதியின் பிரபல 'லாஸ்யா' நடன நிறுவனத்தின் இயக்குநர் வித்யா சுப்ரமணியன் மற்றும் பிரபல ஓடிஸிக் கலைஞர் அஸாகோ டகாமி தனித்தும், இணைந்தும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இடம்பெற்ற 'புஷ்பாஞ்சலி', 'மங்கள் சரண்' பகுதியில் இருவகையான நாட்டியக் கலைகளின் அழகும், வேறுபாடுகளும் வெளிப்பட்டன. சிவசக்தியின் தெய்வீக சங்கமத்தை விறுவிறுப்பான தாளக்கட்டு கூடிய பரதநாட்டிய பாணியில் வித்யா 'அர்த்த நாரி'யாகப் படம் பிடித்துக் காட்டினார். 'பிரளய பயோதிஜலே' என்ற ஜெயதேவர் அஷ்டபதிக்கு தசாவதரங்களைச் சித்தரித்து இருவரும் சிறப்பாக ஆடினார்கள். நரசிம்மராகத் தோன்றிய வித்யாவின் முகபாவங்களும், ஹிரண்யகசிபுவாக வந்த அஸாகோவின் நடனமும் ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றன. ஜப்பானில் பிறந்து வளர்ந்த அஸாகோ, தாம் டோக்கியோ நகரில் மாணவியாக இருக்கும்போது பார்த்த இந்திய நடன நிகழ்சியில் தன் இதயத்தைப் பறிகொடுத்தார். பிறகு பிரதானமாக ஒடிஸி மற்றும் கதக்களி, மணிப்புரி நடனங்களையும் பயின்று சிறந்த நாட்டியக் கலைஞராகத் திகழ்ந்து வருகிறார்.

ஒயிலான ஒடிஸியின் எழிலான அசைவுகளை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்தது அஸாகோவின் 'பான்ஸி தேஜ்' நடனம். இறுதியில் வந்த தில்லானா நல்ல விறுவிறுப்போடு நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது.

ஆஷா ரமேஷ், ராகவன் மணியன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிக்குப் பெரும் பலம். சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்), Phil Holleubeck (பக்வாஜ்), ராகவன் (புல்லாங்குழல்) நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். மொத்தத்தில் 'சங்கமம்' நடன ரசிகர்களுக்கு ஒரு நல் விருந்து.

ஸெளமினி

© TamilOnline.com