சியாமா சாஸ்திரிகள் தினம்
அண்மையில் லிவர்மோரில் அமைந்துள்ள சிவாவிஷ்ணு ஆலயத்தின் ஆதரவில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. கர்நாடக சங்கீத உலகில் இவரது உருப்படிகளுக்கோர் சிறப்பான இடம் உண்டு. 'ஓ ஜகதம்பா', 'நின்னவினாகமரி', 'துருஸீகா' முதலிய பல கீர்த்தனைகளையும், பைரவி, தோடி, யதுகுல காம்போதி ஸ்வரஜதிகளையும் இயற்றிக் கர்நாடக சங்கீதத்தை வளம்பெறச் செய்துள்ள சாஸ்திரிகள் சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவராகப் போற்றப்படுவதில் வியப்பில்லை. அவர் நூற்றுக்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியதாகத் தெரிய வருகிறது.

பெரும்பாலனவை தெலுங்கிலும், சில சமஸ்கிருதத்திலும், சில தமிழிலும் உள்ளன. இவரது முத்திரை 'சியாம கிருஷ்ண' என்பதாகும். மேற்கூறிய இத்தகைய அரிய தகவல்களை ஸ்ரீரத்னம் தனது வரவேற் புரையில் வழங்க விழா ஆரம்பித்தது.

முதலில் பல இசைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 'ஸரோஜதள' (பைரவி) போன்ற கடினமான கிருதிகளைப் பாடினார் கள். ரமேஷ் ஸ்ரீநிவாசன் மிருதங்கம் வாசித் தார். தொடர்ந்து கிருஷ்ணன் சகோதரிகள், சாஸ்திரிகளின் நவரத்ன மாலிகையிலிருந்து அதிகம் புழக்கத்தில் இல்லாத நான்கு கிருதி களைப் பாடினார்கள்.

சகுந்தலா மூர்த்தியின் மாணவியர், டி. பட்டம்மாள் இயற்றிய ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் சிறப்பாக பாடினார்கள.

சாஸ்திரிகளே வடிவமைத்த 'தேவி ப்ரோவ' (சிந்தாமணி), 'நன்னுப்ரோவு' (லலிதா), அபூர்வ வர்ணமான 'தயாநிதே' ஆகிவற் றைக் கலா ஐயர், வாணி ரத்னம், கல்பகம் கெளசிக், சீதா சேஷாத்திரி இணைந்து பாடினார்கள். இவர்களுக்கு நடராஜன் வயலினிலும் வாதிராஜ் மிருதங்கத்திலும் ஒத்துழைப்பு அளித்தார்கள்.

சியாமா சாஸ்திரிகளின் அரிய படைப்பு களான யதுகுல காம்போதி, தோடி ஸ்வர ஜதிகளை ஸ்ரீகாந்தும், அகிலேஷ¤ம் வீணை யிலும், அனுராதா ஸ்ரீதர் வயலினிலும் வாசித்துச் செவிகளுக்கு விருந்தளித்தனர். ஸ்ரீராம் பிரும்மானந்தம் அவர்களுக்கு அனுசரணையாக மிருதங்கம் வாசித்தார். பைரவி ஸ்வரஜதிக்கு அபிநயா நாட்டியப் பள்ளி மாணவியர் நடனமாடினர்.

அபூர்வ ராகமான 'கல்கட' ராகத்தில் அமைந்த 'பார்வதி நினு'வை குமார் மற்றும் ஜெயந்தி உமேஷ் இணைந்து பாடினர். பாரதி கலாலயாவைச் சேர்ந்த பத்மா பாஸ்கர ராகத்தில் அமைந்த 'நீலாயதாக்ஷ¢' பாடினார்.

இளைய தலைமுறையினரும், விரிகுடாப் பகுதியின் மூத்த கலைஞர்களும் ஒருங்கிணைந்து ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளுக்கு ஆராதனை செய்தது வரவேற்கத் தக்கது.

வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை ஒட்டித் தமிழ் கவிஞர்களுக்கு ஓர் ஆராதனை விழா நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kalaiyer@yahoo.com, kaku25@hotmail.com

கல்பகம் கௌசிக்

© TamilOnline.com