அப்படியல்ல இப்படி
வித்தியாசம் என்றால்
தலைகீழாய் உறங்கி
காதால் வழியறிந்து
வாயால் எச்சமிடும்
வௌவால்போல் அல்ல.

எந்த உயரத்திலிருந்தும்
மெத்தென்று நாலுகாலால்
பதவிசாய் விழுந்து
ஒவ்வாத இடுக்கிலும்
ஒய்யாரமாய் ஊடு புகுந்து
இருளிலும் வழியறியும்
பூனையைப்போல.

*****


களிமண்ணில் ஒரு வானவில்

எனக்கு எட்டுவதெல்லாம் அதுதான்.

தொடுவானம் வெகுதூரம்.
கைக்கெட்டும் தூரத்திலிருப்பது
களிமண் வயல்கள்தாம்.

அது உணவாக விளையும்,
விளைந்ததைச் சோறாக்கச்
சட்டியாகும், அடுப்புக் கட்டியாகும்.

சமைத்ததைப் படைக்கச்
சாமியாகும்,
எல்லைக் கோவிலில்
குதிரையும் யானையுமாகும்.

களிமண்ணில்
என் கால் பதியும்போது
மனசுக்குள் முளைக்கிறது
சாயம் மக்கிய வானவில் ஒன்று.

என் தலைக்குள் இருப்பதும்
அதுதான் என்று
ரொம்ப நாள் முன்னமே
அம்மா சொல்லியிருக்கிறாள்.

*****


அவரவர்க்கானது

முன்னறையில்
கேபிள் வழியே கிளுகிளுப்பு
பொழிந்துகொண்டிருக்க
பொருளறியாப் பொடிசுகளின்
உச்சக்கட்டப் புணர்ச்சிபோல
உதறல் நடனம்.

யாருக்கும் தொந்தரவில்லாமல்
கவிதையாம்
மணிப்பெயர்க் காதலியுடன்
மீண்டும்
அறைக் கதவைத்
தாழிட்டேன்
நான்.

*****


குரல், முகம், பேதம்

நீ உன் குரலை மாற்றிக்கொள்ளும் போதெல்லாம்
முகம் வேறாகிவிட்டதாய் அபிநயிக்கிறாய்.

உன் மிரட்டலுக்குச் சரிகையாய்ச் சரசமும்
வெறுப்பிற்குத் தாளிதமாய் வேண்டுதலும்
கெஞ்சலுக்கு அடிநாதமாய் அலுப்பும்
அழுகையின் ஆதாரமாய் விலகலும்
என்று
ஊடும் பாவுமாய்
பல பேதங்களில் உணர்ச்சி நெய்கிறாய்.

உன்னைப் புரிந்துகொள்வதைவிட
ரசிப்பது எனக்குச் சுளுவாய் இருக்கிறது
ஒரு கவிதையைப் போல.

*****


மதுரபாரதி

© TamilOnline.com