அமெரிக்க மாப்பிள்ளை
அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் வேறு எதைப் பற்றியும் நம்மவர்கள் யோசிப்பதில்லை. விடுமுறைக்கு வரும் ஓரிரு வாரங்களில் கல்யாணத்தை முடித்து விடுகிறார்கள். இந்திய மாப்பிள்ளை ஒருவருக்கு இப்படிக் குறுகிய காலத்தில் திருமணம் செய்து கொடுப்பார்களா?

அமெரிக்காவில் தனியார் புலனாய்வு நிறுவனங்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில் மாப்பிள்ளை பற்றிய விவரங்களை அவர்கள் மூலமாகத் திரட்டலாம். 300 டாலர் வரை செலவாகும்.

குறிப்பாக மாப்பிள்ளையின் வேலை, எந்த விசாவில் அமெரிக்கா வந்திருக்கிறார். மனைவியை எந்த விசாவில் அழைத்துச் சொல்லத் தயாராக இருக்கிறார். சட்ட ரீதியாக உரிய ஆவணங்களை ஒழுங்காக வைத்திருக்கிறாரா என்பதையெல்லாம் பெண் வீட்டுக்கார்கள் விசாரிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் இருவரும் விட்டுக் கொடுத்து பொறுமையாக இருந்தால் போதும். பிறகு பெரிய பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.

கவிதா, அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க 'மித்ர' அமைப்பை நடத்துபவர், பத்திரிகைப் பேட்டியில்...

*****


அணு ஆயுதம் வைத்திராத நாடுகளுக்கு எதிராக இந்தியா ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது, இருப்பினும் அணு ஆயுதத்தால் தாக்கப்படும்போது அதை பயன்படுத்தத் தயங்காது.

நமது அணு ஆயுதங்கள் பாதுகாப்பு நோக்கத்துக்காகவே உள்ளன. அதை அமைதி நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்த விரும்புகிறோம். அதை தவறாகப் பயன்படுத்த விரும்பவில்லை.

1995ல் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து அணுகுண்டு சோதனையை ரத்து செய்தார் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ். ஆயினும் 1998 மே, 13ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. நாட்டின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் நல்கியது.

யஷ்வந்த் சின்ஹா, வெளியுறவுத்துறை அமைச்சர், பா.ஜ.க. தொண்டர்களிடையே பேசியது...

*****


ஒரு கமிஷன் ஒரு விஷயத்தை எதற்காக ஆராய்கிறது? யார் மீதும் குற்றமில்லை என்று சொல்வதற்காக அல்ல; அவர்களின் குற்றத்தைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் ஆராய்கிறது. தி.மு.க. மீது குற்றமில்லை என்று சொல்லப்படவில்லை. ஆனால், அதன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று சொல்வது மிகவும் தவறு. தி.மு.க. மீது குற்றம் சாட்டப்பட்டதா? என்பதுதான் இங்கே கேட்க வேண்டிய கேள்வி. தி.மு.க மீது குற்றம் சாட்டப்படவில்லை என்றால், அக்கட்சி மீது குற்றமில்லை என்றுதானே அர்த்தம்?

கபில் சிபல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ஒரு பேட்டியில்...

*****


மோட்டார் வாகனத்தில் வெறுமனே அமர்ந்திருந்தால் மட்டும் போதாது. அதைச் செலுத்த வேண்டும். பயணிக்க வேண்டும். மேடு, பள்ளம், வளைவு, நெளிவு, சுளிவு அனைத்தையும் கடக்க வேண்டும். முன்னேற்றமும் இப்படித்தான். எனவே பட்டம் பெற்ற மகளிராகிய நீங்கள் மாற்றத்துக்கு வித்திட வேண்டும்.

இன்னும் நாம் எழுத்தறிவில் 60 சதவீதத்தைத் தாண்டவில்லை. 70 சதவீத மக்கள் அடிப்படைச் சுகாதார வசதி இல்லாமல் உள்ளனர். சமூகத்தில் இதுபோன்ற பல சிக்கல்களும் பின்னடைவுகளும் உள்ளன. இதைப் போக்க நீங்கள் பாடுபடவேண்டும்.

ஆனந்தவல்லி மகாதேவன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சென்னை ராணிமேரி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசியது...

*****


இந்தத் தலைமுறையில் ஓர் இசைக் கலைஞருக்கு விருது வழங்கி விழா எடுத்தால் இதே இசைத் துறையைச் சேர்ந்த வேறு எந்த ஒரு இசைக் கலைஞரையும் அந்நிகழ்ச்சியில் பார்க்கமுடியவில்லை. சக கலைஞரை ஊக்குவிப்பதைவிட விமர் சனங்கள்தான் ஜாஸ்தி. போட்டி மாத்திரம் அல்ல, பொறாமையும் அதிகம். சபாக்களிலும் திறமையின் அடிப்படையில் சரிசமமான வாய்ப்புகள் கிடையாது.

சுபஸ்ரீ ராமச்சந்திரன், வளர்ந்து வரும் இசைக் கலைஞர், பத்திரிகைப் பேட்டியில்...

*****


பழந்தமிழ் அறிஞர்கள் பலர் இந்த மேடையில் வீற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. புதுக்கவிதையை விமர்சித்து பழ. கருப்பையா பேசினார். நவீன இலக்கியக் கூட்டங்களில் இதுபோன்ற மாற்றுக் குரல்கள் பதிவாக வேண்டியது முக்கியம். நவீன இலக்கியக் கூட்டங்களில் பழந்தமிழ் அறிஞர்கள் பங்கேற்றுத் தங்கள் கருத்து களை முன்வைப்பது ஆரோக்கியமான மாற்றம்.

இதுவரை எனது எல்லா நாவல்களையும் ஆனந்த நிலையில்தான் எழுதினேன். ஆனால் எனது 'ஏழாம் உலகம்' நாவல் அப்படி அல்ல, பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் இது. எனது நாடோடி வாழ்க்கையின் போது பழனியில் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் விளைந்தது. மிகப் பயங்கரமான அனுபவங்கள் அவை. என் நினைவில் இருந்து அவற்றைத் துரத்த வேண்டும் என்றுதான் முயன்றேன். ஆனால் முடியவில்லை. இப்போது நாவலாக உருப்பெற்றுவிட்டது.

ஜெயமோகன், சென்னையில் நடைபெற்ற ஐந்து நூல்கள் வெளியிட்டு விழாவில் பேசியது...

*****


தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com