களிமண் பிள்ளையார்
சுகன்யாவின் மடியில் கிடந்தாள் இந்து. தேம்பித் தேம்பி அழுததில் முகமெல்லாம் வாடிப்போய், உடம் பெல்லாம் சிவந்து, வாரி முடிந்த சுருள்முடித் தலை கலைந்து, பசி மயக்கத்தில் கிடந்தாள் அவள். காலையில் ஒரு டம்ளர் பால் குடித்த தோடு சரி, சாப்பிடமாட்டேன் என்று அடம். ''சாயந்தரம் வரும் போது அப்பா பப்பர்மின்ட் வாங்கிண்டு வருவேன். சமர்த்தா இருக் கணும்'' என்று பெயருக்குக் குழந்தையை சமாதானப்படுத்திவிட்டு வெள்ளைப் பையை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றுவிட ஸ்ரீனிவாசன் மேல் சுகன்யாவுக்கும் கோபம்.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த வெள்ளைப் பையில்தான் சதுர்த்திக்கு வேண்டிய எல்லாம் ஸ்ரீனிவாசன் சந்தை யிலிருந்து வாங்கி வந்தான். அருகம்புல், எருக்கு மாலை, மாவிலை, பூ, பழம் என எல்லாவற்றோடும் வந்து இறங்கிய களிமண் பிள்ளையாரைப் பார்த்ததும் இரண்டரை வயது இந்துவுக்கு ஒரே குதூகலம். தும்பிக் கையும் தொந்தியுமாய் களிமண் நிறம் மாறா மல் வீற்றிருந்த பிள்ளையாரின் உருவம் அவளை அப்படியே கவர்ந்துவிட்டது. ''பிள்¨யார் ஒம்மை... அப்பா! அப்பா! அயகா இக்கு...'' என்று கைகொட்டி உடல் சிலிர்க்கச் சிரித்தாள்.

அன்று இரவு பிள்ளையார் பொம்மைக்கு அருகில் அமர்ந்துதான் சாப்பிடுவேன் என்று அடம். பொம்மைக்குப் பக்கத்தில் அமர்ந்தாலே குஷி. கையைப் பொம்மைக்குப் பக்கத்தில் கொண்டுபோய் தொடாமல் ஒற்றி ஒற்றித் திரும்பி அம்மாவின் முகத்தைப் பார்த்து சிரிப்பாள். பூஜை அறைக்கு மெதுவாகச் சென்று ஓர் ஓரத்தில் அமர்த்தி யிருந்த பிள்ளையாரைப் பார்ப்பாள். தானாய் ஏதோ பேசுவாள். ஓடிவிடுவாள். அன்று இரவு தூக்கத்தில் சிரிப்பு, கை கொட்டல்... மனமெல்லாம் பிள்ளையார் 'ஒம்மை' ஆக்ரமித்திருந்தது.

சதுர்த்தி அன்று பூ அலங்காரம், சந்தனப் பொட்டு எல்லாம் மின்ன, பொலிவாய் பூஜையில் அமர்த்தப்பட்டிருந்தார் பிள்ளை யார். எப்போதும் சமையலறையில் சுகன்யா வேலையாய் இருக்கும்போது ''அதைக் கொடு, இதைக் கொடு'' என்று படுத்துவாள். அன்று கொழுக்கட்டை எல்லாம் தயாராகும் போது இந்து பூஜையறையில் ஸ்ரீனிவா சனின் பக்கத்தில் அடக்கமாய் அமர்ந்து கொண்டு அர்ச்சனை பதார்த்தங்களின் நடுவே உட்கார்ந்திருந்த பிள்ளையாரையே கண்கொட்டாது பார்த்தவண்ணம் இருந்தாள். கொழுக்கட்டை நைவேத்யம், தீபா ராதனை எல்லாம் ஆனதும் விழுந்து விழுந்து அப்பா, அம்மாவின் நடுவில் நமஸ் கரித்தாள். மோதகக் களிப்பில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த பிள்ளையாரின் அருகில்தான் அன்றும் உண்ணல், விளையாடல் எல்லாம். ''உம்மாச்சி ரெஸ்ட் எடுத்துக்கட்டும்'' என்று கையைத் தொட்டு இழுத்தால் நகராமல் அடம்.

அன்றிரவும் கழிந்தது...

மறுநாள் காலை எழுந்ததும் படுக்கையை விட்டு நேராய் பூஜை அறைக்கு வந்து நின்றாள். ஸ்ரீனிவாசன் குளித்துவிட்டு அறைக்குள் நுழைந்தான். புனர்பூஜையும் முடிந்தது.

அதுவரை களிப்புடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த இந்துவின் மனதில் பதட்டம். கண்களில் சொல்ல முடியாத அதிர்ச்சி. ஸ்ரீனிவாசன் பிள்ளையார் பொம்மையை விஸர்ஜனத்திற்குத் தயார்ப் படுத்தினான். மாலை, பூணூல் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு வெள்ளைப் பைக்குள் பொம்மையை இட்டு முன் அறைக்குக் கொணர்ந்தான். தெருக் கோடியில் இருக்கும் கோயிலில் ஊரார் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போகும் பிள்ளையார் பொம்மைகளை கோயில் குருக்கள் விஸர்ஜனம் செய்வார். அலுவலகத்திற்குப் போகும் வழியில் பொம்மையைக் கோயிலில் கொடுத்துவிட்டுப் போக ஸ்ரீனிவாசன் பைக்கின் மீது ஏறியதுதான் தாமதம்... ''வீர்'' என்று அலறினாள் இந்து.

''உம்மாச்சியை அவர் வீட்டில கொண்டு போய் விடணும் கண்ணா, அடுத்த வருஷம் அவர் திரும்பி வருவார்டா கண்ணா'' என்றெல்லாம் சொல்லியாயிற்று. ஹ¥ம்.. ஹ¥ம்.. அவள் எதையும் கேட்பதாயில்லை. பிள்ளையார் இரண்டு நாட்கள் சிநேகிதராய் வீட்டிலேயே இருந்து அவள் மனதில் அவளோடு விளையாடிவிட்டு திடீரென்று கிளம்பிய அதிர்ச்சி. துயரம். புரண்டு அழுதாள். ஸ்ரீனிவாசன் ''அப்பா பப்பர் மின்ட் வாங்கிண்டு வருவேன்'' என்று சொல்லிவிட்டு சுகன்யாவின் தடுப்பையும் மீறி அலுவலகத்திற்குத் தாமதம் ஆகிவிட்ட அவசரத்தில் பைக்கை கிளப்பிக் கொண்டு போயே விட்டான்.

அன்று நாள் முழுக்க இந்துவுடன் பட்டபாடு சுகன்யாவுக்குத்தான் தெரியும். வண்ண வண்ண கொலு பொம்மைகளைக் காட்டியும் பலனில்லை. அழுது அழுது சோர்ந்தே போனாள் இந்து.

மாலை ஏழு மணி. ஸ்ரீனிவாசன் சட்டைப்பையிலிருந்து பப்பர்மின்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். இந்து படுக்கையில் கிடந்தாள். ஜூரம் நூறு டிகிரி இருக்கும். பதறினான் ஸ்ரீனிவாசன். சுகன்யாவும் செய்வதறியாது அவனைப் பார்த்தாள். குழந்தையின் மனதைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்த கொண்டதை இருவரும் உணர்ந்தனர். விஸர்ஜனத்திற்குக் கொடுத்துவிட்ட பிள்ளையாரை எப்படி மீட்பது? பொம்மை இந்நேரம் கரைந்து கோயில் கிணற்றில் போயிருக்குமே. கையைப் பிசைந்தனர். ''நாளை கோயிலில் எதற்கும் சென்று பார்க்கலாம். ஒருவேளை பொம்மை இருக்கக்கூடும்'' என்று தைரியப்படுத்திக் கொண்டனர். இரவெல்லாம் இந்து தூக்கத்தில் அழுகை, பேற்றல். மருந்து சற்றே ஜூரத்தைக் கட்டுப்படுத்தி இருந்தாலும் உடம்பு மெலிசாய்ப் போய் சோர்ந்து தலையணைக் குவியலில் ஓரமாய்க் கிடந்தாள்.

மறுநாள் காலை ஸ்ரீனிவாசன் முதல் வேலையாய் பைக்கை முடுக்கிக் கொண்டு தெருக்கோடிக் கோவிலுக்குச் சென்றான். அரசமரத்தடியில் பல வண்ண பொம்மைகள் நடுவே களிமண் நிற விநாயகர் தெரிய தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டான். கன்னத்தில் போட்டுக் கொண்டு, மூன்று தோப்புக்கரணங்களையும் போட்டுவிட்டு பிள்ளையாரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

நேராகப் படுக்கை அறைக்குச் சென்று லேசாய் சிணுங்கிக் கொண்டிருந்த இந்துவின் கண்களில் பொம்மையைக் காட்ட அவள் முகம் மெல்ல மலர்ந்தது. திரும்பி சுகன்யாவைப் பார்த்தான் ஸ்ரீனிவாசன். செய்த காரியம் சரியானது தான் என்று ஒருவரை ஒருவர் சமாதானப் படுத்திக் கொள்வது போல் இருந்தது அவர்கள் பார்வை.

வெ. சந்திரசேகரன்,
சன்னிவேல்

© TamilOnline.com