வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாரதத்தில் யுத்தம் நடந்து வந்த காலம். தன் ஆதர்ச புருஷர் மகாத்மா காந்தியைப் போன்ற கொள்கைப் பிடிப்பு, இரும்பு மனிதர் சர்தார் பட்டேலைப் போன்ற உள்ளத்துடிப்பு, மூதறிஞர் இராஜாஜியின் உள்ளத்தின் விருப்பு - இத்தனை சிறப்புகள் பெற்றிருந்த அந்த மாமனிதர் தன் படைகளோடு சத்தியாகிரகம் செய்கிறார் - சர்தார் வேதரத்னம் பிள்ளை. 'உப்பெடுத்தவரை உள்ளளவும் நினைக்கச் செய்தவர். 1950 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகம் மூலம் நாட்டிற்காக உலகத் தியாகம் செய்தார் வேதாரண்யத்தில்.
ஏப்ரல் 14, 2000. ராஷ்டிரபதி பவன், புதுடெல்லி. அந்நாளைய ஜனாதிபதி மேதகு கே.ஆர். நாராயணன் 'டாக்டர் அம்பேத் கார் விருது' வழங்கும் காட்சி. நலிவுற்றவர் ஏற்றம் காண அருந்தொண்டு ஆற்றிய மைக்கு அங்கீகாரம். விருதைப் பெற்றுக் கொள்பவர் அ. வேதரத்தினம், நிர்வாக அறங்காவலர், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம்.
நாடு போற்றும் சுதந்திர போராட்டத் தியாகியாக அரசாங்கமே தபால்தலை வெளியிட்டு கெளரவிக்கும் வண்ணம் தியாக வாழ்வு வாழ்ந்த தன் அருமைப் பாட்டனார் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் நினைவுகள் இந்த வேதரத்னத்தின் மனதில் ஓடுகின்றன. அவர் காட்டிய வழியில் அயராது உழைத்து அரும் பணியாற்றிய தன் அன்புத் தந்தை பத்மஸ்ரீ MJE வே. அப்பாகுட்டி அவர்களின் நினைவுகள் மறுபக்கம்.
வேதாரண்யம் - திருமறைக்காடு என பண்டை நாளில் கொண்டாடப்பட்ட திருத்தலம். இங்கே இன்றும் நடக்கும் அந்தப் புனித வேள்வியின் பெயர்: கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம்.
அண்ணல் காந்தியடிகளின் நிர்மான திட்டங்களில் ஒன்றான பெண் கல்வியை மையமாகக் கொண்டு சர்தார் வேதரத்னம் பிள்ளை அவர்களால் 1940ஆம் ஆண்டு துவங்கப்பெற்று பின் பொலிவோடு அவர்தம் குமாரர் அப்பாகுட்டி அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று அவர் தம் புதல்வர் வேதரத்னம் அவர்கள் மேல்நோக்கில் இன்னும் விரிவாக, பரிவாக கிராமப்புற பெண்களுக்கும் ஏதிலியருக்கும் செம்மையாய்ச் சேவை செய்யும் நிறுவனம் தான் வேதாரண்யத்தில் விளங்கும் இந்தக் குருகுலம்.
உணவு, உடை, உறையுள் மற்றும் என்றும் ஒளிதரும் ஜோதியாம் கல்வியும் தந்து அற்புதத் தொண்டாற்றி வருகிறது குருகுலம். தாய் தந்தை அற்றோருக்கு எந்த நேரமும் புகலிடம் உண்டு. வறுமையில் வாடும் சிறுமியருக்கும் இங்கு வாழ்வு உண்டு. ஆக பல நிலைகளில், வழிகளில் கிராமப்புறப் பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு பணியாற்றும் குருகுலத்தின் சில முக்கிய செயல்பாடுகளைக் காண்போம்:
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயிலும் மேல்நிலைப் பள்ளி மூலம் கல்விச்சேவை.
அச்சுத்தொழில், தையல் பயிற்சி, வங்கிப்பணிப் பயிற்சி, வானொலி - தொலைக்காட்சித் தொழில்நுட்பம், சித்த மருத்துவப் பயிற்சி போன்ற தொழிற்கல்வி வகுப்புகள்.
கடந்த 57 ஆண்டுகளாக அணையா அடுப்பு அன்னபூர்ணாலயம் வழங்கும் அன்னதானம்.
ஏதிலியருக்கு இலவசத் தங்கும் விடுதி மற்றும் அனைத்து அடிப்படைத் தேவைகளின் பூர்த்தி.
அதுமட்டுமல்ல, பொறுப்புமிக்க பெற்றோரைப் போல நல்ல மாப்பிள்ளை பார்த்து இப்பெண்களுக்கு குருகுலம் திருமணம் செய்வித்து வைக்கின்றது.
இப்பெண்கள் இல்லறம் புகுந்து பிள்ளைகள் பெற்ற பின்னும், தம் மழலையருடன் தங்கள் தாய்வீட்டுக்கு விடுமுறைக்காக வருகின்றனர். குருகுலம் என்ற தாய்வீடு, அவர்களுக்கு அன்புகாட்டி உபசரித்து மகிழ்கின்றது.
போதாது. இன்னும் செய்ய வேண்டுவன உண்டு. வரைபலகையில் உள்ளவை:
செவிலியர் பயிற்சிப் பள்ளி, மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி துவங்குதல்
அச்சுக்கலைப் பயிற்சி விரிவாக்கம்
சித்த மருத்துவக் கல்லூரி துவங்குதல்
பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பித்தல்
இவற்றைச் செய்ய நல்லோரும் பொருள் வல்லோரும் உதவவேண்டும். அப்போதே கனவு நனவாகும்.
இது ஆடம்பரக் கனவல்ல. ஏழை மகளிர் வாழ்வில் ஒளிகூட்டும் அவசியக் கனவு. நீங்கள் மனது வைத்தால் நனவாகும் கனவு. மனம் திறக்கட்டும், வாழ்வுகள் மலரட்டும்.
அஞ்சல் வழி முகவரி: கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், த.பெ. எண் 12, வேதாரண்யம், 614812, தமிழ்நாடு, இந்தியா.
அமெரிக்காலிருந்து வங்கிகள் மூலம் நன்கொடை அனுப்பலாம். அதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்ட இணையத் தளத்தில் உள்ளன:
இணையத் தளம்: www.gurukulam.org
மின்னஞ்சல்: gurukulamvdm@yahoo.co.in
புதுயுகன் |