உங்களிடம் ஒரு வெயிட்டான சமாசாரத்தைப் பகிர்ந்துக்கொள்ள வந்திருக்கிறேன் நீங்கள் தயாரா? அதாவது என்னுடைய 62 வயதிற்கு என்னுடைய உடல் எடை அதிகமாக இருப்பது ஒன்றே அந்த வெயிட்டான சமாச்சாரம். நான் இந்த 100 கிலோ எடையை எந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் கட்டணமும் கொடுக்காமல் விமானம் மூலம் அமெரிக்கா எடுத்து வந்தேன். கூடவே எனது மனைவியும் பயணம் செய்தாள்.
எனது மனைவியின் எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாமலே எனது அன்றாட வாழ்க்கை நடந்தது. வாய்க்கு வேண்டியதெல்லாம் என்னிடம் பட்டியல் வாங்கிக் கொண்டு மருமகள் சமையலறையில் தயாரித்துக் கொடுக்க நான் சுகமாக அவைகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன். எனக்குப்பிடித்த பிஸ்கெட் வகைகளை மொத்தவிலையில் வாங்கி வந்து அவற்றையும் மாலை நேரச் சிற்றுண்டியாகச் சுவைத்து வந்தேன். இப்படியாக இரண்டு மூன்று மாதங்கள் ஓடின. எனது மகனும், மனைவியும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தார்கள். என்ன விஷயம் என்று விசாரித்ததில் பிள்ளைத்தாச்சியாக இருக்கும் எனது மருமகளுக்குப் போட்டியாக எனது வயிறும் பெரிதாக வளர்ந்ததே என்று தெரிய வந்தது.
இதைச்சாக்காக வைத்து எனது மனைவி என்னிடம் உங்கள் உடம்பு இப்படியே போனால் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. எனவே நீங்கள் காலை, மாலை வாக்கிங் செய்ய ஆரம்பியுங்கள் என்று வலியுறுத்தவே அரை மனதுடன் அதற்குச் சம்மதித்தேன். நான் உள்ளப்படியே நடக்கிறேனா அல்லது எங்காவது சாலை ஓர பெஞ்சில் உட்கார்ந்து சாலையில் செல்லும் கார்களை வேடிக்கை பார்ததுவிட்டு வீடு திரும்பிவிடுகிறேனா என்ற சந்தேகத்தில் மனைவியும் உடன் நடக்க எங்கள் வாக்கிங் பயிற்சி தொடங்கியது.
நடக்க ஆரம்பித்துவிட்டதால் எங்கே உடம்பு இளைத்துவிடுமோ என்ற பயந்து சாப்பாடு மற்றும் உபரி அயிட்டங்களைக் குறைக்காமல் பார்த்துக் கொண்டேன். அவ்வப்போது பெரிய மால் போன்ற கடைகளுக்குப் போக நேர்ந்தால் கார் நிறுத்துமிடத்திலிருந்து மால் வரை - உள்ளேயும் சென்று திரும்பவும் கார் பார்க்கிங் வரை நடக்க இருந்த தூரத்தை என்னுடைய அன்றைய வாக்கிங் நிறைவு செய்வதாகக் கூறி வழக்கமான நடைக்கு லீவு போட்டுவிடுவேன். இப்படியாக எனது சந்தோஷமும் உடம்பும் போட்டி போட்டி வளர்ந்தன. பிறகு குளிர்காலம் ஆரம்பித்தவுடன் அதைச் சாக்காக வைத்து வாக் போவதைத் தவிர்த்துவிட்டேன். இந்நிலை யில் ஜனவரி மாதம் ஒருநாள் என்னுடைய மகிழ்ச்சிக்கு வந்ததே ஒரு தடை!
ஆம். ஒருநாள் இரவு டிவி பார்த்துவிட்டுப் படுத்தவன் மறுநாள் காலை கண்விழித்தவுடன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. சரியாக நடு இடுப்பில் பின்பாகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. என்னால் சுயமாக எழுந்திருக்க இயலவில்லை. மனைவி உதவி செய்ய எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். குனிய முடியவில்லை. காலைக்கடன்களைக் கழித்தபின் என் நிலை எப்படி இருந்தது என்றால் குத்துச்சண்டையில் தோற்றவன் எந்த நிலையில் இருப்பான் என்பதை வைத்து ஊகம் செய்யலாம். அன்றுமுதல் கைவசம் வைத்திருந்து வலி மாத்திரைகளைக் காலி செய்ய ஆரம்பித்தேன். பலன் ஏதும் கிட்டியபாடில்லை. பிறகு மகனிடம் சொல்லி ஒரு டாக்டரிடம் உடம்பைக் காண்பித்து மருந்து வாங்க வேண்டும் என்று நச்சரித்தேன். ஒரு வழியாக ஐந்து நாட்களில் ஒரு டாக்டரைப் பார்க்க நேரம் கொடுத்தார். அந்த டாக்டரம்மா கருணையுடன் ஒத்துக் கொண்ட கன்சல்டேசன் பீஸ் 65 டாலர். (இந்திய ரூபாயில் சுமார் 3,500 என்று என் மனம் புலம்பியது). இதன் பிறகு மருந்து மாத்திரை சுமார் 18 டாலர். இதைத் தொடர்ந்து எனது உடம்பு எடை குறைக்க வேண்டும் என்ற அறிவுரை.
அதில்தான் எனது சோகவாழ்க்கை ஆரம்பமானது. இதுவரை காலையில் பல் தேய்த்ததும் ஹார்லிக்ஸ் அல்லது சாக்லேட் மணக்கும் காபி. பிறகு தோசை, பொங்கல், அடை, உப்புமா, இட்லி போன்றவற்றில் ஒன்றுடன் துணையாக கொத்சு. சட்னி அல்லது சாம்பார் வகையறா. மாசம் ஒரு முறை பூரிமசால். மதியம் முழுச் சாப்பாடு. இரவு மீண்டும் புதிதாக சமைத்துச் சாப்பாடு அல்லது டிபன். மாலை வேளைகளில் காபிக்கு முன்பாகக் கடலை வகையறா, பொரியல் வகையறா, பஜ்ஜி, பக்கோடா அல்லது நொறுக்குத் தீனி அயிட்டங்கள் ஏதாவது ஒன்று உண்டு. இந்தப் பந்தி மரியாதை அனைத்தும் என்னிடம் கேட்காமலே விடைபெற்றுவிட்டன. பதிலாக- காலையில் நோ காபி, பிறகு 9 மணிக்கு 2 டபரா அளவு சோள அவல் பாலில் தோய்த்தது.
மதியம் ஒரு கிண்ணம் சாதத்துடன் அதற்கு தேவையான அளவில் சாம்பார் அல்லது ரசம் மற்றும் மோர். தொட்டுக்கொள்ள ஒரு கிண்ணம் வெந்த காய்கறி அல்லது சமயத்தில் பச்சைக் காய்கறி. வறுவல், அப்பளம்... ஊஹ¥ம், மூச்சு விடக்கூடாது! மாலை மட்டும் டீ அல்லது காபி. கொறிக்கிற விஷயம் போயே போச். இதுமாதிரி சுமார் ஒருமாத காலம் ஓட்டியும் எடை 3 கிலோவுக்கு மேல் குறையவில்லை. இப்போதும் சதத்தை விட்டு எடைமுள் இறங்கவில்லை. பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னதில் தினம் ஆப்பிள், ஆரஞ்சு, கிருணிப்பழம் என்றெல்லாம் சாப்பிட ஆரம்பித்தேன். போகப் போக பழத்தை கண்டால் - திராட்சைத் தோட்டம் சென்ற நரியைப் போல - போதும் இந்தப் பழம் என்று அலுப்புத்தட்டியது.
வெளியில் குளிர் இருப்பதால் வாக்கிங் நடக்கமுடியவில்லை. எனவே எங்களது பிளாக்கிலேயே நீண்ட தாழ்வாரத்தில் நாளைக்கு மூன்றுவேளை நடக்க ஆரம்பித்தேன். எனது பேரன் என்னுடன் சேர்ந்து நடக்க- இல்லை இல்லை- ஓடிஓடி வர ஆரம்பித்தான். அவனது 30 பவுண்டு எடை ஒரு வாரத்தில் 28 பவுண்டாக குறைந்தது தெரிந்ததும் மருமகளுக்கு என் மீது பயம் வந்துவிட்டது. எனது மனைவிக்கு நான் இதுமாதிரி டயட்டில் மாட்டிக் கொண்டது பற்றிய சந்தோஷத்தில் அவளின் சுகர் ஏறிக் கொள்ள ஆரம்பித்தது. பிப்ரவரி மாதத்தில் ஒரு சில நாட்களில் வெயில் அடிக்க ஆரம்பித்தது. அந்த நாட்களில் மனைவியுடன் காலை நேரங்களில் வாக் சாலை யோரமாக நடைபாதையில் போய் வந்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் சன் டிவி செய்திகளில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய செய்திகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எனது மனைவியோ என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ''இப்போது நாம் வெளியே வாக்கிங் போக ஆரம்பித்தவுடன் இதுமாதிரி செய்திகள் வருகின்றன போல'' என்று சொன்னாள். அதாவது நிலநடுக்கத்திற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லலாமல் சொல்கிறாளாம்.
எனது டயட்டை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு புளியஞ்சாதம், அடை, வடை, உப்புமா என்று எனது மனைவியின் காட்டில் ஏக மழை.
இன்னும் இந்தியா திரும்ப இரண்டு மாதம் ஆகும். அதற்குள் எனது எடை குறிப்பிட்ட அளவு இறங்காவிட்டால் இந்தியாவிலும் இதே உணவைத் தொடர வேண்டும் என்று எனது மகன் அம்மாவுக்கு அன்புக்கட்டளை இட்டிருக்கிறான். எனது மனைவியோ இந்த யோசனையை நிச்சயம் தட்டமாட்டாள் என்றே நினைக்கிறேன்.
எனவே இந்த விஷயத்தைப் படிப்பவர்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அதுவும் ரகசியமாக இப்போதெல்லாம் ஆசிரமங்களில் நல்ல சாப்பாடு வசதி இருப்பதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு அப்படி ஓர் ஆசிரமம் தெரிந்தால் சொல்லுங்கள். நான் இந்தியா சென்றதும் நேராக அந்த ஆசிரமத்தில் முழுநேர ஊழியனாகச் சேர்ந்து விடுகிறேன். எனது எடைப் பயணம் அத்து டன் நிற்கட்டும். எனது இந்தஅனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் என் உடல் எடை குறையாவிட்டாலும், என் மனது கனம் குறைந்த மாதிரித் தோன்றுகிறது. அதுவரையில் வெற்றிதானே?
சம்பந்த மூர்த்தி |