உண்மைச் சம்பவம் - யார் அவள்?
திங்கள் கிழமை, ஜனவரி 7, 1985. லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையம். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள், அவரவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு சுங்கம் மற்றும் குடியுரிமை வரிசைக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒருபெரிய நீலநிறப் பெட்டி யாரும் எடுக்காமல் நெடுநேரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. விமானநிலைய ஊழியர் அந்தப் பெட்டியை பெல்ட்டில் இருந்து வெளியில் வைக்கிறார். இம்மாதிரி யாரும் கோராத பெட்டிகளைச் சுங்கத் துறையினர் எடுத்துப் பரிசோதிப்பது வழக்கம். பெரும்பாலும் போதை மருந்து கடத்துபவர்கள் சில காரணங்களுக்காக பெட்டியை எடுக்காமல் விட்டுவிடுவார்கள்.

நாளின் இறுதியில் சுங்க இலாகாவைச் சேர்ந்தவர் இந்தப் பெட்டியை நோக்கிச் சென்றார். அதனருகே சென்றதும் அவருக்குச் சந்தேகம் வந்தது. அந்தப் பெட்டியின்மேல் எங்கிருந்து, எந்த விமானத்தில் அந்தப் பெட்டி வந்தது என்ற அடையாளம் எதுவும் இல்லை. அந்த அடையாளம் இல்லாமல் விமானநிலைய ஊழியர்களால் சரியான பெல்ட்டிற்கு அனுப்ப இயலாது. வெளியிலிருந்து யாரும் சுங்கத்தைக் கடந்து பெட்டியை எடுத்து வந்திருக்க முடியாது. சந்தேகத்துடன் அந்தப் பெட்டியைத் திறந்து போதை மருந்து பொட்டலங்கள் இருக்கிறதா என்று கையை விட்டுத் துழாவினார். ஏதோ ஒன்று தட்டுப்பட, வெளியே இழுத்துப் பார்த்தார்.

அது ஒரு மனிதக் கை.

இது கொலைக்கேஸ் என்று தோன்றவே லாஸ் ஏஞ்சலஸ் மாநகரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பெட்டியைத் திறந்தனர்.

உள்ளே ஒரு பெண்ணின் உடல் கால்களை மடித்த நிலையில் இருந்தது. அதனுடன் சில வாழைப்பழங்களும், ஆங்கிலம் அல்லாத வேற்று மொழியில் ஒரு குறிப்பும், வேற்றுநாட்டு நாணயமும் இருந்தன. அந்தப் பெண் சிறிய உடல் கட்டுடையவள். அந்தக் குறிப்பு உருது அல்லது அரபுமொழி என்று நினைத்தனர். பின் அரபுமொழி பேசும் ஒருவரது உதவியால் அது பார்ஸிமொழி என்று தெரியவந்தது. அது ஈரான் நாட்டில் பரவலாகப் பேசப்படும் மொழி.

ஈரான் நாட்டில் அப்போது மதக்கலவரம் நடந்து கொண்டிருந்தது. ஷாவின் ஜனநாயக அரசு கவிழ்க்கப்பட்டு, மதத் தலைவரான அயட்டொல்லா ·கொமேனி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். 52 அமெரிக்கரைக் கைதிகளாக வைத்திருந்தார். அதனால் அந்தப் பெண் ஈரானில் கொலை செய்யப்பட்ட அமெரிக்கப் பெண்ணாக இருக்கலாம் என்று கருதினர். ஆனால் அவள் அமெரிக்கப் பெண்ணாகத் தெரியவில்லை. மேலும் ஈரானிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விமானப் போக்குவரத்து அப்போது கிடையாது. ஆசியா, தென்னமெரிக்கா அல்லது மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருதினர்.

தென்னமெரிக்கா, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சில போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் போதை மருந்தை நிரப்பி விழுங்கிவிடுவார்களாம். பின் அமெரிக்கா சேர்ந்தவுடன் வயிற்றிலிருந்து வரும் கழிவிலிருந்து அந்த பிளாஸ்டிக் பைகளை எடுத்துவிடுவார்கள். சில சமயம் அந்தப் பை கிழிந்தால் போதைமருந்து வயிற்றில் கலந்து இறக்க நேரலாம். அப்படித் தென்னமெரிக்கா/மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் என்றால், பார்ஸி மொழிக் குறிப்பு எப்படி வந்தது? யாராவது கொலை செய்துவிட்டு, திசைதிருப்புவதற்காகப் பார்ஸி குறிப்பு வைத்து விமானத்தில் ஏற்றிவிட்டனரா?

இதற்கெல்லாம் விடை காணச் சடலப் பரிசோதனை நடந்தது. அப்பெண்ணின் வயிற்றில் போதை மருந்து எதுவுமில்லை. அதனால் அவர் ஆசியாவை, குறிப்பாக ஈரானை, சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைத்தனர். மேலும் அவர் வயிற்றில் ஜீரமணமாகாத வாழைப்பழம் இருந்தது. அதனால் அவர் இறப்பதற்கு முன் வாழைப்பழம் சாப்பிட்டு இருக்கவேண்டும். பிரேத பரிசோதனையில் அப்பெண் இறப்பிற்கு காரணம் 'மூச்சுத்திணறல்' என்று குறிப்பிட்டிருந்தது. மூச்சுத் திணறல் என்றால் கழுத்தை நெறித்து அல்ல. ஏனென்றால் கழுத்துப்பகுதி எந்தக் காயமும் இல்லாமல் இருந்தது. இத்தனை தடயங்கள் இருந்தும், பெட்டியில் ஓர் அடையாளமும் இல்லாததால் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறையால் இந்த கொலைக்குத் தீர்வு காணும் முயற்சியில் முன்னேற முடிய வில்லை.

உலகெங்கிலும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் இச்செய்தி வந்தது. யார் அந்தப் பெண்? தற்செயலாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? யாரால் கொலை செய்யப்பட்டார்? எங்குக் கொலை செய்யப்பட்டார்? காவல்துறை விடைதெரியாமல் தவித்தது.

லாஸ் ஏஞ்சலஸிலிருந்து 400 மைல் வடக்கில் இருக்கும் சாக்ரமென்டோ நகரம். பார்பரா எப்போதும் போல் காலையில் தன்னுடைய இரு பிள்ளைகளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் ஓட்டுனர் பக்கம் ஜன்னல் கண்ணாடி முழுவதும் தூளாக உடைந்து கிடந்தது. அருகில் சென்று பார்த்த பார்பரா, உள்ளே ஒருவர் உட்கார்ந்த நி¨லையில் இறந்து இருப்பதைப் பார்த்து 911ஐக் கூப்பிட்டார்.

உடனே வந்த போலீஸ், இறந்தவர் உட்கார்ந்து இருந்த நிலை, துப்பாக்கி மற்றும் தடயங்களை வைத்து அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று ஊகித்தனர். அவரது சட்டையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை வைத்து விலாசத்தைக் கண்டுபிடித்து அவரது வீட்டிற்குச் சென்றனர். அங்கு இருந்தவரிடம் விசாரணை நடத்தியவுடன், அவர்கள் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறையைத் தொடர்பு கொண்டு சில தடயங்களை அனுப்பி வைத்தனர். அதைக் கொண்டு அந்தப் பெண் யார், எப்படி இறந்தார் என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்த்தனர். அப்படி என்னதான் அந்த வீட்டிலிருந்தவர் சொன்னார்?

காரில் தற்கொலை செய்துகொண்டவர் பெயர் மகமூத். வீட்டிலிருந்தவரும் மகமூத்தும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். மகமூத் சமீபத்தில் ஈரான் நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு வெகுநாட்களாகத் தான் காதலித்து வந்த ஷபானாவுடன் திருமணம் செய்ய நினைத்தார். அதற்கு ஷபானாவின் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, இருவரும் அங்கிருந்து ·பிரான்க்·பர்ட் வந்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் ஷபானாவுக்கு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் விசா நிராகரிக்கப்பட்டது. செய்வதறியாது திகைத்த மகமூத் ஷபானாவை ஈரானுக்குச் சென்றுவிடும்படி கூறினார். மகமூத் மட்டும் அமெரிக்கா செல்லலாம் என்றும், சில மாதங்கள் கழித்து ஷபானாவுக்கு விசா விண்ணப்பிக்கலாம் என்றும் யோசனை கூறினார்.

மறுபடியும் ஈரானுக்குப் போனால் என்னவாகும் என்று ஷபானாவால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஷபானாவை ஒரு பெட்டிக்குள் வைத்து அமெரிக்கா எடுத்துச் செல்வது என்ற விபரீத முடிவுக்கு வந்தனர் . ஷபானா சிறிய உடல்வாகு உள்ளவர் என்பதால் ஒரு பெட்டிக்குள் காலை மடக்கி உட்கார்ந்து கொண்டார். பசித்தால் சாப்பிடுவதற்குச் சில வாழைப்பழங்களைப் பெட்டிக்குள் வைத்தார். ·பிரான்க்·பர்ட்டில் பெட்டியை லாஸ் ஏஞ்சலஸ¤க்கு விமானமேற்றினார்.

ஆனால் ஷபானாவின் தூரதிருஷ்டம், விமானத்தின் சரக்குப் பகுதியில் பெட்டியை வைக்கும் போது அவர் இருந்த பெட்டி கீழே வைக்கப்பட்டு மேலே கனமான பெட்டிகள் ஏற்றப்பட்டன. அதனால் அவர் பிராண வாயு இல்லாமல் மூச்சுத்திணறி இறந்தார். அதனால்தான் சடலப் பரிசோதனையில் கழுத்தை நெறித்துக் கொலை செய்த அடையாளம் எதுவும் இல்லை. ·பிரான்க் ·பர்ட்டில் இருந்து விமானம் புறப்பட்ட சில நேரத்தில் ஷபானா இறந்திருக்கக் கூடும்.

லாஸ் ஏஞ்சலஸ் வந்திறங்கிய மகமூத் பெட்டியை எடுத்தவுடன் உள்ளே கையை விட்டு ஷபனாவிடம் அமெரிக்கா வந்துவிட்டோம் என்று சொல்ல முயல, அப்போதுதான் அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. சோகம் தாளாமல் அவர் பெட்டியிலிருந்த விலாச அட்டையைக் கழட்டியபின், பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் சாக்ரமெண்டோ வந்துவிட்டார். வந்து தன் நண்பனிடம் நடந்தவற்றைக் கூறி அழுது இருக்கிறார். எனினும் சோகம் தாளாமல் மறுநாள் தன் காரில் உட்கார்ந்து துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

வீட்டில் இருந்த சரக்கு அடையாள அட்டை (baggage tag), மகமூத், ஷபானா இருவரின் பாஸ்போர்ட் ஆகியன அங்கிருந்தவர் சொன்னதை உறுதி செய்தது.

இன்னும் லாஸ் ஏஞ்சலஸ், சாக்ரமெண்டோ காவல்துறையினரால் இந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குச் செல்லமுடியாமல், தன் கணவனுடன் எப்படியாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஷபானாவின் விருப்பத்தால் எடுத்த விபரீத வழியால் இருவரும் இறக்க நேரிட்டது. மகமூத், ஷபானா பெற்றோர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது உடல்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டன.

வடிவேல்

© TamilOnline.com