ஆண்டுதோறும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக சித்திரை மாதத் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது.
மதுரையில் திருமலை நாயக்கமன்னர் ஆட்சி செய்த காலத்தில், கோயிலின் ராஜ கோபுரம், புதுமண்டபம், திருமலை நாயக்கர் மகால் போன்ற சிற்பக் கலையம்சம் கொண்ட கட்டங்கள் கட்டப்பட்டன. இந்த மன்னரின் சிலை இன்றும் கோயில் பிரகாரத்தில் காணப்படுகிறது. திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் பிரதி வருடமும் மாசி மாதம் நடைபெற்று வந்தது. மீனாட்சி கோயில் திருவிழாவையும் சித்திரை மாதத்திற்கே மாற்றியமைத்த பெருமை மன்னர் திருமலை நாயக்கருக்கே உரியது.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் மீனாட்சி கோயிலில் கொடியேற்றப்பட்டு பதின்மூன்று நாட்களுக்கு விழா நடத்தப்படுகிறது. கொடியேற்றிய நாள் முதல் அம்மனும் சுவாமியும் மாசி வீதியில் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனத்தில் வலம் வருவர். திருவிழாவின் எட்டாம் நாளன்று மீனாட்சி அம்மனுக்கு வைரகிரீடம் சூட்டி, கையில் தங்கச் செங்கோல் தந்து பட்டாபிஷேகம் நடத்தப்படும். ஒன்பதாம் நாள் தடாதகைப் பிராட்டியாரின் 'திக்குவிஜயம்' நடைபெறும். இதற்கு அடுத்த நாள் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் மண்டபத்திற்கு எழுந்தருளுவர். இங்குதான் இந்த தெய்வீகத் திருமணம் நடைபெறும்.
இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காணத் தன் மனைவி தெய்வானையுடன் சுப்பிர மணியர் முதல்நாள் இரவே மதுரையம் பதியை அடைந்து, மறுநாள் காலை கல்யாண உற்சவத்திற்காக அதிகாலையே வந்து அமர்கிறார். மீனாட்சியம்மையை தாரைவார்த்துக் கொடுக்க பவளக்கனி வாய்ப் பெருமாளும் விஜயம் செய்கிறார். பிறகு குறிப்பிட்ட திருமண நேரத்தில் அங்கயற்கண்ணி அம்மைக்கும், ஆலவாய் அழகனுக்கும் திருமணம் நடக்கிறது. மீனாட்சியின் சார்பாக ஒரு பட்டரும், சுந்தரேசுவரர் சார்பாக இன்னொரு பட்டரும் மாற்றிக் கொள்கின்றனர். பின்னர் அம்மனுக்கு வைரத்தாலி அணிவிக்கப்டுகிறது. இந்த மங்கள நிகழ்ச்சி முடிந்த பின்னர் கோயில் சார்பாக மாங்கல்யச் சரடும், மஞ்சளும் தருவது வழக்கமாக இருக்கிறது. பின்னர் தன் கணவருடன் வந்து மங்கலச் செல்வி அருள்பாலிப்பார். திருமணம் முடிந்த மறுநாள் காலை, மாசிவீதிகளில் மீனாட்சியும் சுந்தரேசுவரரும் திருத்தேரில் உலா வருவர். இத்துடன் திருக்கல்யாண உற்சவம் நிறைவு பெறுகிறது.
திருத்தேர் அன்று காலை அழகர் மலை யில் இருந்து அழகர் புறப்பட்டுத் தங்கப்பல்லக்கில் ஏறி நிறையச் சீருடன் தன் தங்கை திருமணத்திற்கு வருவார். நடுவில் கள்ளந்திரி என்ற ஊரில் அவருக்கு கள்ளர் திருக்கோலம் அமைத்து கள்ளழகராக மதுரை வருகிறார். வரும் வழியில் நிறைய மண்டகப்படிகளில் இவருக்கு வழிபாடு நடத்தப்படும். அம்பலகாரர் மண்டகப்படியில் மாலை 6.30 மணியளவில் சுவாமி வந்தவுடன் வாண வேடிக்கை தொடங்கும். அப்படியொரு வாணவேடிக்கை, அற்புதமாக இருக்கும்!
இப்படி வரும் அழகரை அவர் வரும் வரை காத்திருக்காமல் மக்கள் எதிர் நோக்கிப் போய் பார்ப்பது மிகவும் புண்ணியமாகும். இதற்கு ''கள்ளழகர் எதிர் சேவை'' என்பர். பின்னர் நடுஇரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் காட்சி அளிப்பார். ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார் சூடி அனுப்பிய மாலை ஒன்றும் இவருக்கு அணிவிக்கப்படும். மல்லிகை மலர்களால் அணிவிக்கப்பட்ட தங்கச் சப்பரத்தில் கருப்பணசாமி கோயிலில் காட்சி கொடுக்கிறார். அழகர் திருவிழா முடிந்தபின்பு மதுரை மல்லிகைப் பூவிற்கு மணம் இல்லை என்று கூறுவர். சித்திரா பெளர்ணமி நாளான அன்று விடியற்காலையில் வைகை ஆற்றில் அழகர் இறங்குவார். இந்தக் காட்சி மிக அற்புதமாயிருக்கும். அழகர் ஆற்றில் இறங்குவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும். இவரது வருகைக்காக வீரராகவர் வைகையில் காத்திருந்து இவரிடம் மீனாட்சியின் மணம் முடிந்ததைக் கூறுகிறார்.
அழகரும் மணம் வருந்தி வண்டியூர் நோக்கிப் புறப்படுகிறார். வழியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பின் சில மண்டகப்படிகளில் தங்குகிறார். இதில் ராமராயர் மண்டகப்படியில் தசா வதாரக் காட்சி மிக தத்ரூபமாக நடை பெறுகிறது. பின்னர் அழகர் மலைக்கு திரும்புவழியில் கள்ளந்திரியில் நடைபெறும் கோழிச்சண்டை மிகவும் பிரசித்தி பெற்றது. அழகர் பெருமாள் அழகர் மலையைச் சென்று அடைந்தவுடன் சித்திரைத் திருவிழாவும் இனிது முடிகிறது.
சரஸ்வதி தியாகராஜன், அட்லாண்டா |