தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாளின் காலையில் கொங்குநாட்டில் ஒரு மரபு பின்பற்றுகிறார்கள்.
சித்திரை முதல்நாளுக்கு முந்தைய இரவில், ஒரு நல்ல நேரத்தில் ஒரு கண்ணாடி முன் ஒரு தாம்பாளத்தில் ஐந்து வகைப் பழங்கள், நகை, காசுபணம், பூ மற்றும் வெற்றிலைபாக்கை வைத்து விட்டுத் தூங்கப் போவார்கள். புத்தாண்டு அன்று காலையில் எழுந்தவுடன் முதன்முதலில் கண்விழித்துப் பார்ப்பது கண்ணாடி வழியாகக் கண்ணாடிமுன் உள்ள தாம்பாளத்தை. அந்த ஐந்து வகைப் பழங்கள் எலுமிச்சை, மா, பலா, வாழை மற்றும் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம்: திராட்சை, சப்போட்டா போன்றவன. சிலர் ஒன்பது அல்லது பதினொன்று வகைப் பழங்களையும் வைப்பதுண்டு. இந்த மரபு கேரளாவிலும் பரவலாகப் பின்பற்றப்படுகிறதாம்.
கண்ணாடி அளவற்ற சிறப்புடைய எட்டு மங்கலப் பொருட்களுள் ஒன்று என்பது தமிழர்கள் நம்பிக்கை. 1100 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய திவாகரம் என்னும் தமிழ்மொழி நிகண்டு கூறுகிறது:
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி முரசு விளக்கு பதாகை இணைக்கயல் அளவில் சிறப்பின் அட்டமங் கலமே (திவாகரம்:2407)
[காவரி = சாமரம்; தோட்டி = அங்குசம்; பதாகை = கொடி; இணைக்கயல் = இரட்டைக் கயல்மீன்]
எனவே புத்தாண்டை அத்தகைய மங்கலப் பொருளைப் பார்த்துத் தொடங்குவது சிறப்பே.
காலையில் எழுந்தவுடன் வேறெதையும் பார்க்கக் கூடாது என்பதால் இந்தச் சித்திரைக்கனிக்கு மிக அருகிலே ஒருவராவது படுத்திருந்து சேமமாகச் சென்று கண்ணாடி வழியே சித்திரைக்கனியைப் பார்த்தபின்னர் மற்றவர்களை வழிநடத்தலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்குமே! புத்தாண்டை மங்கலத்தோடும் குதுகுது என்று குதுகலத்துடனும் தொடங்குவதுபோல் ஆகும்.
பெரியண்ணன் சந்திரசேகரன் |