மகாமக விழா
தமிழகத்தில் வானளாவி நிற்கும் பெரும்பாலான சைவ வைணவ ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றாலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வானவியல், ஆன்மீகம் போன்றவற்றின் சிறப்புகளுக்குச் சான்று கூறுவனவாய் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 34 ஆலயங்களும், 108 வைணவ ஆலயங்களில் 9 ஆலயங்களும் குடந்தை என்று அழைக்கப்படும் கும்பகோணத்திலேயே காணப்படுகின்றன. இதனால்தான் இவ்வூர் 'கோவில் மாநகர்' என்றும் அறியப்படுகின்றது போலும். குடந்தை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் பிற்காலத்தில் கும்பகோணம் என்ற பெயரில் அருணகிரி யார் வாக்கில் திருப்புகழில் முதன்முதல் இடம் பெற்றது.

திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களின் சமயப்பணிகளும், சாரங்கதேவரின் வீர சைவமடம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் நிறுவிய சங்கரமடம், ஸ்ரீ அஹோபிலமடம், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் மடம் ஆகியவற்றின் சமயப்பணிகளும், கும்பகோண ஆலயங் களின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்திருக் கின்றன. கணிதமேதை இராமானுஜம் அவதரித்த ஊர், சங்க இலக்கியப் பொக்கிஷத்தைத் தேடித் தந்த உ.வே. சாமிநாதய்யர் கல்லூரிப் பேராசிரியராய்த் தமிழ் கற்பித்த ஊர் என்ற பெருமையும் கும்பகோணத்திற்கு உண்டு.

பெரும்பாலும் நதிக்கரைகளிலும் ஆற்றங் கரைகளிலும் கோயில்கள் அமைவதுதான் தமிழகத்தின் பெருமைக்குரிய செய்தி. அந்த அளவில் காவிரி ஆற்றுக்கும் அரிசிலாற்றுக் கும் இடையில் அமைந்த ஊர் கும்ப கோணம். 'அரி சொல் ஆறு' என்பது தான் அரிசிலாறு என்று வழக்கில் மருவி வந்துள்ளதாய்ச் சொல்வார் உண்டு. இங்கு திரும்பும் இடமெல்லாம் கோயில்களும் கோபுரங்களும் கண்ணுக்கு விருந்தாய்க் காட்சி அளிக்கின்றன.

கும்பகோணம் என்றால் நினைவுக்கு வருவது மகாமகம். வடக்கே அலகாபாத்தில் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுதலைக் குறிக்கும் பிரபலமான திருவிழா 'கும்பமேளா' என்றழைக்கப்படுகின்றது. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி புஷ் கரிணியில் நீராடும் விழாவும் இது போன்றதே. ஆனால் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழா, சற்று வேறு பட்டது. முதலில் குறிப்பிட்ட இரண்டு விழாக்களும் நதியிலும் ஆற்றிலும் நீராடும் விழா. தமிழ்நாட்டு மகாமகப் பெருவிழா குளத்திலே நீராடும் விழா.

காசிக்கும் கங்கைக்கும் இல்லாத சிறப்பு கும்பகோணத்திற்கு இருப்பதைக் குறிக்கும் ஸ்லோகம் ஒன்று உண்டு.

''அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்
புண்ய க்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்
வாரணஸ்யாம் விநச்யதி |
வாரணிஸ்யாம் க்ருதம் பாபம்
கும்பகோணே விநச்யதி |
கும்பகோணே க்ருதம் பாபம்
கும்பகோணே விநச்யதி ||

இதன் பொருள்: அந்நியத் தலங்களில் செய்யும் பாவம் ஏதாவதொரு புண்ணிய க்ஷேத்திரத்தில் பரிகாரப்படும். புண்ணியத் தலங்களில் செய்யும் பாவம் வாரணாசியில் (காசி) பரிகாரப்படும். வாரணாசியில் செய்யும் பாவமோ கும்பகோணத்திலே பரிகாரப்படும். கும்பகோணத்தில் செய்யும் பாவம் எல்லாம் கும்பகோணத்தில் மட்டுமே பரிகாரப்படும்.

காசியைக்காட்டிலும் சிறந்தது கும்பகோணம் என்பது இது சொல்லும் உண்மை.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் தம்மு டைய பாசுரத்தில் ஓரிடத்தில் 'கங்கையின் புனிதமாய காவிரி' என்று பெருமை பேசுகிறார்.

மகாமகம் என்றால் என்ன?

12 ஆண்டிற்கொருமுறை மாசிமாதத்தில் மகநட்சத்திரத்தில் குரு சிம்மராசியிலும், சூரியன் கும்பராசியிலும் சேர்கின்ற நாள். அது பெளர்ணமி தினமாகும். அன்று பகலில் ரிஷப லக்னத்தில் இந்தச் சேர்க்கை நிகழும் தருணம்தான் மகாமகப் புண்ணிய காலமென்று கூறப்படுகிறது.

ஏதாவதொரு மகாமகத்தில் பெளர்ணமி யன்று மாசிமகம் இருந்தும், குரு சிம்ம ராசியில் சேருவது தாமதமாகிப் போகும். பெளர்ணமிக்கு அடுத்த நாள் குரு சிம்மராசியில் சேர்ந்தாலும் சேரும். இருந்தபோதிலும் பெளர்ணமியன்றே மகாமகம் கொண்டாடப்படும். 1945ம் வருட மகாமகம் இவ்வாறே கொண்டாடப்பட்டது.

மகாமகக் குளம்

பிரளய காலத்தில் சிவபெருமான் ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி வெள்ளப் பிரவாகத்தில் மிதக்க விட்டுவிட்டு, பின்னர் கும்பத்தைக் குறிபார்த்து சிவபெருமான் அனுப்பிய அஸ்திரம் பட்டுக் கும்பம் உடைந்து அதிலிருந்து சிந்திய நீர்தான் மகாமகக்குளம் ஆயிற்று என்றும், அவ்வூர் குடந்தை ஆயிற்று என்றும் புராணம் பேசுகிறது.

இந்தக் குளம் தேவ தச்சனால் கட்டப்பட்டது என்று புராணம் கூறுகிறது. இக்குளத்தில் மக்கள் இறங்கி நீராடப் படிக்கட்டுகள் அமைத்த பெருமை 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சை நாயக்க மன்னர் பரம்பரையில் வந்த அச்சுதப்ப நாயக்கரைச் சேரும். அவர் அளித்த திரவியத்தைக் கொண்டு அவரிடம் அமைச்சராயிருந்த ஸ்ரீ கோவிந்த தீக்ஷ¢தர் இக்குளத்தைச் சுற்றி மண்டபங்களைக் கட்டினார் என்று வரலாறு கூறும். மேலும் கோவிந்த தீக்ஷ¢தர் தாம் ஈட்டிய செல்வம் அனைத்தையும் கும்பகோணத்திலுள்ள ஆலயப்பணிகளுக்கும், பொதுநலத் தொண்டிற்குமே செலவழித்திருக்கிறார். அவர் பெயரில் கும்பகோணத்தில் நடந்து வரும் வேதபாடசாலை இன்றைக்கும் அவரது பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

அச்சுதப்ப நாயக்கர் தன் எடைக்கு எடை துலாபாரம் செய்து தந்த பொன்னைக் கொண்டு கும்பகோணப் பெருமாள் கோயிலைக் கட்டியதாக தமிழக வரலாறு கூறுகிறது. இவர்களைப் போன்ற மன்னர் களும் வள்ளல்களும் கொண்டிருந்த இறைபக்தியும் வள்ளல் தன்மையும் சமயவளர்ச்சிக்கும் அறப்பணிகளுக்கும் உதவியிருப்பதோடு வரலாற்றில் அவர்கள் பெயரை நிலைபெறச் செய்திருக்கின்றன.

மகாமக புண்ணிய தீர்த்த வரலாறு

மஹா - மா - அகம்.

அகம் = பாவம் மா= பற்றாது. பாவம் பற்றாத மகாதீர்த்தம் என்பது பொருள். புண்ணிய நதிகளில் நீராடுவதால் மக்கள் தங்கள் பாவங்களைத் தீர்த்துக் கொள்வ தாக காலங்காலமாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. நதிகளின் அதிதேவதைகளான கங்கை, யமுனை, நர்மதை, ஸரஸ்வதி, கோதாவரி, காவிரி, கன்னி (மகாநதி) பயோஷ்னி (பாலாறு) சரயூ என்ற நவகன்னியரும் ஒரு சமயம் பரமேஸ்வரனிடம் சென்று மக்கள் பாவங்களைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதால் தங்களிடம் சேரும் மாசினைப் போக்க வழி கேட்டனர். இறைவனும் அவர்கள் கும்பகோணம் சென்று நீராடினால் மாசு நீங்குவதுடன் இனி எந்த பாவமும் ஒட்டாத நிலையும் உண்டாகும் என்று அருளிச் செய்தாராம்.

கங்கே ச யமுனே சைவ நர்மதா ச
ஸரஸ்வதி
கோதாவரி ச காவேரி கன்யா நாம்னா
மஹாநதி
பயோஷ்ணீ ஸரயூ ஸ்சைவ நனவதாஸ்
ஸரித: ஸீபா |

என்று ஒன்பது நதிகளின் பெயரைச் சொல்லிக் குளத்தில் நீராடுவது மரபு.

நவகன்னிகள் என்பதால் 'கன்யா தீர்த்தம்' என்றும், 'அறுபத்தாறு கோடி தீர்த்தம்' என்றும் இது அழைக்கப்படுகின்றது. குளத்தின் வடகரையில் பிரம்மதேவர் நீராடியதால் பிரம்மதீர்த்தம் என்றும், இந்த தீர்த்தம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்ய உகந்தது என்றும் கூறப்படுகிறது. பதினாறு பேறுகளையும் தரவல்லது என்று போற்றப்படும் கங்கா தீர்த்தத்தில்தான் காஞ்சி காமகோடி முனிவர் நீராடுவது வழக்கம்.

மகாமகக்குளத்தில் முதலில் நீராடி, அடுத்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி, மூன்றா வதாகக் காவிரியில் நீராடிவிட்டு கும்பேஸ் வரர் ஆலயம் சென்று கும்பேசுவரரை வழிபடுவது இங்கு ஐதீகமாக உள்ளது.

சோடசலிங்க மண்டபங்கள்

மகாமகக்குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்களில் தனித்தனியாக சிவலிங்கத் திருமேனி வடிவில் உறையும் ஈஸ்வரனுக்கு தனித்தனியாக 16 திருநாமங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் வடக்கே காசிவிஸ்வநாதர் ஆலயமும், கிழக்கே அபிமுக்தீஸ்வரர் ஆலயமும், மேற்கே கெளதமேசுவரர் ஆலயமும் தெற்கே பாணபுரீஸ்வரர் ஆலயமும் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய கோயில்கள்.

தீர்த்தவாரி

உபய ப்ரதான §க்ஷத்திரம் என்று கும்பகோணத்தை சிறப்பித்து கூறுகிறார்கள். காரணம் இங்குள்ள மூலவருக்கு உள்ள முக்கியத்துவம் உற்சவர்க்கும் உண்டு. மகாமகவிழா அன்று கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், விசுவேஸ்வரர், அபிமுக்தீஸ் வரர், சோமேஸ்வரர், கெளதமேஸ்வரர், காமேஸ்வரர், கோடீஸ்வரர், பாண புரீஸ்வரர், கம்பட்ட விஸ்வேஸ்வரர் ஆகிய பத்து ஆலயமூர்த்திகளை மேலே குறிப்பிட்ட மண்டபங்களில் எழுந்தருளச் செய்து தீர்த்தம் அளிப்பது வழக்கம். இவர்களில் கும்பேசுவரர் முதன்மை பெறுகின்றார். ஆதிகும்பேசுவரர் என்று அழைக்கப்படும் ஈஸ்வரன் ரிஷபாரூடராய் எழுந்தருளியிருக் கும் அழகும் ரிஷபத்தின் அழகும் கண் கொள்ளாக்காட்சி.

மகாமகக் குளத்தின் நடுவில் அமைந்த 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் சங்கமிக்கும் 'அமிர்தவாவி'யில் நீராடுவோர் தோஷங்கள், பயங்கள், குற்றங்கள், நோய்கள் போன்றவை நீங்கி, கல்வி, செல்வம், பொன், பதினாறு பேறுகள், ஆரோக்கியம், ஞானம், அனைத்தும் கூடப்பெற்று எண்ணி எண்ணியாங்கு எய்த, அசுவமேத யாகம் செய்த பலனும் கிட்ட, பித்ருக்களைக் கடையேற்றித் தாமும் வானுலக வாழ்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.

*****


பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் 22ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (4.4.2004) அன்று பங்குனி உத்திரம். பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா இது. அன்றைக்குப் பௌர்ணமி நாளுமாகும். முருகனின் திருமண நாள், ஐயப்பனின் (ஸ்ரீ தர்ம சாஸ்தா) பிறந்தநாள் என்பதாக மட்டுமல்லாமல் வைணவக் கோவில்களிலும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்ய நன்மையும், நீர் அபிஷேகம் செய்ய நினைத்தது நிறைவேறுதலும், சர்க்கரை அபிஷேகம் செய்யச் சந்தோஷமும், இளநீர் அபிஷேகம் செய்ய இணையில்லா வாழ்க்கையும் உண்டாகும் என்பர் பெரியோர்.

மீனத்தில் குரு வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் பங்குனி மாதம் வரும் உத்திரம் சிம்மத்தில் இருப்பதால் இந்த விரதத்தை மேற்கொண்டு முருகப் பெருமானைத் தரிசிப்பது எல்லா நலன்களையும் தரும்.

*****


நேரடித் தகவல் - அடையாத கதவு, அன்பான வழிகாட்டல்

ஊர் எல்லைக்கு வெளியே வசதியாக வரிசையாக இடம் ஒதுக்கி வெளியூர் களிலிருந்து வந்த வாகனங்களையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டனர். உள்ளூரிலும் மகாமக தினமாகிய மார்ச் 6ஆம் தேதியன்று அரசு வழங்கிய சிறப்பு அனுமதிச் சீட்டு ஒட்டிய கார்கள் அவசர மருத்துவ சிகிக்சை வாகனங்கள் தவிர வேறெந்த வகையான வாகனங்களும் தெருக்களில் அனுமதிக்கப் படவில்லை. மக்கள் சாலையின் இடப் புற மாகவே நடந்து செல்லுமாறு நெறியுறுத்தப் பட்டதாலும் எல்லாச் சாலைகளிலும் மக்கள் நெரிசலில்லாமல் நடக்க முடிந்தது. பத்தடிக் குப் பத்தடியில் நாலைந்து காவல்துறை அலுவலர்கள் மக்களின் சந்தேகங்களுக்குப் பண்போடு விடை அளித்தது பாரட்டத் தக்கது.

கோயில்களில் ஆங்காங்கே 'வரிசையில் தரிசனம்', 'அனைவர்க்கும் தரிசனம்' போன்ற வாசகப்பலகைகளும் தெருக்களில் 'காவிரிக் குச் செல்லும்வழி' போன்ற பெயர் அட்டைகளும் திக்குத் தெரியாது கூட்டமாய்ச் செல்வோருக்குப் பேருதவியாய் இருந்தன. குளத்தில் நீராடுவோர் முட்டி மோதி நெருக்காத வகையில் நீரில் இறங்க ஒரு படிக்கட்டு மேல ஏறிவர ஒரு படிக்கட்டு இடையே அவசர உபயோகத்திற்கு (Emergency) ஒரு படிக்கட்டு என்ற அமைப்பு முறை சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்று.

காதைச்செவிடாக்கும் திரையிசைச் சத்தம் எந்த ஒரு மூலையிலும் இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். குப்பை கூளங்களைக் கொட்டாமல் நகரத்தை தூய்மையாக வைத்திருந்ததற்காக கும்ப கோண மக்களுக்கு மகாமக(¡)ப் பெரிய பாராட்டு.

எந்த ஒரு வீட்டின் கதவும் தாழிடப்படாமல், குளித்து முடித்து ஈரத்துடன் வருவோர்க்கு உடைமாற்றிக் கொள்ள அனுமதித்த பரந்த மனம் படைத்த ஊர் மக்களுக்கு மற்றொரு பாராட்டு. வீடுதோறும் உறவினர்களும் நண்பர்களும் படையெடுத்துத் திரண்டு வந்திருந்தபோதும் கும்பகோணத்திலுள்ள நல்லுள்ளம் படைத்தவர்களின் அன்பான உபசரிப்பு தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்குச் சான்று.

நேரிலே சென்று கலந்துகொள்ள இயலாமற்போனவர்களுக்கு விழாவைக் கண்டுகளிக்க வழி செய்த ஜெயா டி.வி. புண்ணியம் தேடிக்கொண்டது. வருணை யாளர்கள் டாக்டர் சுதா சேஷய்யனும், ஸ்ரீகவியும் தந்த விளக்கவுரை மக்களுக்கு இனிமையான விருந்தாக அமைந்தது. எந்த ஓர் அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தேறிய மகாமகப் பெருவிழா தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறது என்பது உண்மை.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com