பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை
"இந்தியாவிற்கு 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் கிடைத்தது" - 21ம் நூற்றாண்டில் இது வெறும் தகவலாக மட்டும் நம் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? சுதந்திரத்திற்கு முன்பாக நீங்கள் பிறந்திருந்தால் ஒழிய அதற்கான போராட்டங்கள், தேசீயச் சங்கங்கள், சுயராஜ்யக் கனவுகள், இன்னும் உருவாகாத கற்பனையான நாட்டுக்காகத் தங்கள் இளமை, வீரம், அறிவாற்றல், திறமை களைச் செலவிட்ட மனிதர்கள் - எதையுமே நாம் அறிய வாய்ப்பில்லை. நமக்குக் கிடைக் கும் சுதந்திரப் போராட்ட ஆண்டுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் எந்த உணர்வையுமே கிளறாத வறண்ட வரலாற்றுப் பாடங்களிலும், காந்திக்குச் சிலை வைத்து, தியாகிகளை இந்திர-சந்திரர்களுக்கு இணையாய் தெய்வமாக்கி மிகைப்படுத்தும் இலக்கியங்களிலும் சினிமாவிலும்தான். யதார்த்தமாய் திகட்டாத சித்தரிப்புகளில், அதே சமயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் காலத்தை மிகக் குறைந்த புனைவுப் படைப்புக்களே நமக்குச் சொல்லியிருக் கின்றன. அவற்றில் சமீபத்தில் வெளிவந்த 'புலிநகக் கொன்றை' நாவலும் ஒன்று.

ஓ.. இது பழைய வரலாற்றைப் பேசும் புதினமா?

நமக்கு சுதந்திரப் போராட்டக் காலம் 'பழைய வரலாறாக'ப் போய்விட்டதற்கு அப்புறம் வருந்தலாம். முதலில் இந்தக் கேள்விக்குப் பதில்: இல்லை.

திருநெல்வேலியருகே வசித்த ஆச்சாரமான தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளைப் பற்றிப் பேசுகிறது இது. அவர்கள் குடும்பத்தின் நிகழ்வு களினூடே, ஒவ்வொருவரின் தேடலையும் பரத்தி விரிக்கிறது. பொன்னாப் பாட்டியும், நம்மாழ்வாரும், பட்சி ஐயங்காரும், கண்ணனும், நம்பியும், ரோஸாவும் நம் அடுத்த வீட்டு மனிதர் எத்தனை சராசரி யானவரோ அத்தனை சராசரி மனிதர்கள் தான். இருந்தும் அதில் சிலர் சதா "உப்பு புளி அரிசி மிளகாய் வத்தல்" பற்றிய சிந்தனைகளை விடுத்து "பெரிதாக" கனவு காண்கிறார்கள். அவர்களுக்கு, அதற்கான சந்தர்ப்பங்களும் பல்வேறு காலகட்டங்களில் வாய்க்கின்றன - 1900-த்தின் தொடக்கங் களில் சுயராஜ்ய போராட்டம், பின் முப்பது, நாற்பதுகளில் சுதந்திரப் போராட்டம், அதன் பின் எழுபதுகளில் ஹிந்தி எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ விழிப்புணர்வு. குடும்பம் தாண்டிய பொதுவாழ்க்கை, குடும்பத்தின் சிக்கல் களுடன் பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது.

*****


புலிநகக் கொன்றை மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

வரிசையாய் மேலிருந்து கீழ்வரை சிவந்த புலிநகங்களைத் தாங்கித் துருத்தி நிற்கும் காம்புகள், சாய்ந்த சதுர வடிவில் (Diamond) இலைகள், முட்கள் எறும்புகளாய் அணி வகுக்கும் கிளைகள், காற்றில் தொங்கும் கரிய நீள சிகைக்காய்கள்...

வயல் வரப்புகளில் வெற்றிலைக் கொடிக் குக் கொழுகொம்பாய் நிற்கும். இல்லை யெனில் கட்டடங்கள் பெருகிவரும் நகரத்தில் தெருமுனை இஸ்திரிக் காரனுக்கும், இளநீர் விற்பவனுக்கும் நிழற்குடையாக கிளை விரித்திருக்கும். அரவமற்ற புறநகர்ச் சாலையின் ஓரங்களில் அதன் ரத்தச்சிவப்பு மலர்கள் அலங்காரமாய்க் கையசைக்கும்.

ஐங்குறுநூற்றில் இடம்பெற்றிருக்கும் அந்தப் பாடலிலும் அம்மூவனார் எனும் புலவர், தலைவனின் மணலடர்ந்த கரையில் நிற்கும் புலிநகக் கொன்றையை நமக்குக் காட்டு கிறார். "அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்டு அழிவு செய்யும் பறவைக் கூட்டம்."

இந்தப் புதினத்தில் வரும் ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதமான பறவைக் கூட்டம். வந்தடையும் சில பறவைகள் அமைதியாய் இருக்கின்றன. சில கூச்சலிட்டுக் குழப்புகின்றன. சில புதிதாய் வந்து ஆக்கிரமிக்கின்றன. சில திரும்பிப் பார்க்காமல் பறந்து விடுகின்றன.

நான்கு தலைமுறைகளைப் பார்த்துவிட்ட பொன்னாப்பாட்டியின் மங்கலான ஞாபகத்தில் அவளது கணவன் (சாப்பாட்டு) ராமன். அவன் மறைவாக வைத்திருந்த கள் குப்பி, வானமாமலை மடத்து ஜீயரே முன்னின்று செலவழித்து நடத்தி வைத்த அவளது கோலாகல திருமண வைபவம். பல்வேறு குழப்பங்களால் ஓடிப் போன மூத்த மகன் நம்மாழ்வார். விதவையான பின்னும் தேகத்தின் தவிப்பை அடக்கமுடியாத அவளது அவஸ்தைகள். அவள் பெண் ஆண்டாளின் வார்த்தை வன்மங்கள். குடும்பத்தில் நிகழ்ந்து வரும் அகால மரணங்கள். நினைவுப் பறவைகள் அவளை அலைக்கழிக்கின்றன.

நம்மாழ்வாரின் குழப்பங்கள் மூன்று தலைமுறைக்கு நீடிக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் மிதவாத, தீவிரவாத குழப்பம். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா வுடனான சந்திப்பில் சுயராஜ்யத்தை எப்படி வன்முறையால் பெறமுடியும் என்ற குழப்பம். எப்படி துப்பாக்கிகள் ஆங்கிலேயரின் கட்டுக்காவலைத் தாண்டி தனக்குக் கிடைக்கப் போகிறது? வாஞ்சியால் எப்படி ஆஷ் துரையைச் சுட முடிந்தது? “காலத்தின் மடி”யில் இல்லையா சுயராஜ்யம்? பயத்தின் விளிம்பில் ஆன்மீகக் கடலில் ஆறுதல் கிடைக்குமா? - முடிவற்று நீண்டு கொண்டே போகும் அவரது குழப்பங்கள் சன்னியாச வாழ்க்கையின் விளிம்பிலும் தான் விட்டுப் போன உறவுகளை எண்ணி மருக விடுகின்றன. விஷமப் பறவைகள்.

நம்மாழ்வாரின் பிள்ளை மதுவிற்கும் அரசியலில் சில நிலைப்பாடுகள். முதலில் காந்தியிடம் பக்தி. பின்னாளில் கம்யூனிஸத் தில் பிடிப்பு. கட்சி வேலைகள். மீண்டும் வெள்ளையனை வெளியேற்றும் போராட் டத்தில் காங்கிரஸ் பக்கம். மதுவின் பறவைக் கூட்டத்தைப் பற்றி சிதறிய நினைவு கூரல்கள்தாம் நமக்குக் கிடைக்கின்றன.

பொன்னாவின் கொள்ளுப் பேரன் நம்பி தனக்கும் மற்றவருக்கும் உண்மையாக இருக்க முனைபவன். அவனுக்குக் கம்யூனிஸம் மீது பற்றுதல். மதத்தை முழுதும் நிராகரிக்காத கம்யூனிஸம் அவனுடையது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், ஷேக்ஸ் பியரின் சானட், மாவோ சித்தாந்தம் -- அவனது அறிவு விஸ்தாரமானது. குழப்பங்களுக்கு இடமளிக்கும் விஸ்தாரம். ரோஸாவைக் கைபிடித்து, அவளுடன் சேர்ந்து ஏழைகளுக்கு இலவச மருத்துவ மனை நடத்துகிறான். சந்தர்ப்பச் சூழலில் ஒருமுறை மிருகத்தை விடக் கேவலமான கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவனது தன்மானம் சித்திரவதைக்குள்ளாகிறது. அக்கணம் வேஷங்கள் களைந்து தன் சுயரூபம் வெளிப்படுவதை உணர்கிறான். நடுநிலைப் பார்வையாளர்களைத் தேடு கிறது அவனது சுயகௌரவம். அவனது தன்னலமற்ற வாழ்க்கையின் பயனையே இந்தக் குரூர தண்டனை கேள்விக் குள்ளாக்குகிறது. நம்பியின் மரத்தில் பறவைகள் பேரழிவை விளைவிக்கின்றன.

இன்னொரு கொள்ளுப் பேரன் கண்ணனோ பாதுகாப்பான வாழ்க்கைக் குள் இருந்துகொண்டே கொள்கைக் குழப்பங்களில் சிக்கிக்கொள்கிறான். நம்பியின் நிழலிலேயே அடியொற்றி, பூணூல் அணிதல், திருவாராதனை செய்தல் முதலியவற்றை விட்டுவிட்டுக் கம்யூனிஸத்தை தரிக்கிறான். ரயில்நிலைய தளத்தில் வடை விற்பவனிடம் கூட உழைப்பாளர்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி பேசி ஆழம் பார்க்கிறான். பின்னாளில் பஞ்ச சமஸ்காரம் செய்து ஸ்ரீ வைஷ்ணவத்திற்குத் திரும்ப நேரிடுகிறது. குடும்பத்தில் தலைமுறை களாகத் தொடரும் அகால மரணங் களுக்காகப் புதுப் பூணூலணிந்து வேள்வியில் கலந்து கொள்கிறான். கடைசி வரை முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கட்சியில் நிற்கிறான். அவன் மரத்துப் பறவைகள் அவனது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிப்பதில்லை.

இவர்களுக்கு மாறாக பொன்னாவின் இரண்டாவது மகன் பட்சி, அவரது பிள்ளை திருமலை, அவர்களின் மனைவிகள் - இவர்களின் கிளைகளில் அமைதியான பறவைகள்தான். அதிகம் கூச்சலிடாத பறவைகள். இவர்களால்தான் பொன் னாவின் குடும்பம் நான்கு தலை முறைகளுக்கு ஓடுகிறது. "உப்பு, புளி, அரிசி மிளகாய் வத்தல்" பற்றிய கவலைகளுடன் இவர்கள்.

*****


புதினம் மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது முதல் பலம். நூறு ஆண்டுகளின் நிகழ்வுகளைக் குழப்பமறச் சித்தரிப்பது என்பது நூற்குவியலை எடுத்துச் சிக்காமல் துணி நெய்யும் வேலை. பல்வேறு முனைகளை நமக்குக் காட்டி நகரும் இந்தப் புதினம் அந்த வேலையைக் கலைநயத்துடன் செய்கிறது. நடு நடுவே அலங்காரமாய்க் கம்பன், ஆழ்வார் பாசுரங்கள், ஐங்குறுநூறு, ஆஸ்கார் வைல்ட், ஷேக்ஸ்பியர், மாவோ - இவற்றிலிருந்து மேற்கோள்கள். பல்வேறு சுதந்திர போராட்டகால தகவல்களை ஆராய்ந்து அவற்றைப் புனைவுடன் நேர்த்தியாய்ப் பின்னியிருப்பது இதன் ஆசிரியர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் படைப்புத் திறனைக் காட்டுகிறது. அவர் ஆங்கிலத்தில் "The Tiger Claw Tree" என்ற பெயரில் முதலில் இந்த நாவலை எழுதி, பின்னர் சில இலக்கிய நண்பர்களின் ஊக்குவிப்பில் தமிழில் எழுதியிருக்கிறார். முதல் தமிழ்ப்படைப்பு என்று சொல்லமுடியாத முதிர்ச்சி அவரது எழுத்தில் இருப்பதை எளிதில் உணரமுடிகிறது.

ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் - 18 வயதிற்குக் கீழிருப்பவர்கள் பெற்றோரின் சம்மதம் மற்றும் வழிகாட்டல் இல்லாமல் இதைப் படிக்கவேண்டாம். சித்திரவதை பற்றிய சித்தரிப்புகள், பாத்திரங்கள் உதிர்க்கும் வசைச்சொற்கள், கலவி பற்றிய குறிப்புகள் வெளிப்படையாய் இதில் எழுதப்பட்டிருக்கின்றன.

இலக்கியம் என்பது வெறும் பொழுது போக்கிற்காகப் படிப்பது அல்ல. நம் அனுபவத்தை விரித்து, பல்வேறு கதவு களைத் திறந்துகாட்டி, நம் சிந்தனையை வளப்படுத்தும் ஒரு சாதனம். இந்த நாவல் அந்த விதத்தில் இலக்கியமாகிறது. 'பழைய வரலாறு' என்று ஒதுக்காமல் புலி நகக் கொன்றையடியில் இளைப்பாற இந்தத் தகுதி மட்டும் போதும்.

புலி நகக் கொன்றை பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
ISBN 81-8747728-8
kalachuvadu@sancharnet.in

மனுபாரதி

© TamilOnline.com