மீண்டும் உச்சநீதிமன்றம்!
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை தொடர்ந்து இப்பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தில்லியில் கடந்த மாதம் 29ம் தேதி (நவம்பர்) தமிழக மற்றும் கேரள முதலமைச்சர்கள் மத்திய அரசு முன்னிலையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரு மாநில அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.

அணையை உயர்த்தக்கோரி ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ கடந்த 18ம் தேதி முதல் (டிசம்பர்) 23ம் தேதி வரை நடைப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

"முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க நினைப்பது துரதிருஷ்டவசமானது" என்று கேரள அரசு கருத்து தெரிவித்துள்ளது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com