போளி
சில இல்லங்களில் அன்று போளி செய்வார்கள். போளி செய்வதற்கு பதிலாக ரவா கேசரியும் செய்யலாம். ஏனென்றால் போளி செய்வதற்கு நேரம் அதிகம் தேவை. ஆனால் இங்கு எளிய முறையில் போளி செய்வதற்கான வழிமுறையைக் காணலாம்.

தேங்காய் கடலைப் பருப்பு போளி

தேவையான பொருட்கள்

தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 3/4 கிண்ணம்
வெல்லத்தூள் - 1 1/2 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
கேசரிப் பொடி - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

மைதா மாவில் கால் மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கேசரிப் பொடி, ஒரு சிட்டிகை உப்புப் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர்விட்டுச் சப்பாத்தி மாவு போல் பிசைந்து சில மணி நேரம் ஊற வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். கடலைப் பருப்பை அரைமணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

ஊறிய பருப்பைக் குழையாமல் வேகவிடவும். வெந்த கடலைப் பருப்புடன் தேங்காய் துருவலைப் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லப்பொடியை போட்டுக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தூசிமணலை வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும்.

தயாராக அரைத்து வைத்துள்ள தேங்காய், கடலைபருப்பு விழுதை வெல்ல நீரில் போட்டுக் கெட்டியாகும் வரை கிளறி கீழே இறக்கி வைத்து ஏலப்பொடியை போடவும். சூடு ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

அடுப்பில் தோசைக் கல்லைப் போடவும். வாழை இலையில் எண்ணெய்யை தடவி மைதாமாவில் சிறு உருண்டையளவு எடுத்து வாழை இலையில் வைத்து எண்ணெய் தடவி சப்பாத்திபோல் செய்யவும். (மைதா மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்கக் கையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்).

சப்பாத்தி போல் செய்த மைதாமாவுக்கு நடுவில் உருட்டி வைத்துள்ள பூர்ணத்தை வைத்து மூடி உருண்டையாக உருட்டி வாழை இலையில் வைத்துக் கைகளாலேயே மெலிதாகத் தட்டவும்.

தோசைக்கல்லில் கால் தேக்கரண்டி எண்ணெய் தடவி வாழைஇலையில் தட்டி வைத்துள்ள போளியை வாழை இலையுடன் சேர்த்து தோசைக்கல்லில் போடவும். சிறிது வெந்ததும் இலையை மெதுவாக எடுத்து மடித்து நெய் தடவும். இப்போது போளி ரெடி.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com