ஆமவடை என்பது மசால் வடை செய்வது போல்தான் என்றாலும் மசால்வடைக்கு வெங்காயம் போன்றவை சேர்ப்பதுண்டு. ஆனால் பண்டிகை தினங்களில் சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் வெங்காயம் மற்றும் மசாலா சாமான்கள் சேர்ப்பதில்லை.
ஆகவே வெங்காயம் இல்லாத ஆமவடையைச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 8 அல்லது 10 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப பயத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி கருவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - கால் கிலோ
செய்முறை
பயத்தம் பருப்பு நீங்கலாக மற்றப் பருப்பு வகைகளை களைந்து முக்கால் மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புடன் உப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கரகரவென்று அரைக்கவும்.
அரைத்து எடுத்த விழுதில் பொடி செய்து வைத்திருந்த கருவேப்பிலையை போடவும். தயாராக வைத்திருக்கும் பயத்தம் பருப்பை நாம் ஆமவடை செய்ய ஆரம்பிக்கும்போது மாவில் போட்டு நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அரைத்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஈரமான உள்ளங்கையில் உருண்டையை வைத்துத் தட்டி எண்ணெயில் போடவும்.
வடை பொன்னிறமாக வரும்போது எடுக்கவும். வடை தயார்.
இந்திரா காசிநாதன் |