வேப்பம்பூப் பச்சடி
தேவையான பொருட்கள்
புதுவேப்பம் பூ - 2 பிடி (சுத்தமாகச் சேகரிக்கப்பட்டது)
தூள் செய்த வெல்லம் - 2 மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து நன்கு காய்ந்தவுடன் அதில் வேப்பம்பூவைப் போட்டு பொன்னிறத்துக்கும் சற்று அதிகமாக (எண்ணெய் விடாமல்) வறுக்கவும். வறுத்த வேப்பம்பூவைச் சப்பாத்திக் கல்லில் வைத்துக் குழவியால் கொஞ்சம் பொடி செய்து கொள்ளவும். பிறகு மாவு சல்லடை அல்லது டீ வடிகட்டியில் போட்டு சலிக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்துவிடவும். கொஞ்சம் உப்பும் சேர்த்து நிதானமாக அடுப்பை எரியவிடவும். இரண்டு மூன்று நிமிடங்கள் கொதித்தவுடன் வெல்லப்பொடி சேர்த்துக் கரைத்து, கீழே இறக்கவும். (பச்சடி நீர்த்து இருந்தால் கொஞ்சம் அரிசி மாவு கரைத்து விட்டுக் கொதிக்கவிடலாம்)

பிறகு பொடிசெய்து வைத்திருக்கும் வேப்பம்பூவைப் போட்டுக் கிளறி, கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும்.

குறிப்பு:

புது வேப்பம்பூ வருடப்பிறப்புக்கு முன்னதாக பூக்க ஆரம்பித்தாலும் வருடப்பிறப்பு அன்று முதல்தான் சமைக்கத் தொடங்க வேண்டும்.

வேப்பம்பூப் பச்சடியை தனியாகச் செய்யாமல் வறுத்த வேப்பம் பூவை மாங்காய் பச்சடியில் சேர்த்தும் செய்யலாம். பச்சடி கொதிக்கும் போது வேப்பம் பூப்பொடியைப் போட்டால் பச்சடி கசந்து விடும். ஆகையால் சற்று ஆறிய பிறகு போடவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com