தாரண புத்தாண்டுக்கு என்ன சமைக்கலாம்!
தமிழ்ப் புத்தாண்டு பற்றி...

'பிரபவ' என்ற பெயரில் துவங்கி 'அக்ஷய' என்ற பெயருடன் முடிவடையும் ஆண்டுகள் மொத்தம் அறுபது. ஏப்ரல் 13ம் தேதி மலரப் போகும் புத்தாண்டின் பெயர் 'தாரண'. அது ஆண்டுகளின் வரிசையில் 18வது ஆண்டாகும்.

நம் புத்தாண்டுக்கெனப் பூஜைமுறைகள் எதுவுமில்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிப் பூஜை செய்யலாம். புதுவருடப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு நைவேத்தியம் செய்து முடித்த பிறகு அதை எடுத்து முழுவதும் ஒருமுறை படிக்க வேண்டும்.

வானவியலை எவ்வளவு நுணுக்கமாக நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்கு பஞ்சாங்கம் ஓர் எடுத்துக்காட்டு. 'சௌரமானம்' (சூரியச் சுழற்சி) 'சாந்த்ர மானம்' (சந்திரச் சுழற்சி) என்ற இரண்டு விதப் பஞ்சாங்கங்களில் தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ளது சூர்ய கதியை ஒட்டியது ஆகும். இதன்படி சூரியன் மேஷராசியில் நுழையும் தினமே சித்திரை மாசப்பிறப்பு.

எனவே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் கணிதம், வானசாஸ்திரம், பருவகால மாற்றங்கள் எனப் பலவித கோணங்களில் ஆராய்ந்து சூரியன், சந்திரன் ஆகியவை போகிற வேகம் மற்றும் பாதையை அனுசரித்து மிகமிகத் துல்லியமாக விஞ்ஞான முறைப்படி கணிக்கப்பட்ட நம் பஞ்சாங்கத்தைப் படிக்கும்போது நமக்கு வியப்பும் பெருமையும் உண்டாகிறது.

இனிப் புத்தாண்டு சமையல்...

கோடை காலத்தின் துவக்கமாகச் சித்திரை மாதம் வருவதால் தாகத்தைத் தணிக்க கூடிய பானகம், நீர்மோர் போன்ற குளிர்ந்த பானங்கள், பித்தத்தை நீக்கக்கூடிய வேப்பம்பூப் பச்சடி, மாமரங்கள் காய்க்கத் தொடங்கிய பருவத்தில் மிகவும் ருசியானதும், உடலுக்கு நன்மை தரக்கூடியதுமான மாங்காய்ப் பச்சடி, நீத்தார் கடனிறுக்கும் தினமாதலால் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பாயசம், பண்டிகை தினமாகவும் இருப்பதால் ஆமவடை என்கிற முறையில் நாம் சமைக்கும் ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் விதமாக அற்புதமான நியதியை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட சமையல் வகைகளுடன், சாதம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை வைத்து இறைவனுக்குப் படைக்கவேண்டும்.

(புத்தாண்டு அன்று தர்ப்பண தினமாதலால் எண்ணெய்க் குளியல் கூடாது. தந்தை இல்லாதவர்கள் இரவில் உணவு உண்ணக்கூடாது.)

புதுவருடப்பிறப்பன்று செய்யவேண்டிய முக்கியச் சமையல் வகைகள்.

பருப்புப் பாயசம்

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/4 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
பால் - 3 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 6
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் சூடானதும் பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் லேசாக வறுக்கவும். பின்பு இவற்றைக் குக்கரில் வேகவிடவும்.

பின்பு வெந்த பருப்பைக் கரண்டியால் மசித்து வெல்லப் பொடி போட்டுக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் கீழே இறக்கி வைத்துக் காய்ச்சிய பாலை அதில் விடவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.

ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். கமகம பாயசம் ரெடி.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com