எண்பதுகளில் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய பெண் எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். அவர் ஒரு நாவலா சிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்பது தெரியும். இவரது 'சிறை' திரைப்படமாக வந்தபோது பலரையும் பேச வைத்தது. அர்ச்சனைப்பூக்கள், பாசம், கனாக் கண்டேன் தோழி என்று பல தொலைக்காட்சித் தொடர்களின் கதைக்குச் சொந்தக்காரர். நாவலாசிரியர், எழுத்தாளர் என்பதையும் தாண்டி ஓர் ஆன்மீகப் பரிமாணமும் உண்டு.
அவரே சொல்லட்டும்...
துவக்கம்...
எங்கள் வீட்டில் நான்தான் என் பெற்றோருக்கு முதல் குழந்தை. எனக்குப் பிறகு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால் நான் சிறு வயதில் அம்மாவின் அப்பா வீட்டில் அதாவது என் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தேன். தாத்தா ஆர். பாலசுப்பிரமணியம் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நடிகர். வில்லன் வேடம், ராட்சச வேடம் போன்றவைகளில் நடித்தவர்.
டி.ஆர். மகாலிங்கம், டி.பாலசுப்பிரமணியம் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்தவர். தாத்தா நடிகராக இருந்தததால் அப்பாவைச் சேர்ந்த உறவினர்களுக்கு தாத்தாவைப் போல் நாடகம், நடிப்பு என்று சென்றுவிடுவேனோ என்ற பயம் அதிகம் இருந்தது. அதனால் என்னைப் பள்ளிக்கூட நாடகங்களில்கூட நடிக்கவிடமாட்டார்கள். ஆனால் எங்கள் பள்ளியில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கான பல பாடல்களை நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
திருமண வாழ்க்கை...
பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் வரைவதில் இருந்த ஆர்வத்தினால் நான் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அப்போது எனக்கு வயது 19. திருமணம் 1967ல் நடந்தது. இதனால் படிப்பு தடைப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே முதல் மகள் பிறந்தாள். பின் 1970ல் இரண்டாவது மகள் பிறந்தாள்.
இரண்டாவது மகள் பிறந்தபிறகு தனிப்பட்ட முறையில் படித்து முடித்தேன். 1976ல் அதாவது என்னுடைய 29வது வயதில் என் கணவர் இறந்தார். திருமண வாழ்க்கை என் வாழ்வில் மிகவேகமாக நடந்து முடிந்தது என்றே சொல்ல வேண்டும்.
பத்திரிகை வடிவமைப்பு...
கணவர் இறந்ததும், குழந்தைகளைக் காப்பாற்றவும், என் எதிர்காலத்தை மனதில் கொண்டும் நான் வேலைதேடிச் சென்னைக்கு வந்தேன். பத்திரிகை அலுவலகத்தில் வேலைதேடிச் சென்றேன். அப்போது 'ஸ்பெஷாலிட்டி பப்ளிகேஷன்ஸ்' என்கிற பதிப்பகத்தில் எனக்கு வடிவமைப்புக் கலைஞர் வேலை கிடைத்தது. Indian Housewife, கிரகணி அவுர் கிரகஸ்தி, மங்கையர்மலர் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் லே அவுட் ஆர்டிஸ்ட் நான்தான். இதுதான் என் முதல் வேலை. 2 வருடங்கள் இந்த வேலையில் இருந்தேன்.
எழுத்துலகில் நுழைந்த கதை...
இன்று பிரபலமாக விளங்கும் பல பத்திரிகைகளுக்கு நேரிடையாகச் சென்று என் ஓவியங்களைக் காண்பித்தேன். அன்றைய காலத்தில் பத்திரிகையில் ஒரு பெண்ணை ஓவியராகப் பணி அமர்த்தத் தயங்கினார்கள். பத்திரிகைத்துறை காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலைகள் நிறைந்த துறை. பெண்கள் ஆண்களைப் போல் அதிக நேரத்தை அலுவலகத்தில் செலவிட முடியாது என்கிற நினைப்பினால் பெண் ஓவியர்கள் காணப்படவில்லை.
'ஆண்கள் மாதிரிப் பெண்கள் சிகரெட், டீ சாப்பிட என்று வெளியில் செல்லமாட்டோம். எங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை' என்று சொல்லிச் சில இடங்களில் வாதாடுவேன். இந்த நேரத்தில் மங்கை என்கிற பத்திரிகைக்கு நான் செல்ல நேரிட்டது. அங்கு நான் வரைந்த ஓவியங்களைக் கொடுத்துவிட்டு வந்தேன். என் டயரியை நான் அங்கு மறந்து வைத்துவிட்டேன்.
நான் சிறுவயது முதலே டயரி எழுதும் பழக்கமுடையவள். என்னுடைய டயரி பார்ப்பதற்கு ஒரு பத்திரிக்கை போலவே இருக்கும். அழகாக லேஅவுட் செய்து ஜோக், மருத்துவக் குறிப்பு, பழமொழி, ராகங்கள் என்று ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். என்னுடைய இந்த டயரியைப் பார்த்திருக்கிறார் மங்கை பத்திரிகையின் ஆசிரியர் சாரதி. நீங்கள் வரைவதைவிட எழுதுவது ரொம்பவும் சுவாரசியமாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்.
அப்போது அவர் "உங்கள் படத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இப்படத்திற்கான கதையை நீங்களே எழுதிக்கொடுங்கள்" என்றார். எழுதித்தான் பார்ப்போமே என்று என் ஓவியத்திற்கேற்ற கதையை எழுதிக் கொண்டு போய் அவரைச் சந்தித்தேன். அப்போது நான் எழுதிய கதையில் என் பெயரைக் கொடுக்கவில்லை. கதையைப் படித்துவிட்டு யாராவது கேலி செய்தால் என்ன செய்வது என்று என்னுள் ஒரு பயம். ஆனால் அக்கதைக்கான ஓவியத்தில் மட்டும் என் பெயர் இருந்தது. இதுதான் என் எழுத்தின் ஆரம்பம். அந்தக் கதையின் பெயர் 'கனவு மலர்கள் கருகும் போது'.
அந்தக் கதைக்கு ஏராளமான பாராட்டு கிடைத்தது. இந்தக் கதையை எழுதியவர் யார் என்று பலமுனைகளிலிருந்தும் மங்கை பத்திரிகையைக் கேட்கத் தொடங்கினார் கள். மங்கை சாரதி போன்றோர் இதை என்னிடம் கூறி, நீங்கள் ஏதாவது பெயர் ஒன்றை கூறுங்கள். அல்லது புனை பெயரையாவது கூறுங்கள் என்றனர். அப்போதுதான் நான் அக்கதைக்காக 'சாம்பவி' என்கிற பெயரை லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து எடுத்தேன். 'சாம்பவி' எழுதியதாக மங்கை தெரிவித்தது.
ஓவியமா? எழுத்தா?
மங்கையில் என் ஓவியத்துடன் கதை வெளிவந்து பாராட்டுகள் கிடைத்தாலும் நான் என் ஓவிய வேட்கையைக் கைவிடவில்லை. தினமணி கதிருக்குச் சென்றேன். அப்போது கே.ஆர். வாசுதேவன் இருந்தார். நான் கதிர் அலுவலகத்திற்கு சென்ற போது வாசுதேவன் உள்ளே ஒரு முக்கியமான சந்திப்பில் இருந்ததால் நான் என்னுடைய ஓவியங்களையும், கடைசியாக மங்கையில் என் ஓவியத்துடன் வந்த கதையையும் வைத்துவிட்டு வந்தேன்.
மறுநாள் மறுபடியும் சென்றேன். சி.ஆர். கண்ணன் (தினமணி உதவியாசிரியர்), கே. ஆர். வாசுதேவன் அவர்களுடன் இன்னும் நான்கைந்து பேர் மேசையைச் சுற்றி இருந்தார்கள். "படம் நன்றாக இருக்கிறது. இதற்கான கதையை எழுதியவர் யார்?" என்று கேட்டனர். கதையை நான்தான் எழுதினேன் என்றவுடன் ஏன் பெயர் போடவில்லை என்று கூறிவிட்டு "எங்களுக்கும் இதுபோல் ஒரு கதை எழுதிக்கொடுங்களேன்" என்றனர்.
"என் வேலை கதை எழுதுவது அல்ல; ஓவியம் வரைவதுதான். அதற்காகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்" என்றேன். "கதை கேட்டால் நீங்கள் தயங்காமல் எழுத வேண்டாமா?" என்று கேட்கவே, 'நான்கு சுவர்களுக்கு நடுவில்' என்ற கதையை எழுதினேன். இந்தக் கதைக்கு ஜெயராஜ் படம் வரைந்தார். நான் ஓவியப் பணியிலிருந்து மெல்ல எழுத்துப் பணிக்குத் திசை திரும்பினேன்.
எத்தனை கதைகள்?
1977ல் என் எழுத்து ஆரம்பமானதிலிருந்து இன்றுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், 1800க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கதையை விற்ற கதை
அப்போது நான் மேட்டூரில் இருந்தேன். என் கணவர் அங்கு வேலையில் இருந்தார். அப்போது 'சொந்த வீடு வாடகை மனைவி' என்ற கதையை எழுதினேன். இதை வாதிராஜ் என்பவர் கன்னடத்தில் சினிமாவாக எடுப்பதற்காக விலைபேசி விட்டுச் சென்றார். ஆனால் சினிமாவாக முதலில் வெளிவந்தது 'சிறை'தான்.
என்னால் மறக்கமுடியாத சம்பவம் அது. என் கதையை ரூபாய் 3000க்கு பேசிய வாதிராஜ் முன்பணமாக 500 ரூபாய் கொடுத்துவிட்டு இரண்டு மாதத்தில் வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால் அவர் வரவில்லை. பிறகு சிறை திரைப்படமாக வந்து அதிகம் பேசப்பட்டது. இதற்கிடையில் 'சொந்தவீடு வாடகை மனைவி' கதையை நிறையப் பேர் என்னிடம் விலைக்குக் கேட்டனர். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கவில்லை, அப்படியே வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து என்னுடைய சிறை, கூட்டுப்புழுக்கள் எல்லாம் வெளிவந்த பிறகு என்னைத் தேடி வந்தார் வாதிராஜ். இடையில் அவர் மிகவும் நொடிந்துவிட்டதாகவும் மறுபடியும் என்னுடைய கதையை தொலைக்காட்சித் தொடராக எடுக்க விரும்பி வந்ததாகவும் கூறினார்.
அவர் என்னிடம் ''இப்போது நீங்கள் பெரிய எழுத்தாளராகிவிட்டீர்கள். இன்றைய நிலையில் அந்த கதைக்காக நான் எவ்வளவு தரவேண்டும்?" என்றார். முன் பேசியபடியே கொடுங்கள். எனக்கு நீங்கள் கொடுத்த முன்பணம் 500 போக மீதி 2500 தந்தால் போதும் என்றேன். ஆனால் அவர் 15 வருடமாக உங்களை நான் காக்க வைத்துவிட்டேன். ஆகையால் நீங்கள் அதை வட்டியுடன் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னிடம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அந்தக் கதையை வாங்கிச் சென்றார்.
பெண் உரிமைகள், பெண்ணியம் பற்றி...
எழுபதுகளிலிருந்தே பெண்களின் நிலையில் - முன்னேற்றத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று உணர்ந்து பெண் கல்வி மேம்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் சுயசம்பாத்தியத்தில் வாழக் கற்றுக் கொண்டது என்று பல விஷயங்களில் இன்று பெண்களின் நிலையில் நல்ல மேம்பாடு காணப்படுகிறது.
இன்று பெண்கள் இந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தால் சரி என்றே நினைக்கிறேன். காரணம், சுதந்திரம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் கணவருக்கான பொறுப்பும் இருக்கிறது.. ஆனால் அதற்காக தினம் தினம் சண்டை போட்டுக் கொள்வது சரியல்ல. பல படித்த பெண்களால் சிறிய விஷயங்களைக்கூட ஜீரணிக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
பரிசுகள், விருதுகள்.....
ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப் போட்டிக்கான பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் தான் எனக்கு முதன்முதலாக கிடைத்த பணமுடிச்சு ஆகும். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் கைகளால் தங்கப்பதக்கத்தைப் பெற்ற இதயம்பேசுகிறது நடத்திய சிறுகதைப் போட்டிக்கான பரிசு, நல்ல சமூக எழுத்தாளர் என்று தமிழக காங்கிரஸ் சார்பாக வழங்கப்பட்ட ராஜீவ் காந்தி விருது, சினிமா ரசிகர் சங்கத்தினர் அளித்த சிறந்த எழுத்தாளர் விருது, சிறந்த தொலைக்காட்சி கதாசிரியர் விருது என்று நான் பல விருதுகளை வாங்கியுள்ளேன்.
ஜனரஞ்சக எழுத்தும், இலக்கிய எழுத்தும்
வெகுசன பத்திரிகையில் எழுதுவது, சிற்றிலக்கியப் பத்திரிகையில் எழுதுவது என்று எழுத்தாளர்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். சிற்றிலக்கியப் பத்திரிகை கள் நிறைய உள்ளன. கணையாழி, தாமரை, அரும்பு என்று அதில் எழுதுபவர்கள் ஒரு சாரார். ஜனரஞ்சகமான பத்திரிக்கையில் எழுதுவது இலக்கியமல்ல. இதுதான் இலக்கியம் என்று கோட்பாடு வைத்திருக் கிறார்கள். இதிலிருந்து யாராவது தப்பித் தவறி வெகுஜனப் பத்திரிகைக்கு ஏதாவது எழுதிக் கொடுத்துவிட்டு அது வெளிவந்தால் அவர்கள் இந்தக் கட்சியிலிருந்து வேறு கட்சிக்குப் போய்விட்டதுபோல் அவர்களே நினைத்துக்கொள்கிறார்கள்.
நான் ஆரம்பக்காலத்தில் நிறைய இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக் கிறேன். ஏனென்றால் எனக்கு இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாது. இதை நான் எந்தக்கூட்டத்தில் வந்துவேண்டு மானாலும் சொல்வேன்.
நான் வந்தது சுயம்பு. நானாக வளர்ந்தேன். இப்போதுகூட நான் கதை எழுதிக் கொடுத்துவிட்டு இதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்று நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பேன்.
கதைக்கான கரு...
என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் எல் லாம் துப்பறியும் கதைகள். அபிதா, மனோஜ் என்ற ஜோடி என் கதைகளில் வருவார்கள். பிறகு குடும்பக் கதைகள் பெருமளவில் எழுத ஆரம்பித்தேன். என் கதைக்கான கரு அன் றாடம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். என்னிடம் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டு வருபவர்களின் கதைகளை எப்போதும் நான் என் கதைக் கான கருவாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.
'அன்புடன் அந்தரங்கம்' பற்றி...
தினமலரில் நான் தொடர்ந்து 8 வருடங்களாக 'அன்புடன் அந்தரங்கம்' என்ற பெயரில் தங்கள் துயரங்களை, அந்தரங்கங்களை என்னிடம் கூறுபவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறேன். பிரச்சினைகள் இல்லாதவர்களே இல்லை. என்னுடைய ஆறுதல் வார்த்தைகள் எத்தனையோ பேருக்குக் கவலையைப் போக்கியிருக்கிறது என்பதை நினைக்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. என் வீட்டில் இதற்காகத் தனியாக ஒரு தொலைபேசி இணைப்பு வைத்துள்ளேன். இரவு 11 மணி வரை என்னுடைய இந்த தொலைபேசி எண்ணில் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆலோசனைகளுக்காக நான் எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் என்னிடம் நேரிடையாக வருபவர்களிடம் மட்டும் பணம் வசூலிக்கிறேன். இப்படி வசூலிக்கும் பணத்தை அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்துவிடுவேன்.
சமகால எழுத்து, இலக்கிய எழுத்து...
நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கல்கி, ஜெயகாந்தன், தேவன் போன்றோர் களின் எழுத்துக்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன. சமகால எழுத்தில் நவீன சிந்தனைகள், வளர்ந்து வரும் விஞ்ஞானம் போன்றவற்றிற்கு ஏற்ப எழுத்துக்கள் இருக்கின்றன. காலத்திற்கேற்ப கதைகளும், எழுத்துக்களும் மாறுகின்றன.
ஆன்மீக நாட்டம்
1996ஆம் ஆண்டு நான் ஒருநாள் பகவான் ஸ்ரீசத்யசாயி பற்றி ஓர் அந்தாதி எழுத ஆரம்பித்தேன். இடையில் எனக்கு உடல் ரீதியாக வந்த பல சோதனைகளில் அந்த அந்தாதியை மறந்துபோனேன். ஒருநாள் என் கனவில் சத்யசாயி வந்து என்னை மறுபடியும் எழுதச் சொன்னார். இது இறைவன் எனக்கு இட்ட கட்டளையாக நினைத்து 'பகவான் ஸ்ரீ சத்யசாயி' அந்தாதியை எழுதி முடித்தேன். அதுபோல் சமீபத்தில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னை மீது கடித பாணியில் அன்பான அன்னைக்கு என்கிற பேரில் பாடல்கள் எழுதினேன். டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாட, பத்திரிகையாளர் சர்ச்சில் பாண்டியனின் 'உத்ஸவ் மியூசிக்' இசைநாடா வெளியிட்டது. நிறைய இதுபோல் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
குடும்பம் பெண்களின் சிறையா?
யாருக்காக அவள் வாழ்கிறாள்? என்ன தான் சமூகத்திற்காக வாழ்ந்தாலும் அவளைப் பாராட்டவோ, சோர்ந்து போகும் போது உற்சாகப்படுத்தவோ, பெருமையாகப் பேசவோ, அவளுக்காகக் கண்ணீர் வடிக்கவோ குடும்ப அமைப்பு வேண்டும். குடும்பம் ஓர் அழகு. ஒரு நேர்த்தி. ஆகக் குடும்பம் பெண்களுக்கு அரண். குடும்பம் கண்டிப்பாகப் பெண்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகள், எதிர்கால ஆசைகள்...
எனக்குக் கடவுள் கொடுத்த மறுஜென்மம் இது என்றால் அது மிகையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு பாண்டிச்சேரி அன்னையின் அருளாலும், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருளாலும் மீண்டும் நான் உங்கள் முன் நிற்கிறேன். இத்தனை கஷ்டங்கள், துயர்கள் நடுவில் நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நியூஜெர்சியில் வசிக்கிறாள். அவளுக்கு ஒரே ஒரு மகன். இரண்டாவது மகள் டெக்ஸாஸில் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். என் குடும்பம் அன்பான குடும்பம். எல்லோரும் என்னை அவர்களுடன் வந்து இருக்கும்படிக் கேட்கிறார்கள். நான்தான் நம் மண்ணின் மீது இருக்கும் பாசத்தினால் போக மறுக்கிறேன்.
வாழ்க்கை முழுவதும் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது என் ஆசை. வரைதல், எழுதுதல் என்று என் வாழ்க்கை கடைசிவரை செல்ல வேண்டும். இப்போது மீராவின் காதலன் என்கிற கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
******
நான் இதயத்தைத் தேடுகிறேன், இலக்கியத்தை அல்ல
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியில் ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். அங்கு ஒருவர் என்னை "நீங்கள் இலக்கியவாதியா?" என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அப்போது நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள் என்றார். "நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் வந்தேன்" என்றேன். என்னை ஓர் இலக்கியவாதியாக நீங்கள்தான் அழைத்து வந்திருக்கிறீர்களே தவிர நானாக வரவில்லை என்றேன்.
நான் அவரிடம் "உங்கள் கதைகளோ, எழுத்துக்களோ ஏதாவது பத்திரிகையில் வந்திருக்கிறதா?" என்றேன். அதற்கு அவர் "என் கதைகள் எல்லாம் எப்படி வரும்? உங்களை மாதிரி இருப்பவர்கள் கதைகள் தான் வரும்" என்றார். உடனே நான் "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றேன். "நான் தமிழ்ப்புலவர், வித்வான்" என்று சொன்னார்.
நான் அவரிடம் "உங்கள் கதைகளில் நீங்கள் இலக்கணத்தையும், இலக்கியத்தையுமே தேடிக்கொண்டிருப்பதால் உங்கள் கதைகள் எல்லாம் திரும்பி வந்துவிடுகின்றன. ஆனால் நான் எழுது கிற கதைகளில் வெறும் இதயங்களை மட்டும்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இலக்கணமோ இலக்கியமோ சுத்தமாகத் தெரியாது" என்றேன்.
சந்திப்பு: கேடிஸ்ரீ தொகுப்பு: மதுரபாரதி |