சீர்மை அறக்கட்டளை (Foundation for Excellence) சுருதிஸ்வரலயா (பாரதி கலாலயா என்று முன் அறியப்பட்டது) இரண்டும் சேர்ந்து பிரதிதி என்ற நிகழ்ச்சியை நடத்தினர். மார்ச் 27, 2004 அன்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு சங்கீத லயசாம்ராட் டி.வி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை விருந்தினராக இருந்தார். அவரும் அவரது புதல்வி தேவி அவர்களும் நெடுநாளாகவே பாரதி கலாலயாவின் இயக்குத்துக்கு உறுதுணை யாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த பிரதிதி நிகழ்ச்சியில் ராகம், தாளம், நாட்டியம் என்ற மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. "பிரதிதி என்றால் 'அறிதல்' என்றும் 'நம்பிக்கை' என்றும் பொருள்படும். சரியான புரிதலின் பேரில் உண்டான கடவுள்-மனித உறவு வாழ்நாள் முழுவதும் ஆழப்படுகிறது" என்று சுருதிஸ்வரலயாவின் அறிவிப்பு சொல்கிறது. சுருதிஸ்வரலயாவுக்கு அனு சுரேஷ் அவர்களே பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
பிரதிதியின் 2004வது ஆண்டுக்கான வரிசை ராணி மற்றும் புவனாவின் குறுங்கச்சேரியுடன் (mini concert) தொடங்கியது. இவர்களுக்கு மைதிலி ராஜப்பன் வயலினும், ரவி ஸ்ரீதரன் மிருதங்கமும் வாசித்தனர். வெவ்வேறு குருவிடம் பயின்ற இவர்களை இந்தக் கச்சேரிக்கு பத்மா ராஜகோபால் ஆயத்தம் செய்தார்.
இதையடுத்து வந்தது ஜெ·ப் விட்டியர் மற்றும் அவரது மாணவர்களின் பான்சுரி வாசிப்பு (இந்துஸ்தானி புல்லாங்குழல்). இதற்கு லெஸ்லி ஷ்னீடர் தபேலா வாசித்தார்.
மறுநாள் ராமநவமி என்ற நிலையில் குரலிசை, வயலின் மற்றும் மிருதங்கம் பயிலும் மாணவர் இராமன் புகழைப் பாடினர். இதனை அனு சுரேஷ் மற்றும் மானசா சுரேஷ் வழி நடத்தினர். அடுத்து இராமாயண இன்னிசையை அம்பா ராகவன் மற்றும் இசைக்குழுவினர் வழங்கினர். ஏழு காண்டங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெவ்வேறு பாடலாசிரியர்களின் கிருதிகளிலிருந்து தேர்ந்தெடுத்து அவர் தொகுத்துக் கொடுத்திருந்ததை மாணவர்கள் பாடினர். பத்மா ராஜகோபால், மைதிலி ராஜப்பன், கீதா சேஷாத்ரி, பாகீரதி சேஷப்பன் மற்றும் ரவி ஸ்ரீதரன் ஆகிய பயிற்றுனரின் உதவியோடு அனு சுரேஷ் இந்நிகழ்ச்சியை வடிவமைத்துத் தயாரித்திருந்தார். இதற்கு ஸ்லைடுகள் மற்றும் நடன அபிநயிங்களின் உதவியும் சிறப்பாக இருந்தது.
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக நாட்டியம் அமைந்தது. இது நிதிலா, ஷைலா, சினேகா ஆகியோரின் கணேச கௌத்துவத் தோடு தொடங்கியது. அடுத்து கம்பீர நாட்டையில் அமைந்த மல்லாரியை சித்ரா, ராஷ்மி, ஆரபி, சுபாஷினி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்தது கமாஸ் ராகத்தில் அமைந்த 'இடதுபதம் தூக்கி' என்னும் பாடலுக்கான பிரசேதாவின் நடனம். சிலப்பதிகாரக் காப்பியத்திலிருந்து எடுத்த 'மருங்கு வண்டு' என்ற பாடல் காவேரிக் கரையின் செழிப்பைக் கண்முன்னே கொண்டுவருவது. அதை 'கதன குதூகலம்' ராகத்தில் அமைத்து அனிதா, சவிதா மற்றும் லாவண்யா அபிநயம் பிடித்தனர்.
பந்தாடும் இளம்பெண்ணின் அசைவு களை அப்படியே மேடையில் கொண்டு வந்தார் அனிதா 'பந்தாட்டம்' பாடலுக்கு. மொத்தத்தில் பிரதிதியின் இந்த நிகழ்ச்சி கண்ணுக்கும் கருத்துக்கும் காதுக்கும் பெருவிருந்து. |