மார்ச் மாதம் 20ம் தேதி சனிக்கிழமை நான்கு மணிமுதல் ·ப்ரிமாண்ட் ஓலோனே கல்லூரி ஸ்மித் அரங்கத்தில் லதா ஸ்ரீராம் நடத்தும் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் 12ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது. இதை அவர்கள் பதரிகாஷ்ரமத்திற்கான நிதி திரட்டு விழாவாகக் கொண்டாடினார்கள்.
லதாவின் மகள் பல்லவி ஸ்ரீராம் நிகழ்ச்சியைத் தொகுக்க, பாடல்களுக்கு இடையே ஆறேழு வயது சிறுவர் சிறுமியர் சிவனின் கதைகளை பாவனையுடன் ஒப்பிக்க, அது முடிவதற்குள் அடுத்து பாடுபவர்கள் மேடைக்குவர, சிறு தாமதமும் இல்லாமல், நிகழ்ச்சி விறுவிறுவென்று நடைபோட்டது. கடவுளின் ரூபம் பெரிதா நாமம் பெரிதா என்ற ஐயத்திற்கு, நாமேமே பெரிது என்று தீர்வு சொல்லும் வகையில், 'ஓம் நமச்சிவாய' என்ற சிவ பஞ்சாக்ஷரத்தைத் தானே இசையமைத்து, வெவ்வேறு ராகங்களில் பாடினான் சித்தார்த் ஸ்ரீராம்.
தன் குழந்தை என்ன அழகாக திரைப்பட டப்பாங்குத்துப் பாடல் பாடுகிறது எனக் கூறிப் பெருமைப்படும் பெற்றோர்கள் நிறைந்த இக்காலத்தில் ஆறேழு வயதுக் குழந்தைகள் 'சரணு சித்து விநாயகா', 'ஸர்வம் ப்ரம்ம மயம்', மார்க்க பந்து ஸ்தோத்திரம், லிங்காஷ்டகம் என்று பாடியதைக் கேட்க மனதுக்கு இதமாக இருந்தது. இச் சிறுவயதில், அதுவும் அமெரிக்க நாட்டில் பிறந்து வளர்ந்து, நம் மண்ணின் வாசத்தை யும், மொழியையும், சிறிதே அறிந்த இச்சிறுவர் சிறுமியர் தம் கோவைச் செவ்வாயில் சமஸ்கிருத வார்த்தைகளும், நம்மொழிச் சொற்களும் வாய் பிறழாமல் தெளிவாக எப்படி நுழைந்தது? இதைச் சாதித்த குருவுக்கு நமது பாராட்டுக்கள்.
நிகழ்ச்சியின் முக்கியப் பாடலாக விளங்கியது தீக்ஷ¢தரின் 'கைலாச நாதேன' என்ற காம்போஜி ராக க்ருதி, மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த இப்பாடலுக்கு ஐந்தாறு பெண்கள் ஸ்வரம் பாட, அதைத் தொடர்ந்து மிருதங்கம் தனியாவர்த்தனம் முழங்க, நிகழ்ச்சி களைகட்டியது. வேதங்களின் ராகமான ரேவதி ராகத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற பாடலான, 'போ சம்போ' பார்வையாளர்கள் மனதை உருக்கியது என்பது திண்ணம்.
பல முன்னிலைக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்த வாதிராஜ் பட் அவர்களின் மிருதங்கமும், ராகவன் மணியனின் வயலின் மற்றும் சுயம்புவாகக் கற்றுக்கொண்ட புல்லாங்குழலும் பேரழகு. நமச்சிவாயனின் புகழ்பாட பிருந்தாவனக் கண்ணனே மேடைக்கு வந்து குழலூதியது போல் இருந்தது.
பின் வளைகுடாப்பகுதி நாயன்மார்கள், நீலகண்ட சிவனின் 'ஆனந்த நடமாடுவார்', பைரவி ராகத்தில் 'சிந்தயமாம்', சிந்து நாமக்கிரியாவில் 'தேவாதி தேவ' ஆகியவற்றைப் பாடினர்.
இந்தக் குறுகிய நிகழ்ச்சிக்கு லதா தேர்ந்தெடுத்த பாடல்கள் வெகு அருமை. சங்கீதம் காதுகளுக்கு மட்டுமே விருந்து படைப்பதற்கல்ல. ஆன்மீக நாட்டத்தை ஊக்குவித்து, இறையுணர்வை வளர்க்கும் கருவி என்பதை அன்று அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். பாபநாசன் சிவனின் 'பாதமே துணை பரமசிவா', 'மனோ புத்தி அகங்காரம்', அத்வைத தத்துவத்தை உணர்த்தும் ஆதிசங்கரரின் 'நிர்வாண ஷடகம்', 'உனது தாள் பணிந்து கலையோடு வாழ வரம் தாரும் தில்லை ஜகதீசா' எனும் தில்லானா--இப்படி மனதைத் தொடும் ஆராதனைகள் பல.
'ஓம் நமச்சிவாய' என்று தொடங்கிய நிகழ்ச்சியை 'ஓம் நமச்சிவாய' என்ற ஆதிசங்கரரின் சிவபஞ்சாக்ஷர துதியுடன் இனிதே முடித்தனர்.
ஆறிலிருந்து அறுபதுவரை, இந்நிகழ்ச்சி யில் பங்கு பெற்ற சுமார் 150 பேர் கடைசியில் மேடைக்கு வர, பார்வை யாளர்கள் ''எப்படி இத்தனை நபர்களுக்கு இவர் பயிற்சி அளித்தார்?'' என்று வியந்தனர்.
இசைத்தொண்டை இறைத்தொண்டாகச் செய்யும் லதா ஸ்ரீராமும் அவருடைய உழைப்பில் உருவான ஸ்ரீ லலிதகான வித்யாலயாவும் மேன்மேலும் வளரும் என்பதில் ஐயம் இல்லை.
அருணா நாராயணன் |