ஏப்ரல் 3, 2004 அன்று மிஷிகன் தமிழ் சங்கத்தினர் திருக்குறள் விழாவை விமரிசை யாக நடத்தினர். நான்கு வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இவ்விழா இன்றும் சிறப்பாக நடந்து வருகிறது. ஏறக்குறைய 110 குழந்தைகள் இதில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றனர்.
எதிர்பார்த்ததிற்கு மேல் அதிக எண்ணிக்கையினர் பதிவு செய்ததால், இரண்டு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு நேரத்தில் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் எழுத்துப் போட்டியை அடுத்தடுத்து நடத்தினர். நடுவர்களாகப் பணியாற்றிய கருணாகரன், டாக்டர். சுப்பிரமணியம், டாக்டர். ராஜாராமன், திவாகர், ஹரிஹரன் ராமஸ்வாமி மற்றும் ஒருங்கிணப்பாளராகப் பணியாற்றிய ஹரிப்ரசாத் ஆகியோர் தங்கள் பங்கைச் செவ்வனே செய்தனர்.
பங்கு பெற்ற எல்லாச் சிறுவர், சிறுமியரையும் ஏப்ரல் 25, 2004 அன்று தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்து, பரிசு பெற்றவர்களையும் கௌரவித்தனர். குழந்தைகள் மனம் கவரும் வகையில் திருக்குறள் சொல்லி முடித்ததும் அவர் களுக்கு ஊக்கப் பரிசு தந்தது அருமையான யோசனை. இத்திருக்குறள் போட்டியின் மொத்தப் பரிசுகளுக்கும் பொறுப்பேற்றுள் ளார் பாலா பாலகிருஷ்ணன் அவர்கள். |