திவ்யாவின் நடன அரங்கேற்றம்
திவ்யாவின் நடன அரங்கேற்றம் ஏப்ரல் 11ம் தேதி Thousand Gole, CVVIC Arts Plazaவில் நடைபெற்றது. திவ்யா என்னும் வடமொழிச் சொல்லுக்கு தெய்வீகம் என்று பொருள். திவ்யாவின் நடனமும் தெய்வீக மாகவே இருந்தது. அங்கு வந்திருந்த அனைவரும் திவ்யாவின் நடனத்தை சிலாகிக்க, பெற்றோர்கள் சுதாவும் ரகுநாதனும் அவளைப் 'ஈன்ற பொழுதினும்' அதிகமாக இன்புற்றார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மிகச் சிறப்பாகப் பயிற்றுவித்திருந்த திவ்யாவின் குரு பத்மினி வாசன் மிகுந்த பாராட்டுக்குரியவர். புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம், இவற்றை நல்ல இலாவகத்துடனும் ஜதிகளை நறுக்குத் தெறித்தாற் போலும் திவ்யா ஆடினார். பின்பாதியில் 'கிருஷ்ணா நீ பேகனே' என்ற பாட்டுக்கு அபிநயம் செய்தது கிருஷ்ணனையே என் கண் முன்னாலே கொண்டு நிறுத்தியது. பத்மினி வாசன் அந்தக் கன்னடப் பாட்டிற்கு நடுவில் தமிழ்ப் பொருளையும் சேர்த்துப் பாட வைத்தது சபையில் கிருதியைப் புரிந்து திவ்யாவின் அபிநயத்தை ரசிக்க வைத்தது.

கோபால கிருஷ்ணபாரதியின் 'நடனமாடி னார்' என்ற பாட்டுக்கு திவ்யா அற்புதமாக ஆடினார். பரமேஸ்வரன் (வாய்ப்பாட்டு), ராமன் (குழல்), ஜனார்த்தனராவ் (மிருதங்கம்), கிருஷ்ணன் குட்டி (வயலின்) ஆகியோர் மிக அனுசரணையாகத் தம் பங்கை அளித்தனர். தில்லானாவில் பாபு கூடுதலாக அமைத்த ஜதிக்கு திவ்யா செய்த நிருத்யம் சபையை மெய்சிலிர்க்க வைத்தது.

ராமன் சக்கரவர்த்தி

© TamilOnline.com