SIFAவின் வெள்ளிவிழா இசை விருந்து
சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் 'தென்னிந்திய நுண்கலை அமைப்பு' (South Indian Fine Arts) வெள்ளிவிழாக் காணுகிறது. SIFA என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்தை இப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தொடர்ந்து அளித்துவருகிறது.

வெள்ளிவிழாவை முன்னிட்டு, ஆரம்பம் முதல் இந்த வருடம் வரை SIFAவின் செயலாளர்களாக இருந்தவர்கள் இணைந்து சான் ஹோசேயில் மே மாதம் 28-31 தேதிகளில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவை சான் ஹோசேயின் CET (Center for Employment Training) மற்றும் CPA (Center for Performing Arts) அரங்குகளில் நடக்க உள்ளன. மே 28ம் தேதியன்று மாலை சங்கரநாராயணன் அவர்களது சிறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி, அருணா சாயிராம், சுதா ரகுநாதன், T.M.கிருஷ்ணா, மைசூர் மஞ்சுநாத், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் ரமணி, மற்றும் சிறப்பு நிகழ்ச்சியாக ஹரிப்ரசாத் செளராஸியாவின் ஹிந்துஸ் தானி புல்லாங்குழல் என இந்திய இசைக் கலைஞர்களும் தவிர உள்ளூர்க் கலைஞர்கள் பலரும் இன்னிசை விருந்தளிக்க உள்ளனர்.

1980களில் இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து வருடத்திற்கு ஐந்து கச்சேரிகளை நடத்துவதே மிகவும் சிரமம். நிதி நெருக்கடி ஒருபுறம் இருக்க, மரபுக் கலைகளை ஆதரிக்கும் மக்களும் குறைவாக இருந்த காலகட்டம் அது. 1979ல் வளைகுடாப் பகுதியில் பல கச்சேரிகள் வீடுகளில் நடந்தவை (home concerts). ஒவ்வொரு கச்சேரிக்கும் ரசிகர்களைத் தொலைபேசியில் கூறி வரழைத்ததும் உண்டு.

இன்று, 25 வருடங்களுக்குப் பிறகு SIFA விற்குப் பல புதிய சவால்கள். பல கச்சேரிகள், 500 ரசிகர்களை ஈர்க்கும் சமயத்தில், அது ஒரு சமூக நிகழ்ச்சியாக மாறி, எதிர்பார்ப்புகளை மாற்றிவிடுகிறது. உணவு உபசரிப்பு, சிறந்த ஒலியமைப்பு, கூட்டத்தை நிர்வகிக்கும் திறமை, வாகன பார்க்கிங் வசதி, வயதானவர்களுக்கு எளிதாகக் கச்சேரி கேட்கும் வசதி போன்று பல நிர்வாக நிர்ப்பந்தங்கள். சான் ஹோசே CET இசை அரங்கின் ஒலி பெருக்கிகள் நம்முடைய கல்யாணி காம்போதிக்கும், உணவருந்தும் மேசைகள் இட்லி வடைக்கும், அரங்கின் நீண்ட சுற்றுத் தாழ்வாரம் நம் கலாசார உடை மற்றும் இசைக் கலைஞர்களைப் பற்றிய செய்தித் துணுக்குகளுக்கும் பழக்கப் பட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது. கலைஞர்கள் சான் ஹோசேயை மற்றுமொரு மயிலாப்பூராகப் பார்ப்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

SIFA வின் முக்கிய நோக்கம் நம்முடைய பாரம்பரிய இசை நமக்கு மட்டுமல்லாது, வரும் சந்ததியருக்கும், பிற கலாச்சார மக்களுக்கும் சென்றடைய வேண்டு மென்பதே. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைத் தியாகராஜ சுவாமிகளின் நினைவாகக் கொண்டாடும் நேரத்தில் வளைகுடாப் பகுதி சிறுவர்களும் சிறுமிகளும் பாடும் காட்சி மிக நம்பிக்கை யூட்டுவதாகும். அந்த வகையில், நம் வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த பலர் தங்களது திறமையைக் காண்பிக்கப் போகிறார்கள். இந்த வருடம் முழுவதுமே SIFA பல புதிய உள்ளூர்க் கலைஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு: www.southindiafinearts.org

பத்மப்ரியன்

© TamilOnline.com