மக்களை மிரட்டும் போர் வெறியன்
"இது நம் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான தேர்தல்" என்கிறார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரி. இது வழக்கமாக எல்லா வேட்பாளர் களும், எல்லாத் தேர்தல்களிலும் சொல்லுவது தான் என்றாலும், இந்தத் தேர்தல் வித்தியாசமான தேர்தல்தான். தான் போர்க்காலத் தலைவன், மக்களைக் காப்பாற்றத்தான் தான் எதையும் செய்வதாக முரசு கொட்டும் அதிபர் புஷ்ஷ¤ம் அவரது சேனைகளும் ஒரு பக்கம். அதிபர் புஷ்ஷைத் தேவதூதத் தளபதி என்று எள்ளி, "மக்களை மிரட்டும் போர் வெறியன்" புஷ்ஷைத் தோற்கடிக்கத் தன்னால் முடியும் என்று பகல்கனவு காணும் வேட்பாளர் ரால்·ப் நேடர் இன் னொரு பக்கம். இந்த முக்கியமான தேர்தலில், பேச வேண்டிய முக்கியமான கருத்துகளை வழ வழா கொழ கொழா என்று மழுப்பும் "ஊத்தப்பம்" ஜான் கெர்ரி எல்லாப் பக்கமும்.

இராக் போர், நாட்டுப் பொருளாதாரம், பயங்கரவாதம், என்று பலதரப் பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தந்து நாட்டையும், ஏன் உலகத்தையும் வழி நடத்திச் செல்லும் தலைவரை, வரலாறு கண்டிராத மாபெரும் வல்லரசின் தலைமைப் பதவிக்குத் தான் இந்தத் தேர்தல். இந்த முக்கியமான தேர்தலின் முக்கியமான கொள்கைகளைப் பற்றிய விவாதங்களை எதிர்பார்ப்பவர்கள், இந்தத் தேர்தலில் நேரடியாகப் பங்கு பெறாதவர்களைத் தான் பார்க்க வேண்டும்.

இராக் போரின் குறிக்கோளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுபவர் இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் டோனி பிளேர். இது பண்பாட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் நடக்கும் போர்; செங்கோலுக்கும் கொடுங் கோலுக்கும் போர்; மதக் காழ்ப்பற்ற, சுதந்திர வாஞ்சை கொண்ட முற்போக்கு வாதத்துக்கும், வெறுப்பை உமிழும், பயங்கரவாதப் பிற்போக்கு வாதிகளுக்கும் நடக்கும் போர்; இதில் வெல்வது அமெரிக்கா மட்டுமல்ல; தோல்வி நம் எல்லோரையுமே சுடும் என்று எச்சரிக்கிறார் பிளேர்.

பயங்கரவாதப் பிற்போக்குவாதிகளை எதிர்க்கிறோம் எனும் முற்போக்குவாதிகள், அதே சமயம் பயங்கரவாதிப் பண்ணை அமைக்கும், அணுக்குண்டுச் சந்தையிலே "இஸ்லாம் குண்டுகளை ஏலம் விற்கும், பாராளுமன்றங்களைத் தகர்க்க மனித வெடிகுண்டுகளை ஏவும் சர்வாதிகாரிகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது ஏனோ? பயங்கரவாதம் என்பது அரசியல் நோக்கங்களுக்காகப் பொதுமக்கள் மீதான வன்முறைத் தாக்குதல் என்றார் "த நேஷன்" பத்திரிக்கையின் இலக்கிய ஆசிரியர் ஆதாம் ஷாட்ஸ். அதை வரவேற்ற லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் வாசகர் டிம் விவியன், அரசியல் நோக்கங்களுக்காக ·பல்லூஜாவிலும் இராக் முழுவதும் நடக்கும் அமெரிக்காவின் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி நாமும்தான் பயங்கரவாதிகள், இல்லையா எனத் தவிக்கிறார்.

டென்னிஸ் குசினிச், ஹாவர்ட் டீன், மறைத்திரு அல் ஷார்ப்டன் மற்றும் ரால்·ப் நேடர் ஆகியோர், இராக் போர், பேட்ரியட் சட்டத்தின் அடக்குமுறைப் பிரிவுகள், பொருளாதாரச் சரிவு, பொதுநலக் கொள்கைகளைப் பற்றிய தம் வாதங்களை முன் வைத்தனர். 9-11 விசாரணை குழுவின் முன்னர் சாட்சியம் சொல்ல வந்த சிலரும் நல்ல கருத்துகளை முன் வைத்தனர். ஆனால் இவை ஏனோ புஷ்-கெர்ரி விவாதங்களில் இடம் பெறவில்லை.

அதிபர் புஷ்ஷ¤க்குப் பூச்சாண்டி காட்ட மட்டும் தெரிகிறது. எதை எடுத்தாலும், 9-11, அல் கைடா, என்று பூச்சாண்டி காட்டுகிறார். "தங்கள் பாதுகாப்புக்காக அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுப்பவர்கள் அவை இரண்டுக்குமே தகுதியற்றவர்கள்" என்று எச்சரித்தார் பெஞ்சமின் ·பிரான்க்ளின். அதிபர் புஷ்ஷின் பூச்சாண்டிக்கு மிரள்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9-11 பயங்கரவாதிகளின் மாபெரும் வெற்றி வெறும் கட்டிடங்களைத் தகர்த்துப் பல்லாயிரம் பேர்களை கொன்றதல்ல. அமெரிக்கக் குடியரசின் அடிப்படைக் கொள்கைகளையே நிலைகுலைய வைத்து, பயங்கரவாத, சர்வாதிகாரப் போக்குகளை அன்றாட வாழ்வில் நிலைநாட்ட வைத்ததில்தான் அவர்கள் வென்றிருக்கிறார்கள். 9-11 வரை உலகில் இருக்கும் எல்லா நாடுகளுக்கு குடியாட்சிக் கொள்கைகளைப் போதித்து வந்த அமெரிக்கா, ஒரே தாக்குதலில் நிலைகுலைந்து, குடியாட்சிக் கொள்கை பயங்கரவாதத்துக்கு முன்னால் எடுபடாது என்று அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தது ஏமாற்றத்தைத் தருகிறது.

அது என்னவோ தெரியவில்லை, ஜனநாயக நாடுகளுக்குத் தம் அடிப்படைக் கொள்கைகள் மேல் அவ்வளவு நம்பிக்கை இருப்பதில்லை. அது இந்தியாவாக இருக்கட்டும், இல்லை அமெரிக்காவாக இருக்கட்டும், பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் அரசுகள் கொண்டு வரும் அடக்குமுறைச் சட்டங்களை அடிபணிந்து ஏற்றுக் கொள்கின்றனர். ஜனநாயகம் என்பது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போடுவது மட்டுமல்ல.

அடக்குமுறைச் சட்டங்கள் ஒரு முறை வந்து விட்டால் போதும். அவற்றை அவ்வப்போது மாற்றுக் கருத்துகள் கொண்டவர் மீது ஏவி விட்டு ஆட்டிப்படைக்கும் ஆசை எந்த ஆளுங்கட்சியினரையும் விடுவதில்லை. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகப் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த வை. கோ. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. வை. கோ. வின் சிறைவாசம் இந்திய ஜனநாயகவாதிகளையும், மக்களையும் அவ்வளவு உறுத்தியதாகத் தெரியவில்லை. இருப்பினும், ஆடி அசைந்து வந்த நீதி தேவதை நல்ல தீர்ப்பளித்திருக்கிறாள்.

திப்பு சுல்தானின் போர்வாள் மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்று மக்கள் கொண்டாடுகின்றனர். லண்டன் மியூசியத் தில் திப்புவின் இரத்தக் கறை படிந்த மேலாடை யைப் பார்த்தபோது என் மனம் வாடியது. ஆங்கிலேயர்கள் சீரங்கப் பட்டணத்துப் புலியைத் தோற்கடித்ததில் பெருமை கொள் கிறார்கள். இந்தியர்களோ திப்புவைக் கொண்டாடுகிறார்கள். திப்பு, கட்டபொம்மன், மற்றும் தம்மை எதிர்த்தவர் களை, அவர்கள் வாழ்ந்தகாலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பத்திரிக்கைகள் "காட்டுமிராண்டி பயங்கர வாதிகள்" என்று தூற்றியிருப்பார்களோ! இன்று அமெரிக்காவை எதிர்த்துப் போராடுபவர்களை அடிபட்ட இனங்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை. வரலாறு சற்று மாறி, ஆங்கிலக் கும்பனியார் திப்புவிடம் தோற்றிருந்தால், இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும்? இராக்கில் அமெரிக்கா தோற்றால், வருங்காலம் எப்படி இருக்கும்? வரலாற்றின் திருப்புமுனையில் நிற்பது இராக் மட்டுமல்ல. நாமும்தான்.

இந்தியத் தேர்தல்கள் தொடங்கி விட்டன. 600 மில்லியன் மக்கள் அமைதியாக வாக்குச்சாவடிக்குச் சென்று தம்மை ஆளுபவர்கள் யார் என்று தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கிறதோ இல்லையோ, அடக்குமுறையில் வாடும் நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அவ்வப்போது சில்லறைத் தனமான வாக்குவாதங்கள் நடந்தாலும், இந்தத் தேர்தல் மக்களின் உண்மையான பிரதிநிதி களை நாட்டை ஆள்வதில் பங்கேற்க வைக்கிறது என்பதில் ஐயமில்லை. முதல் முறையாக மின்வாக்குக் கருவியைப் பயன்படுத்தியிருக்கிறது இந்தியா. கலி·போர்னியா இது போன்ற கருவிகளில் நடக்கும் பித்தலாட்டங் களைப் பற்றி விசாரித்து வருகிறது. இந்திய மற்றும் அமெரிக்க மின்வாக்குக் கருவிகளைப் பற்றி நண்பர் வாஞ்சியைக் கட்டுரை படைக்கச் சொல்ல வேண்டும்.

தென்றல் கட்டுரையாசிரியர் கோம்ஸ் கணபதி இராக்கில் குடிநீர் வளத் திட்டத்தில் பங்கேற்றுத் தொண்டாற்றச் சென்றிருக்கிறார். தன் அனுபவங்களைப் பற்றித் தென்றலுக்கு எழுதுவதாக அவர் வாக்களித்திருந்தாலும், தொலைக்காட்சியில் இராக் கலவரங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கோம்ஸ் எப்படி இருக்கிறாரோ என்று மனம் பதைக்கிறது. நம் வாழ்த்தும், வேண்டுதல்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com