குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள்!
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவை களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தேர்தல் அறிக்கைகளிலும் இதை அமல்படுத்த வாக்குறுதி அளிக் கின்றன. ஆனால் நடைமுறையில்?

தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் 35ல் ஆண்களைவிடப் பெண் வாக்காளர் அதிகம். தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 178 பேர். இதில் பெண்கள் 2 கோடியே 39 லட்சத்து 18 ஆயிரத்து 208 பேர். ஆண்களைவிடப் பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் அதிகம்.

ஆனால், எல்லாக் கட்சிகளுமே குறைந்த எண்ணிக்கையிலேயே பெண் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளனர். 33 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க சார்பில் பதர் சயீத், ராஜலட்சுமி ராஜன் ஆக 2 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

15 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.வோ சுப்புலட்சுமி ஜெகதீசன், பவானி ராஜேந்திரன், ராதிகா செல்வி ஆகிய 3 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதே போல் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கே. ராணிக்கு வாய்ப்பளித்துள்ளது. பா.ம.க., ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

புதுவையில் பா.ஜ.க சார்பில் லலிதா குமாரமங்கலம் நிறுத்தப்பட்டிருக்கிறார். பெண்கள் இடஒதுக்கீடு என்பதும் ஓட்டு வங்கி அரசியலின் உரத்த கூப்பாடுதானோ?

கேடிஸ்ரீ

© TamilOnline.com