சென்னை கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓர் அரசு தனது பணிகளைச் செயலாற்ற உரிமை உள்ளது. தலைமைச் செயலகத்தை எங்கு அமைப்பது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவது ஆகியவை குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது. அரசின் தனி உரிமை குறித்த செயல்பாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற பரபரப்பான அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷண்ரெட்டி அறிவித்ததை யடுத்து இப்பிரச்சனை மறுபடியும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா அரசு பதவியேற்ற சிறிது காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான நடவடிக்கையில் இறங்கியது. முதலில் சென்னை கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய செயலகம் கட்டப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அக்கல்லூரி மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உண்டாக, அதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை யடுத்து கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது என்று அரசு முடிவெடுத்து அதற்கான உத்தரவைக் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பிறப்பித்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஒரு நகல் அறிவிப்பாணையை கடந்த அக்டோபர் 27ம் தேதி பிறப்பித்தது. இந்த நகல் அறிவிப்பாணையின்படி ரூ. 50 கோடி முதலீட்டுக்கு மேல் எந்த கட்டுமானம் செய்வதாக இருந்தாலும், 50 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை வெளியேற்றும் திட்டமாக இருந்தாலும் அதற்கு மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சுபாஷண்ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இவ்வழக்கை விசாரிக்க, தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன், அரசு வழக்குரைஞர் ரகுபதி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் வக்கீல் கே. ரவீந்திரன் ஆகியோர் ஆஜராயினர்.
மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் கடந்த வாரம் 'மத்திய அரசு பிறப்பித்துள்ள அறிவிப்பாணை என்பது இறுதியானதல்ல. இந்த நகல் அறிவிப்பாணை குறித்து மாநில அரசுகள் எழுப்பியுள்ள ஆட்சேபணைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த நகல் அறிவிப்பாணை தான் இறுதியான அறிவிப்பாணையாக வருமா எனத் தற்போதைய கட்டத்தில் கணிக்க முடியாது. இந்தக் கட்டத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. ஆகையால் முன்தேதியிட்டு அறிவிப்பாணை பிறப்பிக்க முடியாது' என்றுகூறி இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
கேடிஸ்ரீ |