தாகம் தீருமா?
தமிழகம் அனல் களமாக மாறி விட்டது. ஏறுகிற வெப்பத்தினால் மட்டுமல்ல, தேர்தல் சூட்டினாலும் தான். தலைவர்கள் தங்கள் கூட்டணி வேட்பாளருக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நகரில் உள்ள மூன்று தொகுதி களிலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சித் தலைவர்களும் முதல்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். சென்னையின் இன்றைய சூழலில் மக்களிடையே உள்ள மிக முக்கியமான பிரச்சனை குடிநீர். நாடாளுமன்றத் தேர்தலில் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ இரண்டு எதிரெதிர் அணிகளின் தலைவர்களும் தம் பேச்சில் குடிநீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

பிரதமர் தேர்வுக்கான தேர்தல் இது என்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாநிலத் தின் பிரச்சனைகளையே முன்வைத்துப் பேசுகின்றனர். ஜெயலலிதா 'அன்னியர் சோனியா பிரதமராக வரக்கூடாது' என் பதை வலியுறுத்தினாலும், மாநில அளவில் வரும்போது காவிரி நீர் பிரச்சனையிலும் சென்னை நகரக் குடிநீர் பிரச்சனையிலும் கருணாநிதியின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசுகிறார்.

சென்னையைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகக் குடிநீர் பிரச்சனை இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர் கருத்து.

கேடிஸ்ரீ

© TamilOnline.com