என்னுடைய உறவினர் ஒருவர் வயதான பாட்டி. நாங்கள் அவரை 'குடுகுடுப்பாண்டி' சாரி குடுகுடுப் பாட்டி என்றே எப்போதும் கேலி செய்வோம். குடுகுடுவென ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். ஒரு சமயம் அவருடைய பேரன் டெல்லியில் வேலை கிடைத்துக் கிளம்பிப் போனான். பாட்டிக்குப் பேரன் மேல் அளவு கடந்த அன்பு.
சென்ட்ரல் ஸ்டேஷனில் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் அவன் போவதால் எல்லோரும் அவனை வழியனுப்பச் சென்றிருந்தோம். பாட்டியும் வந்திருந்தார். எல்லாம் பேசி முடிந்து டிரெயினும் கிளம்பி விட்டது. பாட்டி திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராய் 'ஏய் சீனு சீனு' என்று கத்தியபடி டிரெயினுடன் ஓட ஆரம்பிக்க புட்போர்டில் ஒரு வடக்கத்திக்காரர் நின்று கொண்டிருந்தவர், ''அரே மாதாஜீ டிரெயின் சோட் தியா பாப்ரே (ஐயோ அம்மா டிரெயினைத் தவற விட்டு விட்டீரா?) என்றவாறு பாட்டியை இரண்டு கைகளால் தூக்கி டிரெயினுக்குள் விட்டுவிட்டார். பாட்டிக்கோ ஒரே படபடப்பு.
"அடக் கடன்காரா என்னை ஏண்டா ரெயிலுக்குள்ளே தூக்கிப் போட்டேன்னு" பட்பட்டென்று அவரை அடிக்க ஆரம்பிக்க இதற்குள் கம்பார்ட்மெண்டில் எல்லாரும் கூடி விட்டனர். பாட்டியின் பேரனும் வந்துவிட்டான்.
"ஐயோ பாட்டி என்ன இது" என்று பதறினான்?
"சீனு உனக்கு நம்ப குலதெய்வ பிரசாதம் கொடுக்க மறந்துட்டேன். அதை கொடுக்க ஓடி வந்தேன். இந்த ஆள் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டான்" என்று ஓவென அழ ஆரம்பித்தார்.
"போதும் ஒங்க விபூதியும் வேப்பிலையும் கஷ்டகாலம்" என்று தலையிலடித்துக் கொண்டு சமாதானம் செய்து இந்திக் காரரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
அடுத்த ஸ்டேஷனில் பாட்டியை இறக்கி டிக்கெட் வாங்கிக் கொடுத்து சென்னை திரும்ப ஏற்பாடு செய்தான். கம்பார்ட்மெண்டில் ஒரே சிரிப்பு அலை மோதியது.
பாட்டி வீடு வந்து சேர்ந்தார். குடுகுடுப்பாட்டியை இப்போதும் நாங்கள் என்ன பாட்டி "டெல்லி சலோ வா?'' என கலாட்டா செய்வோம். போங்கடா போக்கத்த பசங்களா என்று குச்சியைத் தூக்கிக் கொண்டு அடிக்க ஓடி வருவார்.
அந்த சம்பவத்தை இப்போ நினைத்தாலும் வயிறு வலிக்கச் சிரிப்பு வருகிறது.
தங்கம் ராமசாமி |