கண்முன் நடந்தது
உன் குதிரைகளை இழுத்துப்பிடி

எனக்கு முன்பு அங்கு வேலையில் இருந்தவர் ஒரு தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரர். அவர் ஒரு காலத்தில் அங்கே உயர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர், இப்பொழுது சோமாலியாவில் ஒரு பொறுப்பான பதவியில் கடமையாற்றினார். ஆனால் வாழ்நாள் முழுக்கக் கறுப்பின மக்களை ஆட்டிப் படைத்த அவருக்கு சோமாலியா மீதோ, அந்த மக்கள் மீதோ ஒருவிதக் கரிசனமும் இருக்கவில்லை. தன்மானத்தையும், தனித் துவமான சிந்தனையையும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத சோமாலியர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார். அவர் "உமக்குத் தெரியுமா, இந்த சோமாலியா மொழியில் 'நன்றி' என்ற பதத்திற்கு வார்த்தை கிடையாது. ஒரு சாக்கு நிறையத் தங்க நாணயங்களைக் கொடுத் தால் நன்றி கூறமாட்டார்கள். சாக்கைத் து¡க்கிப்போக ஒட்டகக்கூலி கேட்பார்கள்" என்பார்.

சோமாலியாவுக்குப் பணி நிமித்தம் வருபவர்கள் அங்கே ஒரு வருடம்கூடத் தங்குவதில்லை. இது விதி. சில நிறுவனங்கள் திறக்கும் வேகத்திலேயே மூடிவிடும். நான் வந்து சில வாரங்களிலேயே இந்தத் தென்னாப்பிரிக்கர் ஒருநாள் திடீரென்று சோமாலியாவைவிட்டு வெளியேறினார்.

வல்லரசான அமெரிக்காவின் பிளாக் ஹோக் ஹெலிகாப்டரை வீழ்த்தி, பதின் மூன்று அமெரிக்கப் படையினரைக் கொன்ற சம்பவம் சோமாலியாவில் நடந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. அந்தக் காலகட்டத்தில் இரண்டு பெரும் பிரச்சினை கள் சோமாலியாவை ஆட்டிப்படைத்தன. கண்ணிவெடிகள். இவை லட்சக் கணக் காகப் புதையுண்டு கிடந்தன. எவ்வளவு முயன்று இவற்றை அகற்றினாலும் ஆகக் குறைந்தது பத்து வருடங்கள் பிடிக்கும் என்று நிபுணர்கள் அபிப்பிராயப் பட்டார்கள்.

மற்றது சனப்பெருக்கம். இந்த உலகத்திலே உள்ள 192 தேசங்களிலும் ஆகக்கடைசியான வறுமை நிலையில் இருப்பது மொஸாம்பிக் நாடு. சோமாலியா அதற்கு வெகு நெருக்கமாக இருந்து கடைசி நிலைக்கு போட்டியிட்டது. இது தவிர, உலகத்தி லேயே அதிவேகமான சனத்தொகைப் பெருக்கம் கொண்ட நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. ஐ.நா.வின் கணிப்பின்படி அந்த நாட்டின் சனத்தொகை பத்து மில்லியனில் இருந்து ஐம்பது வருடங்களில் 40 மில்லியனாக பெருகும் சாத்தியக்கூறு இருந்தது. வறுமையும், சனத்தொகை வேகமும் மிகவும் மோசமான இணைப்பு.

இதைச் சரிப்படுத்துவதற்காகக் குடும்பக் கட்டுப்பாடு அலுவலகம் முனைப்போடு வேலை செய்தது. சோமாலியா கிளை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி ஏற்றிருந்தார். சாம்பல் நிறக் கண்களில் கனிவான பார்வை கொண்டவர். கறுப்புச் சால்வையால் தன் வைக்கோல் நிறத் தலைமயிரை மறைக் காமல் வெளியே புறப்படமாட்டார். விடாமுயற்சிக்குப் பேர்போன இவர் சோமாலியப் பெண்களைக் கொண்ட ஓர் அணி திரட்டி கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சார வேலைகள் செய்தார். தாய்சேய் நலனில் இவர் வெளிக்காட்டிய அதே அக்கறையைக் குடும்பக் கட்டுப்பாட்டிலும் காட்டினார். நிறையப் பெண்களை கூட்டங்களுக்கு இழுப்பதற்காக குழந்தை உணவுகளை இலவசமாக வழங்குவார். ஆனால் நாளடைவில் இவர் செய்யும் பிரச்சாரச் செய்திகள் ஆண்கள் காதுகளிலும் விழுந்து எதிர்ப்பு வந்தது. பிறகு அவருக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்களும் வரத் தொடங்கின.

என்னுடைய பல பணிகளில் ஒன்று விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பது. சோமாலியாவில், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் கண்ணிவெடி விபத்துக்களில் செத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அலுவலகத் தில் வேலை பார்த்த அத்தனைபேரும் காப்பீடு செய்யப்பட்டிருந்தார்கள். எங்கள் அலுவலகத்தை சேர்ந்த சோமாலியர் ஒருத்தர் பணி நிமித்தமாக ஒரு கிராம அதிகாரியைப் பார்க்கப்போன இடத்தில் மிதிவெடியில் மாட்டி இறந்துபோனார்.

காப்பீட்டில் இருந்து அவருக்கு பணம் பெற்றுக்கொடுக்கும் வேலையை நான் துவக்கினேன். இன்சூரன்ஸ் நிறுவனம் சட்டென்று பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடாது. பாரத்துக்கு மேல் பாரமாக நிரப்பவேண்டும். வரைபடம் வரைந்து விபத்து வர்ணனையை முழுமையாகக் கூறவேண்டும். இன்னும் பல அத்தாட்சிப் பத்திரங்களை இணைக்கவேண்டும். இதற்குமேல் பல கேள்விகள் வரும். அதற்கெல்லாம் பதில் சொல்லி அந்தப் பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கிடையில் பெரும் அலுப்பு வந்து மூடிவிடும்.

இந்த இழப்பீடு சம்பந்தமாக ஒரு பெண் அடிக்கடி அலுவலகத்துக்கு வருவாள். இறந்தவர் வயதுக்கு இவள் மிகவும் இளமையானவள். அழகாக வேறு இருந்தாள். அந்த மனிதரின் சாவில் பெரும் துக்கம் அனுபவித்தவள்போல இல்லாமல் மலர்ந்த முகத்துடன் வந்து போனாள். ஒரு நாள் பணம் வந்துவிட்டது. இறந்துபோனவர் அவளுடைய பெயரையே வாரிசாகப் போலிசியில் குறிப்பிட்டிருந்தார். அவள் பெற்ற பணம் அவருடைய இருபது வருடச் சம்பளத்துக்கு ஈடானது. முகத்தில் ஒருவித ஆச்சரியத்தையோ, மகிழ்ச்சியையோ அவள் காட்டவில்லை. அந்தப் பெரிய தொகையைப் பெற முன் எப்படி நடந்து வந்தாளோ அதே மாதிரி அதைப் பெற்றபின்னும் நடந்து போனாள்.

இது நடந்து சில மாதங்கள் கழித்து ஒரு நடுத்தர வயதுப் பெண், துக்க ஆடை அணிந்து, மூன்று பிள்ளைகளை இழுத்துக் கொண்டு அலுவலகம் வந்தாள். தான் இறந்து போனவரின் மனைவி என்று சொல்லிக் கண்ணீர் விட்டாள். கணவரின் இழப்பீட்டுப் பணம் இன்னொரு பெண்ணுக்குப் போய்விட்டது அவளுக்குத் தெரியாது. போலிசியை மீண்டும் ஆராய்ந்தபோது மனைவியின் பெயர் அதில் குறிப்பிடப்படவே இல்லை. பணம் போனதுகூடப் பெரிய அதிர்ச்சியாக இல்லை, அவளுக்குத் தெரியாமல் ஒரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருந்ததும், அவளுக்கே முழுப்பணத்தையும் எழுதி வைத்ததையும் இந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சூரியன் கீழே போகுமட்டும் அலுவலக வாசலில் குழந்தைகளைக் கட்டிப்பிடித்தபடி அவள் இருந்ததாகப் பின்னர் பலர் என்னிடம் சொன்னார்கள்.

என்னுடைய வேலையில் இன்னும் சில துக்கமான பகுதிகளும் இருந்தன. அதில் ஒன்று கண்ணிவெடி அகற்றுவது சம்பந்தப்பட்டது. கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் பல இந்த ஒப்பந்தங்களுக்கு போட்டி போட்டன. கண்ணிவெடி அகற்றுவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. கிராமம் கிராமமாகக் கண்ணி வெடிகள் புதையுண்ட இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, எல்லைகளும் வகுக்கப்பட்டிருந்தன. மண்டை ஓட்டுக்குக் கீழே எலும்புகள் வரைந்த எச்சரிக்கைப் பலகைகள் அங்கங்கே மாட்டப்பட்டன. கிராமத்து மக்கள்நலக் குழுக்களை ஒன்றுகூட்டிக் கண்ணிவெடி அகற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டம் தயாரிப்பதில்தான் பிரச்சினை முளைத்தது. அவர்கள் சீக்கிரத்தில் இணைந்து ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. நாலு நாட்களுக்கு ஒருவர் என்று அந்த வருடத்தில் மட்டும் இறந்தவர்களின் தொகை 94. அப்படியும் மூப்பர் குழுக்களுக்கிடையில் ஒரு தீர்வும் ஏற்படவில்லை.

இந்த கிராமத்துக் குழுக்களைக் கூட்டி அரசாங்கம் சார்பில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரியின் பெயர் அப்துல் ஜாமா. ஒரு ஆமை ஊர்ந்து வருவது போல இவர் நடந்து வருவார். இவர் பேசுவதும் மெதுவாகவே இருக்கும். காதுகளை அவர் வாயிலிருந்து ஒரு அங்குலம் து¡ரத்தில் வைத்தால் ஒழிய அவர் சொல்வது ஒன்றும் புரியாது. அடிக்கடி 'அவசரப்படவேண்டாம், உங்கள் குதிரைகளை இழுத்துப்பிடியுங்கள்' என்று சொல்வார். சட்டென்று ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாதவர், ஆனால் எல்லாக் குழுக்களும் ஒருமனதாக முடிவு எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கண்ணிவெடி அகற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் பல மாதங்கள் தள்ளிக்கொண்டே போனது.

இப்படியான சமயத்தில்தான் ஒரு சம்பவம் நடந்து, அது முதல்முறையாக ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. கூனாகபாட் என்ற ஒரு கிராமம், வடமேற்கு சோமாலியாவில் ஹர்கீஸா என்ற நகரத்தில் இருந்து முப்பது மைல் து¡ரத்தில் இருந்தது. மிகவும் பின்தங்கியதும், ஏழைகள் நிறைந்தது மான இந்த கிராமத்தில் ஸ¥க்ரி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய தகப்பன் 40 ஒட்டகங்களைப் பெற்றுக் கொண்டு அவளை நாலாவது மனைவியாக ஒரு கிழவனுக்கு விற்று விட்டான். அவள் கிழவனுடன் வாழ முடியாது என்று துணிச்சலாக முடிவெடுத்து ஒரு ஒதுக்குப் புறமான குடிசையில் வசித்தாள். கிழவனுடைய மூத்த மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் தான் வேலைக்காரியாகிவிடும் சாத்தியத்தை அவள் தீவிரமாக எதிர்த்தாள்.

ஸ¥க்ரியிடம் ஆடுகளும், ஒட்டகங்களும் இருந்தன. குர்ரா மரம் முண்டு கொடுக்கும் து¡ண்களும், களிமண் சுவர்களும், காட்டுப்புல் வேய்ந்த கூரையும் கொண்ட குடிசைதான் அவளுடைய உறைவிடம். அவளுக்கு முப்பது வயது தாண்டு முன்னரே மூன்று குழந்தைகள். இப்பொழுது நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் சுறுசுறுப்பாக வேலை செய்தாள். அவளுடைய ஆடுகளையும், ஒட்டகங்களையும் இரண்டு பிள்ளைகள் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போய்விட்டார்கள்.

அவளுடைய சின்ன மகன் தாஹிர் உடைந்துபோன டயர் ஒன்றை உருட்டி உருட்டி வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அந்த நேரம் ஸ¥க்ரிக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. அன்று பார்த்து அவளுக்குத் துணையாக யாரும் இல்லை. பக்கத்துக் குடிசைப் பெண்கூடத் தண்ணீர் எடுக்க வெகுது¡ரம் போய்விட்டாள்.

தாஹிரைக் கூப்பிட்டு மருத்துவச்சியை அழைத்துவர அனுப்பினாள். எப்படி அந்த இடத்துக்கு போகவேண்டும் என்பதை விளக்கமாகக் கூறினாள். அவனுக்கோ எட்டு வயது. தாய் கூறும்போது புரிந்தது, அவள் அடுத்த வாக்கியத்துக்குப் போனதும் முதலில் சொன்னது மறந்துபோனது. என்றாலும் இது ஒரு முக்கியமான சமாச்சாரம் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. தாய் பாதி கூறிக் கொண்டிருக்கும்போதே அவன் பிய்த்துக் கொண்டு ஓடினான்.

அவனுக்குத் தாய் தன்னை மெச்சும்படி இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும் என்பதில் விருப்பம். அவள் சொன்ன திசையில் வேகமாக ஓடினான். சிறிது து¡ரம் போன உடனேயே அடுத்த விவரம் ஞாபகத்துக்கு வர மறுத்தது. என்றாலும் திசையை மாற்றாமல் ஓடியதில் ஒரு சோளக்காடு வந்தது. அந்த அடையாளம் ஞாபகத்தில் இருந்தது. அங்கே பாதை இரண்டாகப் பிரிந்ததும் கொஞ்சம் தடுமாறிவிட்டான். இவன் நேராகப்போன பாதையைத் தெரிவு செய்தான்.

ஒரு நீளமான மரத்தில் மரங்கொத்தி ஒன்று செங்குத்தாக இருந்து கொத்தியது. அது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இஸ்க் என்று கையை உதறிக் கலைத்த போது அது விர்ரென்று எழும்பிப் பறந்து போனது. சந்தோசம் தாங்காமல் தலைக்கு மேலே ஒரு குச்சியைப் பிடித்துக்கொண்டு ஒரு ஒட்டக நடனம் ஆடினான். அதைப் பார்க்க ஒருவருமே இல்லை. அவன் கண்களுக்கு முன்னே மண்டை ஓடு கீறி, கீழே இரண்டு எலும்புகள் குறுக்காக வரைந்த ஒரு படம் கம்பத்தில் நின்றது. அந்த மண்டை ஓடுதான் அவன் ஆட்டத்தை பார்த்தது. அதற்குக் கீழே கறுப்புப் பலகையில், வெள்ளை எழுத்தில் வலது பக்கம் தொடங்கி இடது பக்கமாக ஏதோ எழுதியிருந்தது. அவன் இன்னும் வாசிக்கப் பழகவில்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. சிறிது நேரம் மண்டை ஓட்டையே பார்த்தான். அதில் ஏதோ வசீகரமாக அவனை நிறுத்தியது. பின்பு வயிற்றை அமுக்கிப் பிடித்த தாயின் நினைவுவர மேலும் ஓடினான். வேகமாகப் போனவனை சூரிய ஒளி தடுத்தது. ஒரு சுருட்டு போன்ற வடிவத்தில் இருந்த ஏதோ ஒரு பொருள் அவனை இழுத்தது. அது உலோகமா யிருந்தது. அதைக் கையிலே எடுத்து உருட்டிவைத்து பார்த்தான். அந்த நேரத்தில் அவனுக்குத் தாயின் ஞாபகம் முற்றிலும் மறந்துபோனது.

ஸ¥க்ரி வலியில் துடித்தாள். தாஹிர் வந்துவிட்டானா என்று அடிக்கடி வாசலைப் பார்த்தாள். நெற்றியில் இருந்து தொடங்கிய வேர்வை வெள்ளமாக வழிந்து அவள் ஆடைகளை நனைத்தது. இது அவளுக்கு நான்காவது பிரசவம். முன் அனுபவம் இருந்தபடியால் அவள் தைரியத்தை இழக்கவில்லை. இரண்டு முழங்கால் களையும் மடித்து ஒரு வில்லுப்போல அவள் வளைந்துபோய் இருந்தாள். அடிக்கடி 'ஹ¥யா, ஹ¥யா' என்று அலறினாள். உடல் எடையின் மையம் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. சிரசு திரும்பிய குழந்தை எட்டு அங்குல து¡ரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தில் தாஹிர் இரண்டு மைல்களைக் கடந்துவிட்டான். எதிர்பாராத விதமாக அந்தக் குடிசையில் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் எழும்பியது. அந்தச் சத்தத்திலும் இனிமை யான ஒன்றை ஸ¥க்ரி அவள் வாழ்நாளில் கேட்டதில்லை.

ஆனால் அவள் கேட்கக்கூடாத ஒரு சத்தம் இரண்டுமைல் தொலைவில் உண்டாகியது. அவளுக்கு குழந்தை பிறந்த அதே நேரம் டயர் விளையாட்டை நிறுத்திவிட்டு மருத்துவச்சியை தேடிப்போன அவளுடைய மகன் துண்டு துண்டாக வெடித்து சிதறினான்.

அங்கே பிரசுரமாகும், நாலு பக்கங்களுக்கு மேல் அச்சடித்தால் கட்டுபடியாகாத ஒரு சாணித்தாள் சோமாலி பேப்பர், மேற்கூறிய விபரங்களை ஒன்று விடாமல் 16 போயிண்ட் சைஸில் எழுதியது. அந்தக் கிராமத்து சனத்தொகை ஒரு தானம் கூடிய அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் ஒரு தானம் குறைந்து கணக்கு சரியானதையும் சுட்டிக்காட்டியது. கிராமத்து குழுக்களுக்குள் நடக்கும் உள்சண்டைகளால் கண்ணி வெடி அகற்றும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படாமல் இழுபடும் அவலத்தை உடைத்து வைத்தது. குதிரையை வெகு நேரம் இழுத்துப் பிடித்தால் அது ஓடவேண்டும் என்பதையே மறந்துவிடும் என்று சொல்லி அந்தச் செய்தியை முடித்திருந்தது.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் குடும்பக் கட்டுப்பாடு நிறுவனம் தன் அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியது. வைக்கோல் முடிப் பெண்ணும் வெளியேறினாள். கண்ணி வெடி அகற்றும் ஒப்பந்தக்காரர்கள் பல மாதங்கள் முடிவுக்காக காத்திருந்து வெறுத்துப்போய் வெளியேறினார்கள். 1999ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நான் வெளியேறினேன். மண்டை ஓடு போட்டு, பெருக்கல் குறிபோல இரண்டு எலும்புகள் கீழே கீறி, எச்சரிக்கை படம்போட்டு காப்பாற்றப்பட்ட பிரதேசம் அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் கிடந்தது. குடும்பக் கட்டுப்பாடு அலுவலகத் தின் வேலையையும் சேர்த்து அது செய்தது.

அ. முத்துலிங்கம்

© TamilOnline.com