அக்கரைப் பச்சை
அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொண்டு போன என் தோழிக்கு அங்கு போனது முதலே இந்திய மண்ணின் ஏக்கம் வந்துவிட்டது. அப்படி இப்படி என இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் ஏக்கம் அதிகமானதே ஒழிய குறையவில்லை. அவள் தூவிய தூவலில் அவளது கணவனும் இந்தியாவிற்கே வந்துவிடலாம் எனத் தீர்மானித்து கணவன், மனைவி இருவரும் சென்னை மாநகரில் வேலை தேடிக் கொண்டு வந்துவிட்டனர்.

சமையலுக்கும், மற்ற வேலைகளுக்கும் பணியாட்கள், எங்கும் போவதற்குச் சுலபமான ஆட்டோ, பட்டுபுடவை சரசரக்கச் செல்லும் கோவில், காலாற நடக்கக் கடற்கரை என்ற கனவுகளோடு வந்து சேர்ந்தாள்.

35 லகரம் கொடுத்துச் சென்னையில் மிக நல்ல வசதியுடன் கூடிய ·ப்ளாட்டில் குடியேறினாள். அதே ஏரியாவில் மிகத் தரம்வாய்ந்த பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தாள். ஸ்கூல் பஸ் காலையில் வெகு சீக்கிரம் வந்துவிடுகிறது எனத் தனியார் ஆட்டோவை அமர்த்தினாள். காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, அவளும் கணவரும் ஆபீஸ் போகத் தோதாக, அதிகச் சம்பளம் கொடுத்து வேலைக்காரப் பெண்மணியை அமர்த்தினாள். காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் எனப் பேசிச் சமையலுக்கு ஆள் ஏற்பாடு செய்து கொண்டாள். வாழ்க்கையில் மிக நிம்மதி, ஆனந்தம் எல்லாம் வந்துவிட்டதாக நிறைவான கனவு கண்டாள்.

முதலில் வீடு - 24 மணி நேரமும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரன் போர் போடவே தண்ணீர் தட்டுப்பாடு வந்தது. அதனால் என்ன? இன்னொரு போர் போட்டால் போச்சு என முடிவு பண்ணி, ஒட்டிக்கு ரெட்டி செலவு செய்து போர் போட்டால் 200 அடி 300 அடி என ஆழம் போனதே ஒழியத் தண்ணீர் வரவில்லை. லாரியில் வந்த தண்ணீரோ வானவில் மட்டும்தான் ஏழு நிறமா, இதோ பாருங்கள் எத்தனை நிறம் - என வண்ண மயமாக வந்தது. தூசி படிந்த தண்ணீரால் பம்ப் பழுதுபட்டுவிட்டது. வெள்ளை வெளேர் என இருந்த மொசைக் தளம் வண்ணத் தண்ணீரால் பழுப்பேறிப் போனது.

ஏராளமான குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போனதால், திருப்பத்தில் கீழே சாய, அடிபட்டுக்கொண்டு வந்தான் அவளது பிள்ளை. 'பத்திரமாகக் குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புகிறோம்' என்கிற நிம்மதியும் போனது. குழந்தைகள் பள்ளியின் உள்ளேயும் வெளியேயும் ஒட்டிக்கொண்டு வந்த மண்ணை நீக்கவே தண்ணீர் தனியாகத் தேவைப்பட்டது.

வெளிநாட்டில் இருந்த பொழுது வீட்டு வேலைகளில் சரிபாதி கைகொடுத்த கணவர் - இந்தியா வந்தபின் அலுவலகமே கதி என ஆகிவிட்டார். குழந்தைகளின் பள்ளிப் படிப்பில்கூட அவரால் உதவி செய்ய முடியாமல் போயிற்று. இதனால் இருவருக்குள்ளும் சண்டை வர ஆரம்பித்துவிட்டது.

இதற்கு இடையில் வேலைக்காரியும், சமையல்காரியும் அடிக்கடி லீவு போட ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்சம் கண்டிப்பாகப் பேசினதால் மாமி வேலை யிலிருந்து நின்றுவிட்டார். 3, 4 மாமிகளை மாற்றியதும், அவர்களுக்குக் கொடுத்த முன்பணத்தைக் கழிக்க மல்லுக்கு நின்றதும் தான் மிச்சம்.

இந்தியக் கனவுகளுடன் அமெரிக்காவில் நிம்மதியாகத் தானே இருந்தோம். இங்கு வந்து எதைச் சாதித்தோம் என அவள் மனம் மறுபடியும் தேடலில் இறங்கிவிட்டது. அக்கரைப் பச்சை என்பது இதுதானோ?

சாருமதி வெங்கட்ராமன்

© TamilOnline.com