நட்பு ரகங்கள்
அன்புள்ள சிநேகிதியே,

தயங்கி, தயங்கி நான் இதை சொல்கிறேன். பெரிய விஷயம் இல்லை. ஆனால் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக இருக்கிறோம். இரண்டு பேருமே சிறிது பொறுப்பான வேலையில் இருந்ததால், நாங்கள், எங்கள் குடும்பம் என்று குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வருவதிலும், தொழிலில் முன்னேறுவதிலும் இருந்துவிட்டோம். வம்பு, அனாவசிய உரையாடல்கள் என்று எதுவுமே இல்லை. இப்போது குழந்தைகள் பெரியவர்களாகி வீட்டை விட்டு சென்று விட்டதால், சமூகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு சில குழுக்களிலும் சிறிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நான்கு வருடங்களாக ஸ்மூத்தா ஆகப் போய்க் கொண்டிருந்தது.

சமீபத்தில், ஒரு குடும்பம் புதிதாக வந்திருந்தார்கள். அவர்களை ஒரு நிகழ்ச்சி யில் சந்தித்த போது மிகவும் நண்பர்களை போல் இருந்தார்கள். நான் எனக்கு தெரிந்த குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்தப் பெண்ணும் நான் செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வம் காட்டினாள். நான் முதலில் மிகவும் சந்தோஷப்பட்டேன். அப்புறம் போகப்போக புரிந்தது அவள் சர்வீசை விட self-promotion ஆக செயல்பட்டாள் என்று. நான் தொழில் விஷயமாக வெளியே சென்று வந்த இந்த 2-3 வாரத்தில் எல்லாக் குழுவிலும் உறுப்பினர் ஆகி பொறுப்பேற்று பழைய ப்ராஜக்ட் follow-up செய்து முடிக்காமல் ஏதோ புதுபுது ப்ராஜக்ட் ஆரம்பித்து வைத்திருக் கிறாள். எனக்கு சிறிது குழப்பமாகவும், மனது வருத்தமாகவும் இருந்தது. இருக்கும் வேலைப் பளுவை பிறருக்கு ஏற்றிவிட்டு, புதுபுது ஐடியாவை கொடுத்து ஆரம்பித்து என்ன பிரயோஜனம்?

நான் ஆத்மார்த்தமாக ஒரு பணியில் ஈடுபடுபவள். இல்லாவிட்டால் கமிட் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு இந்த பந்தா, recognition எதுவும் பிடிக்காது. ஆகவே, புதிதாக வந்திருக்கும் இந்த தோழி எல்லா வற்றையும் ஒரு ஷோவிற்காக செய்யும் போது எனக்கு நான் செய்யும் சர்வீசில் இருக்கும் உற்சாகம் குறைந்து போய்விடுகிறது.
முன்பெல்லாம் மீட்டிங்கிற்கு ஒன்றாக போய்விட்டு வருவோம். இப்போது அவளுடைய பேச்சும், எப்போதும் அந்த பேச்சுடன் இருக்கும் பரபரப்பும், பதட்ட நிலையும் எனக்கு சில சமயம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. அவளிடம் எப்படி எடுத்து சொல்வது என்று தெரியவில்லை. நான் அதிகம் பேசாதவள். இதை தவிர்த்து எனக்கு 6 மாதமாக தான் பழக்கம். ஆனால் ஏதோ 20 வருடங்களாக எங்களை தெரிந்தது போல் எல்லோருக்கும் காட்டிக் கொள்கிறாள். என்னதான் செய்வதென்றே புரியவில்லை.

இப்படிக்கு...

அன்புள்ள சிநேகிதியே

சின்ன, சின்ன சம்பவங்கள் தான் சில சமயம் பெரிய போர்களை உண்டாக்கும். உங்கள் 'personality'க்கும் உங்கள் தோழியின் 'Personality'க்கும் நிறைய ஆழமான வித்தியாசங்கள் இருக்கும் போது உண்மையான அருமையான, ரசித்து அனுபவிக்கும் நட்பு உறவு இருப்பது கொஞ்சம் சிரமம். உங்களுக்காக அந்தத் தோழி தன் behavior ஐ மாற்றிக் கொள்ள போவதில்லை. செய்வது கடினம். நீங்களும் உங்கள் அடிப்படைக் குணங்களை அல்லது value systemத்தை - அதன் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. உங்கள் அபிப்பராயங்கள் மிகவும் மெச்ச வேண்டியவை. ஆனால் எல்லோரும் உங்களைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது உங்கள் அருமையான மனம் சுருண்டு விடுகிறது. வேதனை பிறருக்கு அல்ல... நமக்குத்தான்.

மனித உறவு முறைகளை நாம் உள்வாங்கும் போது மிகவும் விசித்திரமாகவும், முரண் பாடாகவும் இருக்கும். கண்டிப்பாக 'மில்லியன்' டாலராக சேர்க்க வேண்டும் என்ற கனவுகளுடன் வந்து அதை நிஜமாக்கும் வேள்வியை செய்து வெற்றி பெற்ற பிறகு 'பணத்தில் என்ன இருக்கிறது. மனித உறவுகள் தானே முக்கியம்' என்று பேசுபவர்கள் பல பேர் இருக்கிறோம். அதே போல் தான் பெயரும். 'பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்டுக் கொண்டே பேருக்காக உழைப்பவர்களும் நம்மில் இருக்கிறோம். பெயர், பணம், புகழ் மூன்றிற்கும் அப்பாற் பட்டு நீங்கள் செயல்பட்டால் சராசரி மனிதர்களைவிட ஒரு அடி உயரத்தில் தான் இருப்பீர்கள். அப்போது மற்றவர்களின் சின்னத்தனம் உங்களுக்கு சிறிய சிந்தனை யில்தான் வர வேண்டுமே தவிர, பெரிய சிந்தனைக்குள் புகக் கூடாது. 'Think big for higher things in life'.

உங்களைப் போன்ற குணம் உள்ளவர் களுக்கு, நீங்கள் நெருடலாக நினைக்கும் பல விஷயங்களை நொடியில் சமாளித்து விடலாம். உதாரணத்துக்கு: அந்த தோழியின் நடத்தையின் காரணங்களுக்கு பின்னால் என்ன இருக்கும் என்று யோசித்ப் பாருங்கள். Insecurity and Inadequacy. No wonder she craves for recogintion. உங்கள் வாழ்க்கையின் அணுகுமுறையால், உங்கள் சமூகத்தில் உங்களைப்பற்றி உயர்ந்த எண்ணங்களை வைத்திருப்பீர்கள். அதனால் அந்த தோழி உங்கள் நட்பில் தன்னை இனம் கண்டு கொள்கிறாள்; பெருமைக் கொள்கிறாள்.

உங்களுடைய 'sense of commitment' அவளுக்கு இல்லையென்றால் விரைவில் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போது ஏற்படும் பிரச்சினைகளில் உங்கள் தோழி சிறிது நிதானப்படலாம், கற்றுக் கொள்ளலாம். முடிவு அப்படியே இருக்கலாம். அதுதான் அவள் முடிவு. நட்புக்களில் பலவகையிருக்கிறது. நாம் நம்மை சுற்றி வட்டங்கள் போட்டுக் கொண்டே போனால் விளங்கும். அந்தரங்க நட்பு, சாதாரண நட்பு, சமூக நட்பு, சந்தர்ப்ப நட்பு, அவசிய நட்பு, அசாதாரண நட்பு(!) அஞ்ஞான நட்பு, மெய்ஞான நட்பு என்று எத்தனையோ ரகங்கள், வட்டங்கள். அந்த தோழியை பற்றி நினைத்து do not lose your sanity என்று சொல்ல மாட்டேன். நினைத்து, அந்த நடத்தையை பற்றி மனதில் சிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனையே மாறிவிடும். அப்போது மனம் அந்த தோழியின் மற்ற நல்ல குணங்களை நினைக்க ஆரம்பிக்கும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com