அடியேன் நின்னை மறப்பனோ!
கண்ணுக்குள் மணியென
எனைக் காத்து, வளர்த்திட்ட
என்னுயிர் ஐயனே

எத்தனையோ
விடிகாலைப் பொழுதுகளில்
என் கண்ணில் மெல்லிதாய்
நீர் தெளித்து, விழியிரண்டும்
திறக்கும் வரை மடியிருத்தி
கொடிக்காலுக்கு நீருட்டும்
வாய்க்காலில் கூதற்
காற்றென்றும் பாராது
எனைக் குளிப்பாட்டிக்
கோயிலைச் சுற்றி வலம் வந்து
'பரம்பொருள் இதுதான்'
என்றோர் சிலையை அன்று நீ
காட்டிய போதே... நானறிவேன்

உன் வலதுகைச் சுட்டுவிரலை
என் இடது கைக்குள்
இறுகப் புதைத்து
நீ நடக்கும் வேகத்திற்கு
இணையாய் மூச்சிரைக்க
என்று உன் நிழலோடு
ஓடிவந்தேனோ
அன்றே அறிவேன்...
எங்கும் நிறை பரம்பொருள்
என்னோடு, என் கையோடென்று !

ஐந்து வயதில் அம்மையார் ஊற்றில்
ஆழ்ந்து விடாமல் நீச்சல் கற்க
என் வயிற்றில் சுற்றிய
எட்டுமுழ வேட்டி நீ;
இருபது படிகள் ஏறுமுன்னரே
என் கால்கள் வலிப்பதைக்
கண்களில் கண்டு,
இளம் பிஞ்சுப் பாதங்களை
இதமாய் வருடி, எஞ்சியுள்ள
எண்ணூறு படி ஏறி
ஆறுமுகம் தரிசிக்க
உன்னிரு தோள்கள்
எனக்கோர் பல்லக்கு!

ஏழு வயதில் எனை வந்து
வாட்டிய வைசூரிக்கு எமனாய்
என் மேனியில் வெண்சாமரம்
வீசிய வேப்பிலை நீ!

என் மனமறிந்து எட்டில்
சொல்லிய பொய்க்கு
என் முதுகெங்கும் விளையாடிய
புளிய விளாரும் நீ!

பதிமூணாம் வாய்ப்பாடு எனக்குப்
பாகற்காய், சூசைப் பாண்டி
சார்வாளுக்கோ அது எட்டிக்காய்;
உனக்கதுவோ சர்க்கரைப் பாகு!

படிப்பதற்காக அல்ல;
வீட்டுக்குப் பக்கமாய் இருந்த
ஒரே குற்றத்திற்காகப் பள்ளியில்
ஒதுங்கிய உனக்கு, முன்னூறு
பக்கப் பேரேட்டுக் கணக்கை
மனதாலே கூட்டி, கழித்து,
பெருக்கி, வகுத்து மூடிவைக்க
மூணு மணி நேரம்; என் கையில்
அது வந்து கால்குலேட்டேரோடு
இணைந்து ஒரு இருபது
தவறுகளோடு மூலையில்
சாத்தி வைக்க எனக்கு
எடுக்கும் ஒரு வாரம்!

முன்னொரு நாள் கல்லூரியில்
நான் படிக்கின்ற நாளில்
வெடித்து வரும் இருமல் தன்னை
ஓசையின்றி உள்ளடக்கி,
மருத்துவருக்கும் அவர்தம்
மருந்துக்கும் ஆகும் பணத்தை
மடியினுள் சேர்த்து வைத்து
கடும் வெயிலில் கால் தேய
நடந்து வந்து, இடுப்பில் சுற்றியிருந்த
எல்ஜி பெருங்காயப் பையிலிருந்து
கிழிந்தும் சுருண்டுமிருந்த இருநூறு
ஒற்றை ரூபாய் நோட்டுக்களை
என்னிடம் நீட்டி
''இது நீ கேட்ட வாட்ச்சுக்கு"
என்றுரைத்தபோது உன்
கண்களில் கண்ட ஒளியில்
இன்றும் என் கண்கள் கூசும்.

'பிரிவரிய ஊசி வழிப் பின் தொடரும்
நூல் போலே' நீயும் நானும்
தந்தை, தனயன் போலன்றி
தரமிகு நண்பர்களாய்
சீர் மிகுந்து ஓங்குகையில்....
ஏன் பிரிந்தோம்?
இன்று வரை எண்ணிடக் கூடுவதில்லை

முப்பது ஆண்டுகளுக்கு முன்னொரு நாள்,
இந்த மண்ணுக்கு வரும் முன்னே-
நீயிருந்த அயோத்திக்கு வந்து உன்னிரு தாளில்
வீழ்ந்தெழுந்து விடை பெற்ற போது
உன் கண் ஏரியில் ஒரே பிரவாகம்
கண்களுக்குள்ளோ... தசரத சோகம்.
கன்றினைப் பிரியும் பசுக் கூட
''அம்மா" என்றலறும், நீயோ
கையிரண்டுயர்த்திக் கற்சிலையானாய்
நான் மட்டும் அறிவேன்
என் கண்ணில் நீரும்
உன் நெஞ்சில் உதிரமும் கொட்டுவதை!

நெஞ்சு நிறைய நீ போதித்த
நீதிகளைச் சுமந்து, கண்ணிறைய
உனைக் காண வேண்டிக்
காத்திருந்த கனவுகளில் பொதிந்து
ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்
ஒரு முறை உன்னைக்
காண வந்தேனே! ஐயா...
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
எப்படியிருக்கும்?

விழிகளுக்கு மேல் விரல்களைக்
குடையாய் விரித்துக் கொண்டு
என்னைத் தொட்டுத் தடவி,
என் விரல்களுக்குச் சொடுக்கெடுத்து
கண்ணிரண்டை விண்ணுக்கேற்றி
யோசிப்பது போலும் காட்டி
பின்னர்க் கவிழ்ந்த தலையை
மெல்லியதாய் நிமிர்த்திக்
கேட்டாயே ஒரு கேள்வி...
"தம்பி யாருண்ணு தெரியலியே,
ரொம்பப் பார்த்த முகமாத் தெரியுது'' என்று!

உனக்கு அல்ஸய்மராம்...
டாக்டர் தம்பி சொல்லுகிறான்.
'உன்னில் உருவான நான், உன்
பிம்பம் ஐயா' என்று சொல்லி
உன்னிடமே வாதிடவா? இல்லை,
கோயில்படி, குளத்துக்கரை என்றெல்லாம் பாராது
கம்பனின் பாடலொன்றைச்
சத்தமாய்ப் பாடச் சொல்வாயே...
''தாய் தன்னை அறியாத கன்றில்லை,
தன் கன்றை ஆயும் அறியும்'' என்று
அன்று பாடிய கம்பனை
இன்று இங்கு இழுத்து வந்து
'பாரய்யா, என் பரம்பொருள்
இருக்கும் திருக்கோலத்தை' என்று
பழித்திடவா?

கோம்ஸ் கணபதி

© TamilOnline.com