சிந்திக்க வேண்டிய விஷயங்கள்!
என்னுடைய நெருங்கிய தோழி சத்யாவின் (பெயரை மாற்றியிருக்கிறேன்) சங்கடமான நிலைமை என்னையும் பாதித்து இருக்கிறது. உங்கள் ஆலோசனை உடனே தேவை.

சத்யா மிகவும் மென்மை, மிகவும் அழகு. அத்தை பையன் ஆசைப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டார். நான்கே வருடம். ஒரு மோட்டர் சைக்கிள் விபத்தில் போய் விட்டார். சத்யாவிற்கு அப்போது 23-24 வயதுதான். கையில் 2 வயதுப் பெண் குழந்தை. அவள் நாத்தனார் அமெரிக்கா வில் இருந்தார். சத்யாவை வரவழைத்து மேற்படிப்பிற்கு உதவி செய்தார். பிறகு வேலை, வீடு, கிரீன் கார்டு என்று எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுச் செய்தார்கள் நாத்தனாரும் அவர் கணவரும். குழந்தை, மாமியார் இருவரையும் பிறகு வரவழைத்துக் கொண்டு, பாதுகாப்பிற்காக நாத்தனார் இருந்த பகுதியிலேயே தங்கி வாழ்க்கையைத் தொடங்கினாள் சத்யா.

2 வருடங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சோக சம்பவம். ஆதரவாக இருந்த நாத்தனார் திடீரென்று ஒரு வார ஜுரத்தில் இறந்துபோய்விட்டாள். அவள் கணவருக்கும், 2 மகள்களுக்கும் (வயது 14, 16) சேர்த்துச் சமைத்து, அவர்களையும் பராமரிக்க ஆரம்பித்தாள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு அவள் நாத்தனாரின் கணவர் சத்யாவிடம் தனியாகப் பேசி, ''உனக்கும் துணையில்லை. எனக்கும் துணையில்லை. நாம் இருவரும் ஏன் ஒன்றுசேரக் கூடாது? என் குழந்தைகள் உன்னிடம் 'மாமி மாமி' என்று உயிரை வைத்திருக்கிறார்கள். உன் பெண்ணும் என்னிடம் பாசமாக இருக்கிறாள். யோசித்து உன் முடிவைச் சொல்'' என்று சொல்லியிருக்கிறார். எனக்கு அந்தக் குடும்பத்தையும் நன்றாகத் தெரியும்.

அவர் தங்கமான மனிதர். முதலில் சத்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்து, என்னிடம் சொல்லக்கூடத் தயங்கி இருக்கிறாள். பிறகு பழகப் பழக அவரைப் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அவளுக்கு இப்போது 35 வயது. அவருக்கு 45-48க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய கருத்தைக் கேட்டாள். நான் முற்போக்குவாதி. ஆகவே என் முழு ஆதரவைக் கொடுத்தேன். அவள் மாமியாருக்கு எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் சுபாவம். என்னிடம் உரிமையாகக் கோவில், டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் என்று கூட்டிக்கொண்டு போகச்சொல்லிக் கேட்பார். ஆகவே, நானும் அதே உரிமையில் நானே ஒரு ஐடியா கொடுப்பதாக (சத்யாவை சம்பந்தப்படுத்தாமல்) நினைத்துக் கொண்டு, அவரிடம் பேசிப் பார்த்தேன். அவ்வளவுதான். நன்றாக மாட்டிக் கொண்டேன். என்னைத் திட்டி, சத்யாவைத் திட்டி, மாப்பிள்ளையைத் திட்டி, சிங்கம்போல் உறுமிக் கொண்டிருக்கிறார்.

சத்யாவிற்கு இப்போது மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க ஆசையும், அதே சமயம் பயமும் அதிகரித்துக் கொண்டு போகிறது. 3 விஷயத்திற்கு பயப்படுகிறாள்.

1. தன்னுடைய நாத்தனாருக்கு துரோகம் செய்கிறோம்.
2. மாமியாரின் கோபம், சாபம்
3. சமூகத்தின் வித்தியாசப்பார்வை

என்னால் முன்பு போல அந்த வீட்டிற்குச் சுதந்திரமாக போக முடியவில்லை. அந்த மாமியின் கோபம். சத்யாவின் அழுகை. வீடே நரகம். நீங்கள் அந்த மாமியுடன் பேசிப் பார்க்கிறீர்களா? போன் நம்பர் கொடுக்க முடியுமா? சத்யாவை ஆதரித்ததில் நான் என்னுடைய வரம்பை மீறிவிட்டேனா? என் தோழிக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்.

இப்படிக்கு
............

அன்புள்ள,

போன் நம்பர் கொடுக்க விரும்பாததற்கு உங்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன். சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு, வாழ்க்கையின் சுகதுக்கங்களை அதற்கேற்றாற் போல அனுபவித்து, அனுசரித்துப் பழகிப்போன மாமிகள், மாமியார்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் தருவது சகஜம். முன்பின் தெரியாத நான், உங்கள் தோழியின் மாமியாருடன் போன்மூலம் பேசுவதால் உடனே மனமாற்றம் ஏற்படாது. எனக்கும் திட்டு விழும்.

நீங்கள் உங்கள் தோழிக்கு ஆதரவு கொடுப்பது நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சம்பிரதாயம், சடங்கு, சமூகம் - இவற்றுக்கெல்லாம் அப்பால், சிந்திக்க வேண்டிய விஷயங்கள் - மனித உறவுகள், உணர்ச்சிகள், உரிமைகள்.

இளம் வயதில் வாழ்க்கையை இழந்த உங்கள் தோழி மறுபடி வாழ ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். அதுவும், அவராகத் தேடிப் போகவில்லை. மேலும், அந்த நாத்தனாரின் கணவர், தன் தனிமையை மறக்க சத்யா இல்லாவிட்டால், ஒரு சந்தியா அல்லது சேண்டி என்று துணை தேடிப் போனால், அந்த முடிவு அந்தக் குடும்ப மனிதர்கள் அனைவரையும் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதில் உங்களுக்குக் குற்ற உணர்ச்சி வேண்டாம். உங்கள் அக்கறையும், தைரியமும் பாராட்டப்பட வேண்டியது. உங்கள் தோழியின் நாத்தனார், ஒரு மூத்த சகோதரியாக இருந்து சத்யாவின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்று இருக்கிறார். நிறையக் குடும்பங்களில் மூத்த சகோதரி இறந்துவிட்டால் பெற்றோர் விருப்பத்துடன் இளைய சகோதரியை அதே நபருக்குத் திருமணம் செய்து கொடுப்பார்கள். சமூகக் கோட்பாட்டுக்குள் இருக்க விரும்புவர்கள்கூட, இதை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இதை துரோகம் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை.

சத்யாவின் மாமியார் இதை ஏற்றுக் கொள்ள பல நாள்கள்/பல மாதங்கள்/வருடங்கள் ஆகலாம். அந்த எதிர்ப்பை எதிர்க்க மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகம் என்பது உங்களைப் போல், என்னைப் போல் மனிதர்கள் நிறைந்த உலகம்தான். போற்றுபவர் இருப்பார்; தூற்றுபவர் இருப்பார்; காப்பாற்றுபவரும் இருப்பார்கள். உங்கள் தோழிக்கு நிறைய தைரியமும், நம்பிக்கையும் தேவை. அவருடைய மனதிற்கு உரம் போட நீங்கள் இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com