தேவாங் மேத்தாவுக்கு வயது நாற்பது. சுறுசுறுப்பானவர். எளிய பின்னணியிலிருந்து முன்னுக்கு வந்தவர். இந்தியக் கணினிக் கழகத்தின் (NASSC0M) தலைவர். மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் இரண்டு வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்ற போது அந்தக் குழுவின் முக்கிய வல்லுனர். ஓட்டல் அறையில் இறந்து காணப்பட்டார். மரணத்திற்குக் காரணம் - பெரும் மாரடைப்பு.
இது பெரும்பாலான இந்தியரைப் பாதிக்கும் உயிர்க்கொல்லி நோய். முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் புகழின் உச்சியில் இருக்கும் போதே மாரடைப்பில் காலமானவர்கள் எவ்வளவு பேர்? பிரபலங்கள், நண்பரின் நண்பர், தூரத்து உறவினர் என்று எத்தனை பேரின் அகால மரணத்தைப் பற்றிச் சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? உங்களுக்கும் அந்த நிலமை ஏற்படக்கூடிய நிகழ்தகவு (probability) என்ன?
கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவ உலகில் பரவலாய்ப் பேசப்படும் நோய் வளர்சிதை இணைபோக்கு (Metabolic syndrome அல்லது Syndrome X). இந்த நோய் நான்கு கூறுகளை கொண்டுள்ளது. அவை
1. பருத்த மேல் பகுதி (சின்ன தொப்பை என்று படிக்கவும்), 2. குறைவான குளூக்கோஸ் தாங்குதிறன் (Impaired Glucose Tolerance), 3. இயல்புமீறிய கொழுப்பு நிலவரம் (abnormal lipid profile), 4. உயர் இரத்த அழுத்தம் (High BP). இதன் மூல காரணம் இரத்த இன்சுலின் மிகைப்பு (Hyper insulinemia).
இந்த இணை போக்கு உள்ளவர்களிடையே எல்லாக் கூறுகளும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வயதில் தோன்றலாம்.
இது யாரையோ பாதிக்கும் நோய் அல்ல. தெற்காசிய மக்கள் (குறிப்பாக ஆண்கள்), அதிலும் வெளிநாட்டில் குடியேறிய முக்கால்வாசிப் பேர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் சோகம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு இதைப்பற்றிய தகவலோ அல்லது அதன் கடுமையோ தெரிவதில்லை. அதைவிடச் சோகம் அமெரிக்க மருத்துவர்கள் பலரிடம் இந்த நோய் இந்திய மக்களிடத்து காட்டுத்தீ போல் பரவியுள்ளது என்ற விழிப்பு இல்லாத அறியாமை. உங்கள் மருத்துவரை அணுகி வினவி மேற்கொண்டு நுண்ணறிவு பெறும் வரை இந்த கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தனக்கு இந்த இணை போக்கு இருப்பதாகக் கருத வேண்டும்.
நீரிழிவு நோய் (diabetes), மாரடைப்பு (heart attack), இரத்த அழுத்தம், பக்கவாதம் (stroke) ஆகிய பல உயிர்க்கொல்லி நோய்களுக்கான முன்னோடி இது. இந்திய அமெரிக்கச் சமூகத்தினர் மற்ற எல்லா விதத்திலும் வெற்றியடைந்த போதிலும், இந்த நோயினால் உடல் நலக் குறைவு ஏற்பட்டுப் பின்தங்கி விடக்கூடாது என்ற எண்ணமே இந்த விழிப்புணர்ச்சிக் கட்டுரைக்குக் காரணம்.
மாவுச்சத்து மிகுந்த உணவு முறையும் உடற்பயிற்சி இன்மையுமே இந்த நோய்க்கு அடிப்படைக் காரணங்கள். உங்கள் தாத்தா தொண்ணூறு வயது நோய் நொடியில்லாமல் வாழ்ந்திருக்கலாம்; நன்றாக நெய்யும் பாலும் அவர் சாப்பிட்டிருந்தாலும், வாழ்நாள் முழுதும் அவர் வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். அக்கம் பக்கம் மூன்று நாலு கல் தொலைவில் இருந்த இடங்களுக்கெல்லாம் அவர் நடந்தே சென்றார்.
உங்கள் தந்தையும் தாத்தா அளவுக்கே சாப்பிட்டார்; ஆனால் நகர வாழ்க்கையில் அன்றாடம் பேருந்து பிடித்துச் சென்றார். தாத்தா அளவுக்கு அவருக்கு உடற்பயிற்சி கிடையாது. நாற்பத்தைந்து வயதில் சர்க்கரை எட்டிப்பார்த்தது; அறுபதில் மாரடைப்பு வந்து இருதய அறுவை சிகிச்சை. நீங்களோ ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி. பிறந்தது முதல் வாகன சொகுசு - பள்ளிக்கு சென்றபோது பள்ளிப் பேருந்து; பதினேழு வயதில் மோட்டர் பைக்; அமெரிக்கா வந்தது முதல் 'காலில்லாமல் கூட இருக்கலாம், காரில்லாமல் இருக்க முடியாது!' என்கிற பொது நியதியின் பேரில் டொயோடா கார். பள்ளிப் பருவத்தில் 'நன்றாக படித்தால் தான் அமெரிக்கா போக முடியும்' என்கிற கனவின் காரணமாக ஓடியாடி விளையாடவே இல்லை. உடலுறுதி, தேகப் பயிற்சி என்ற பேச்சுக் களுக்கெல்லாம் நீங்கள் செவிசாய்த்ததே கிடையாது. இதற்கு மேல் உங்கள் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளலாம்.
தெற்கு ஆசிய (குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை) உணவு வகைகள் மாவுச்சத்தும் (carbohydrate), கொழுப்புச்சத்தும் மிக்கவை. இன்று காலை முதல் சாப்பிட்ட உணவு வகைகளெல்லாம் பட்டியல் போட்டுப் பாருங்களேன்--இட்டிலி, தோசை, பொங்கல், வடை, பூரி, இடியாப்பம், புளியோதரை, தயிர் சாதம் இவை எல்லாவற்றிலும் மேற்சொன்ன இருவகைச் சத்து தவிர வேறு எதுவுமில்லை. இத்தோடு தேங்காய், நெய், எண்ணெய், சர்க்கரை, வெல்லம்--கேட்கவே வேண்டாம். இல்லை அய்யா, நான் நம்ம சிற்றுண்டி எல்லாம் சாப்பிடுவதே கிடையாது, எல்லாம் அமெரிக்கன் உணவுதான் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அங்கேயும் என்ன சாப்பிடுகிறீர்கள்? பீட்சா, டோனட், நூடில்ஸ், பர்கர், குக்கீஸ், பிரெட் என்று வரிசை நீள்கிறது.
"என்ன தான் சாப்பிடுவது?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கறிகாய் வகைகள், பழங்கள் மற்றும் புரதச் சத்து மிக்க உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய், நெய்யில் பொரித்த பண்டங்களை காலனின் வடிவாகக் கருத வேண்டும். நொறுக்குத் தீனிக்கு ஒரு சலாம் அடிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது உடற்பயிற்சி. தினமும் குறைந்த பட்சம் நாற்பது முதல் அறுபது நிமிடங்களுக்கு வியர்வை சொட்டும் வகையில் உடலை வருத்த வேண்டும். நடக்கலாம், மிதிவண்டி ஓட்டலாம், ஓடலாம், படகுத் துடுப்பு போடலாம்; உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று ஒரு பயிற்சியாளரிடம் உங்களுக்குப் பொருந்துகின்ற பயிற்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்கள் நாடித்துடிப்பு இதனால் அதிகரித்து உங்கள் இதயத்தைப் பழக்க வேண்டும்.
மருத்துவரிடம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று உங்கள் எடை, வயிற்றுச் சுற்றளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு விகிதம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
உடல் எடை குறியெண் (Body Mass Index) என்பது ஒருவரின் உடல் பருமனைக் குறிக்கும்.
இதற்கான சூத்திரம் (formula):
எடை (கிலோக்களில்)/ உயரத்தின் இருபடி (மீட்டர் இருபடிகளில்)
[Weight in Kgs/ Height (in meters) squared (meter-squared)].
இந்தக் குறியெண் இருபத்தி மூன்றுக்கு அதிகமானால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிகுறி. இருபத்தி எட்டைத் தாண்டினால் பருமனான உடல் (obesity) என்று அர்த்தம். அமெரிக்கர்களை விட இந்த விகிதங்கள் ஆசியர்களுக்கு மேலும் கண்டிப்பானவை. இரத்த சர்க்கரை அளவு (வெறும் வயிற்றில் சோதனை செய்யும்போது) நூற்றுக்கு அதிகமானாலே நீங்கள் கவனம் செலுத்தத் தருணம் வந்துவிட்டது. நூற்றி இருபதைத் தாண்டினால் நீரிழிவு நோயின் ஆரம்பம் என்று பொருள். இரத்த அழுத்தம் (பாய்ச்சும் நிலை அல்லது systolic pressure) 130ஐத் தாண்டினால் கவனம் செலுத்த வேண்டும்; 140ஐத் தாண்டினால் மாத்திரை ஆரம்பிக்க வேண்டியிருக்கலாம். இரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பவர்கள் உப்பைத் தவிர்த்தல் அவசியம். குறிப்பாக ஊறுகாய், வற்றல் முதலியவற்றில் உப்பு ஏராளம். தினமும் சாலட், பச்சடி வகையறாக்கள் மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொண்டு அரிசிச் சோறு மற்றும் பொரித்த பண்டங்களைத் தவிர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது.
வாழ்க்கையில் சிறு வயது முதல் கடினமாக உழைத்து, நுழைவுத் தேர்வுகளில் எல்லாம் வெற்றி வாகை சூடி, தொழிற் கல்லூரிகளில் நல்ல தரம் பெற்று, அமெரிக்க தூதரக வாயிலில் தவம் கிடந்து, இங்கு படிப்படியாக முன்னேறி பச்சை அட்டை வாங்கி, மாளிகை போல் மனை புகுந்தது, அதை அனுபவிக்க முடியாமல் சொற்ப வயதில் மாள்வதற்காக அல்ல என்பதை அவ்வப் போது நினைவில் கொள்ள வேண்டும். இளைஞர்கள் முப்பது வயதிற்கு முன்பாகவே வாழ்கைக் காப்பீடு பெற்றுக் கொள்வது முக்கியமானது.
இந்த நோயையைப் பற்றி மேலும் விவரங்கள் வேண்டுவோர் www.aapimsr.org மற்றும் www.americanheart.org போன்ற வலைத் தளங்களில் பெறலாம்.
என்ன இன்னும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள்? போய் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.
மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன், மரு. வரலட்சுமி நிரஞ்சன் |