பொய்யன் தலையில் சாம்பலைக் கொட்டு! (- பகுதி 5)
[முன்பு திருமணச் சடங்கு என்பது பொய்யும் வழுவும் தோன்றியதனாலேயே சான்றோர்களால் உருவானது என்று தொல்காப்பியம் சாற்றுவதைக் கண்டோம். அடுத்து, களவில் ஒரு மங்கையைக் காதலித்துக் கைவிட்ட ஒருவனுக்குச் சங்கக் காலத்தில் நேர்ந்த கதியைக் காணக் கள்ளூருக்கு இப்பொழுது செல்கிறோம்...]

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளன் என்னும் சங்கச் சான்றோர் கள்ளூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். தலைவியின் தோழி பொதுமகளிரோடு பழகும் தலைவன் மீண்டபொழுது அவனைத் தடுத்துக் கண்டிக்கும் பொருட்டுச் சொல்லினவாறு அமைந்துள்ளது அவர் பாட்டு.

கள்ளூர் காண்பதற்குத் தக அழகிய ஊர்; தொன்று தொட்டுப் புகழ் வாய்ந்த குடிகளை உடையது; பல்வகைப் பூக்கள் மலர்ந்த கழனிகளைக் கொண்டது; கரும்பு அடர்ந்து வளரும் தோட்டங்களை உடையது. அத்தகைய பெரிய பெயர் பெற்றிருந்தது கள்ளூர்.

“.. காண்தகத்
தொல்புகழ் நிறந்த பல்பூங் கழனிக்
கரும்புஅமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்”
(அகநானூறு: 256:13-15)
[கழனி = வயல்; அமல் = அடர்; படப்பை = தோட்டம்]

கைவிரித்தான் கயவன்!

அங்கே ஒளிபொருந்திய நெற்றியை உடைய இளம்பெண்; அவளைக் காதலிப்பதாகக் காட்டி ஊரறியாமல் களவிலே கூடி அளவளாவினான் ஒருவன்; அவள் அழகினைக் கவர்ந்தான். அம்மங்கையோ அவன் விரைவில் வெளிப்படையாகப் பெண்கேட்டுத் தன் வீட்டாரிடம் வருவான் என்று நம்பியிருந்தாள். ஆனால் அவனோ இறுதியில் கைவிரித்துவிட்டான்.

அவளைத் தெரியாது என்ற சூளுரை!

பெண் வீட்டாரை மற்றவர்கள் பெண்கேட்க அணுகியபொழுது அம் மங்கையின் தோழி அம் மங்கை ஏற்கனவே ஒருவனைக் களவில் காதலித்துக் கற்புக்கடம் பூண்டுவிட்டாள் என்று சொல்லிப் பெண்வீட்டாரை அறத்தொடு நிறுத்தினாள். பெண்வீட்டார் சரி அவனையே மணம்முடிப்போம் என்று கருதி அவனைக் கேட்கவும் அவன் “அவளை எனக்குத் தெரியாது! அவளை நான் பார்த்தும் அறியேன்!” என்று சூளுரை சொல்லினான்.

ஊரவையின் உசாவல்!

இது ஊர் மன்றத்திற்குச் சென்றது. அந்த அறங்கூறும் சான்றோர் அவை அவனைப் பற்றி உசாவி அவன் அவளோடு ஈடுபட்டிருந்த நடவடிக்கைகளைக் கவனித்தவர்களின் சான்று கிடைத்தது.

“கள்ளூர்த்
திருநுதற் குறுமகள் அணிநலம் வௌவிய
அறன் இலாளன் “அறியேன்!” என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்”
(அகநானூறு:256:16-18)

[நுதல் = நெற்றி; நலம் = அழகு; வௌவிய = கவர்ந்த;
திறன் = நேர்மை; சூள் = சபதம், வாக்கு; கரி = சான்று, சாட்சி; கடாய் = கடாவி = வினாவி, உசாவி]

அவன் நேர்மையில்லாத வாக்குச் சொல்லியுள்ளான் என்பதைத் தீர அறிந்த ஊர் அவையம்
அவனுக்குத் தண்டனை அளிக்கமுடிவு செய்தது.

அக்காலத்து ஊரார் மன்றம் நீதிக்குப் பெயர்போனதே. ஊர்நீதி சொல்பவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தே நியாயம் சொல்லினர். இதைப் பழையனூர் நீலி கதையால் அறியலாம்; நீலியை நம்பாத வணிகனை அவளை மணக்க வற்புறுத்திய ஊர்மன்றத்தினர் அவனுக்கு எந்தக் கேடு நேர்ந்தாலும் தங்கள் உயிரைக் கொடுப்பதாக உறுதி கொடுத்தனர்; அவனும் அதை நம்பி மணந்தான்; ஆனால் அவளோ அவனை முதலிரவிலேயே கொன்று விட்டாள்; உடனே ஊரார் எழுபது பேர் தீக்குளித்துத் தங்கள் வாக்கைக் காத்தனர்! இது நடந்தது காஞ்சிபுரம் அடங்கிய தொண்டைநாட்டில் உள்ள ஆலங்காட்டு அருகே. அதனால்தானே “சோழநாடு சோறுடைத்து; பாண்டிநாடு முத்துடைத்து; சேரநாடு வேழமுடைத்து” என்று பொருட்சிறப்பைப் புகழ்ந்த ஔவையார் “தொண்டைநாடு சான்றோர் உடைத்து” என்றார் அந்த மக்கட்சிறப்பைப் பாராட்டி!

முக்கொம்பில் கட்டிச் சாம்பல் கொட்டு!

“முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி”
(அகநானூறு:256:19)

[முறி = தளிர்; ஆர் = நிரம்பு; பெருங்கிளை = பல கிளைகள் கிளைக்கும் இடம், முக்கொம்பு; செறியப் பற்றி = இறுகக் கட்டி]

அந்தப் பொய்யனைத் தளிர்கள் செழித்த ஒரு மரத்தில் மூன்று கிளைகள் கிளைக்கும் முக்கொம்பில் இறுகக் கட்டினர்! பிறகு மரத்தில் ஏறி அவன் தலையில் சாம்பலைக் கொட்டினர்! அப்பொழுது நீதியால் சிறப்பு மிகுந்த அந்த அவையில் எழுந்தது பெரிய ஆரவாரம்!

“நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பு...”
(அகநானூறு:256:20-21)

[நீறு = சாம்பல்; ஞான்றை = பொழுது; வீறு = சிறப்பு; சால் = மிகு; அவையம் =அவை; ஆர்ப்பு = ஆரவாரம்]

ஏனிந்த வழக்கம்?

அதற்குப் புலியூர் கேசிகன் சொல்லும் விளக்கம்: “ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டவன், அவளைக் கைவிட்டால், முக்கவரான கிளைகளின் நடுவே கட்டிவைத்து, நீற்றினைத் தலையிலே பெய்து தண்டனை விதிக்கும் வழக்கம் இப்பாட்டிலே சொல்லப்பட்டது. அதனால், அவன் குற்றம் ஊரறிந்த பழியுடையதாக, வேறு எவரும் அவனோடு உறவு கொள்ளாதவராகிப் போக, அவனும் மானம்கெட்டுப் பழியுடையவனாவான். பலருக்கும் அது எச்சரிக்கையாகவும் இருக்கும்.” (அகநானூறு, பாரி நிலையம், ஆறாம்பதிப்பு, 1999).

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com